காதலை கொண்டாடிய 90ஸ்... இதயம் முரளி முதல் விஜய் வரை.. பார்க்க பார்க்க பிடிக்கும்
சென்னை: தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான காதலை ரசிகர்கள் பார்த்து ரசித்து சில்லறையை சிதறவிட்டுள்ளனர். இதுபோன்று ஒரு பெண் நம் வாழ்வில் கிடைத்தால் நன்றாக இருக்கும் என யோசித்து காலத்தை வீணடித்தவர்களும் உண்டும். கட்டுனா நக்மா, மீனா, அமலா போன்று இருக்கும் பெண்ணை தான் காதலித்து திருமணம் செய்வோம் என்று சங்கம் வைத்து காதலித்தவர்கள் ஏராளம். காதலுக்கு அடிப்படையான விசயம் அன்பு இது மட்டும் மாறவே இல்லை.
காதல்: சங்க காலம் தொட்டு திரைப்படங்கள் உருவான காலம் வரை காதல் என்றால் எல்லாருக்கும் பொதுவுடைமையான சொல்லாக இருக்கிறது. காதல் படங்கள், காதல் உறவை பற்றி பேசினால் சலிக்கவே சலிக்காது. தமிழ் சினிமாவில் காதலை வைத்து பல படைப்புகள் வந்து கொண்டாடப்பட்டுள்ளன. அதில், சொல்லாத காதல், கடிதம் மூலம் காதல், தொலைபேசியின் மூலம் காதல், ஒருதலை காதல் என எண்ணற்ற படங்கள் வந்துள்ளன. ஆனால், 90களில் வந்த காதல் படங்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

90ஸ் கவர்ந்த படங்கள்: 90களில் வந்த படங்களின் தலைப்புகளில் காதல் இல்லாத வார்த்தைகளே இல்லை. காதல் கோட்டை, காதலா காதலா, காதலுக்கு மரியாதை, காதலே நிம்மதி, லவ் டுடே, காதலர் தினம், காதலுடன், காலமெல்லாம் காதல் வாழ்க என வெளிவந்தன. இளைஞர்களை கவரும் சொல்லாகவும், காதலை மையப்படுத்தி எத்தனை படங்கள் வந்தாலும், அதில் காதல் இருந்தால் அப்படம் வெற்றி தான். இப்படங்களில் இடம்பெற்ற பாடல்களை கேட்டு கவிதை எழுத தொடங்கி உள்ளனர்.
முகம் பார்க்காமலேயே காதல்: இன்றைய காலத்தில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் பழகி பேசி முகம் பார்த்து நேசிக்க தொடங்கி அது காதலாக மாறுகிறது. ஆனால், 90களில் கடிதங்களின் மூலம் காதலை தூது அனுப்பியவர்கள் ஏராளம். குறிப்பாக பார்க்காமலேயே காதல் என யாரும் நம்ப முடியாத ஒரு சப்ஜெக்டை எடுத்து மிக எதார்த்தமாக பதிவு செய்து தமிழில் முதல் தேசிய விருது வென்ற படம் காதல் கோட்டை. இப்படத்தினை அகத்தியன் இயக்கியிருப்பார். காதல் கோட்டை எத்தனை இளைஞர்களின் இதயத்தை கோட்டையாக மாற்றியுள்ளது வார்த்தைகளால் சொல்ல முடியாது.

இதயம் முரளி: காதலர் தினம் படத்தை இயக்கிய கதிர் இப்படத்தை இயக்கியிருப்பார். இளையராஜா இசை, முரளியின் நடிப்பு, நடிகை ஹீராவின் அழகு முகம் என படம் முழுக்க காதலாகவே நிரம்பியிருக்கும். நாயகன் முரளிக்கு ஒரு பெண்ணை பார்த்ததும் காதல் வருகிறது. அந்த பெண்ணிடம் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார். எங்கு அவளிடம் காதலை சொன்னால் ஏற்க முடியாமல் போய்விடுவாளோ என்ற அச்சத்தில் சொல்ல தயங்குகிறார். சென்னைக்கு மருத்துவம் படிக்க வந்த கிராமத்து இளைஞன் ஒரு பெண்ணை காதலித்து அவளுக்காக கவிதை எழுதி உருகி காதலை சொல்ல முடியாமல் இதய நோயுடன் மீண்டும் கிராமத்துக்கே திரும்புகிறார். இன்று வரை இதயம் முரளி ரசிகர்களின் ஃபேவரைட் ஆக மாறியுள்ளது.

பூவே உனக்காக: நடிகர் விஜய்க்கு பெண் ரசிகர்களையும், குடும்ப ரசிகர்களை பெற்று தந்த படம் பூவே உனக்காக. ஒரு செடியில் ஒரு பூ தான் பூக்கும் என்ற வசனங்களும் மிகவும் பிரபலமானது. இதை வைத்து பல காமெடி சீன்களும் உருவாகியுள்ளன. இப்படத்தில் தான் காதலிக்கும் பெண் தன்னை காதலிக்கவில்லை என தெரிந்தும் அந்த பெண்ணின் காதலை சேர்த்து வைக்க முயலும் இளைஞரின் கதை. இதில், நம்பியார், நாகேஷ், சார்லி, சங்கீதா என நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். மனதில் நின்ற காதலியே என்ற பாடல் ஒலிக்கும்போது விஜய் பையுடன் வீட்டை விட்டு கிளம்பும்போது ரசிகர்களின் கண்கள் கண்ணீரில் குளமாய் இருக்கும்.

டெலிபோன் காதல்: இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் இருந்தாலும், டெலிபோனில் பேசி காதல் பன்ற மாதிரி வருமா. ஹீரோயின் கவுசல்யாவுக்குத் தான் காதலிக்கும் ஹீரோ முரளியைத் தெரியும். ஹீரோ அடிக்கடி போனில் இவர் குரலைக் கேட்டுத் தவிப்பதோடு சரி. அந்தக் குரல் என்னை உருக வைக்கிறது என முரளி கூறுகிறார். முரளியின் மூச்சு அடங்குகிற அளவுக்கு நிலைமை முற்றிவிட்ட பிறகு மறைந்து மறைந்து வேடிக்கை பார்த்த கவுசல்யா கடைசியாக வந்து காப்பாற்றுகிறார். இப்படம் இன்றும் இளைஞர்களுக்கு பிடித்த காதல் படங்களில் ஒன்று. இதுமாதிரி அனுபவம் உங்களுக்கும் இருந்தால் அனுபவியுங்கள்.


Click it and Unblock the Notifications