கேவலம்.. திருமணத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளக் கூடாதா?.. தமிழா தமிழாவில் பளார்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தமிழா தமிழா. வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. வாரா வாரம் பலவகையான தலைப்புகளை மையக் கருத்துகளாக கொண்டு அதில் சம்பந்தப்பட்ட பொதுமக்களை இரு தரப்பினராக அமரவைத்து நடைபெறும் ஒரு ஆரோக்கியமான விவாத நிகழ்ச்சி இது. இதில் கடந்த வாரம் பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் கலந்து கொண்டு பேசியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வை மாற்றுத்திறனாளி பேசும்போது பல அதிர்ச்சிகரமான தகவலைப் பகிர்ந்து கொண்டார். அதாவது, " இப்போது நவீன தீண்டாமை உள்ளது. நாங்கள் ஒரு வீட்டில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டில் ஒரு குடும்பத்தினர் குடியிருந்தனர். அவர்கள் எங்கள் முகத்தில் முழிக்க கூடாது எனக் கூறுவார்கள். அதாவது கண் பார்வையற்றவர்கள் முகத்தில் காலையில் முழிக்க கூடாது எனக் கூறுகிறார்கள். எங்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போனால் காரியம் விளங்காது என்பார்கள்.

அதேபோல் இன்னொரு விஷயம் என்னவென்றால், என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர், சின்ன வயதில் இருந்தே அவரை எனக்கு நன்றாகத் தெரியும். நிறைய விஷயங்கள் நாங்கள் பரிமாறிக் கொள்வோம். அவரது கடையில் போய் நின்றுகொண்டு அதிகம் அறிவு சார்ந்த பல விஷயங்களைப் பேசுவோம். அவரது சொந்த தம்பிக்கு திருமணம். ஏரியாவில் உள்ள அனைவருக்கும் பத்திரிகை வைத்துவிட்டார். எனது பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வரை பத்திரிகை வைத்துவிட்டார். ஆனால் எனக்கு வைக்கவில்லை. அவர் மறந்திருப்பார் என நான் நினைத்துக் கொண்டு இருந்தேன்.
நவீன தீண்டாமை: ஆனால், எனக்கு ஏன் பத்திரிகை வைக்கவில்லை என ஒருவர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதிலை நான் நடந்து போகும்போது கேட்டுவிட்டேன். அதாவது, "கண்ணு தெரியாதவனை கல்யாணத்துக்கு கூப்பிட்டு, மணமக்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது" என அவர் பதில் அளித்தார். அவர் இவ்வாறு கூறியது எனக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது" எனக் கூறினார். அவர் இவ்வாறு கூறியது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
கேவலமான சிந்தனை: இது தொடர்பாக தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆவுடையப்பன் முதலில் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் இது குறித்து அவர் பேசும்போது, கல்யாண வீட்டிற்கு மாற்றுத் திறனாளியை கூப்பிட்டால் தம்பதிகளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன ஆவது என நினைப்பது என்பது, இருப்பதிலேயே மோசமான, கேவலமான சிந்தனை இருக்கும் என்றால் அது இதுபோன்ற சிந்தனையாகத்தான் இருக்கும். இன்றைக்கு இவ்வளவு வளர்ந்துவிட்டோம் படித்து விட்டோம், நாகரீகம் அடைந்துவிட்டோம் எனக் கூறுகிறோம்.
சீழ் பிடித்த மனநிலை: படித்த நமக்கே இவ்வளவு கேவலமான சிந்தனை இருக்கிறது என்றால், படித்து என்ன பிரயோஜனம்? இதைச் செயதது யார் எனத் தெரியவில்லை. இதைச் செய்தவர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால், நீங்கள் கொண்டிருக்கும் மனநிலை கீழ்த்தரமான சீழ் பிடித்த மனநிலை, தயவு செய்து அதை மாற்றிக் கொள்ளுங்கள்" எனக் கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











