மம்மூட்டிக்கு போன கதை.. ஷூட்டிங் ஸ்பாட்டில் வேட்டியை மடித்து சண்டையில் இறங்கிய விஜயகாந்த்
சென்னை: ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜயகாந்த் வேட்டியை மடித்து சண்டையில் இறங்கியது குறித்த ஒரு குட்டி ப்ளாஷ்பேக்
ரஜினிகாந்த், கமல் ஹாசனின் கொடி கோலிவுட்டில் உயர பறந்துகொண்டிருந்த நேரத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர் விஜயகாந்த். மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு கிளம்பி சென்னையில் இறங்கியவருக்கு உடனே எந்த வாய்ப்பும் கிடைத்துவிடவில்லை. அவரும் அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தனர். ஒருவழியாக விஜயகாந்த்துக்கு வாய்ப்புகள் கிடைத்து அவர் நடித்த படங்கள் ஹிட்டாக தமிழின் முன்னணி ஹீரோவாகிவிட்டார் விஜயகாந்த்.

அனைவருக்கும் உதவிய விஜயகாந்த்தும், ராவுத்தரும்
சினிமாவில் உச்சம் சென்றாலும் வந்த வழியையும், பட்ட வலியையும் மறக்காமல் இருந்தால் எவ்வளவு மதிப்பு கிடைக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர்கள் விஜயகாந்த்தும், அவரது உற்ற நண்பருமான இப்ராஹிம் ராவுத்தரும். நாம் வளர்ந்துவிட்டோம் அது போதும் என்பதோடு நிற்காமல் மற்றவர்களையும் வளர்த்துவிட்டவர்கள். ராவுத்தர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி புதிய இயக்குநர்களுக்கு வாய்புகளையும் வழங்கியவர்கள். முக்கியமாக ராவுத்தர் பிலிம்ஸில் எந்நேரமும் சாப்பாடு இருக்கும். அங்கு யார் வேண்டுமானாலும் சென்று இலவசமாக சாப்பிட்டுவிட்டு வரலாம். இதனை பல சீனியர் சினிமாக்காரர்கள் இன்னமும் சொல்லி நெகிழ்ந்துவருகிறார்கள்.

ராவுத்தர் பிலிம்ஸில் மனோபாலா
ராவுத்தர் பிலிம்ஸ் ஆரம்பிக்கப்பட்டு புலன் விசாரணை உள்ளிட்ட படங்கள் தயாரிக்கப்பட்டன. அப்படி அந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட்டாகின. வரிசையாக ஹிட்டானதும் ரஜினி, கமலுக்கு இணையாக விஜயகாந்த்தும் வளர்ந்துவிட்டார். இதனால் விஜயகாந்த்திடம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு டேட்கள் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் ராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் ஐந்து படங்கள் தயாரிக்க ராவுத்தர் திட்டமிட்டிருக்கிறார். எனவே மனோபாலவை அழைத்து ஐந்து படங்கள் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். எனவே அதில் நீங்கள் ஒரு படம் பண்ணுங்கள். ஆனால் விஜயகாந்த்திடம் டேட்கள் இல்லை எனவே வேறு ஒரு நடிகை அதில் நடிக்க வைக்கலாம் என ராவுத்தர் கூறியிருக்கிறார்.

மம்மூட்டிக்காக எழுதப்பட்ட கதை
இதனையடுத்து மனோபாலாவும் அவரது நண்பர் பி.எஸ். மாதவனும் இணைந்து ஒரு கதையை தயார் செய்திருக்கின்றனர். அதாவது, சவப்பெட்டி செய்யும் கிறிஸ்தவ ஹீரோ மற்றும் அவரது தாய் ஆகியோரை பிரதான கதாபாத்திரங்களாக வைத்துக்கொண்டு காதலை சேர்த்துவைக்கும்படி ஒரு மென்மையான கதையை செய்திருக்கின்றனர். இந்தக் கதையில் மம்மூட்டி நடித்தால் நன்றாக இருக்கும் என மனோபாலா கூற அவருக்கும், மாதவனுக்கு ரயில் டிக்கெட் புக் செய்து மம்மூட்டியை பார்க்க அனுப்பிவைத்திருக்கிறார் ராவுத்தர். திருவனந்தபுரத்தில் மம்மூட்டியை சந்தித்து மனோபாலா கதை சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட மம்மூட்டியும் படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட மற்ற பணிகளையும் ஆரம்பித்திருக்கின்றனர்.

மாற்றப்பட்ட திட்டம்
இப்படிப்பட்ட சூழலில் திடீரென ஒருநாள் மனோபாலாவை அழைத்து இந்தக் கதையில் விஜயகாந்த்தே நடிக்கட்டும்; அவரிடம் எப்படியாவது நான் தேதியை வாங்கி கொடுத்துவிடுகிறேன் என ராவ்த்தர் கூறியிருக்கிறார். ஆனால் இந்தக் கதை எப்படி விஜயகாந்த்துக்கு ஒத்து வரும் என மனோபாலா கேட்க; அதெல்லாம் ஒத்துவரும் என ராவுத்தர் கூற; வேறு வழியின்றி மனோபாலாவும் ஒப்புக்கொண்டு கதையில் சிறிய சிறிய மாற்றங்களை செய்துள்ளார்.

நாகர்கோவிலில் உருவான பிரச்னை
ஒருவழியாக எல்லாம் இறுதி செய்யப்பட்டு நாகர்கோவில் அருகே படத்தின் ஷூட்டிங் நடந்திருக்கிறது. ஷூட்டிங் நடந்த இடத்தில் இடையில் ஒரு ஆறு இருந்திருக்கிறது. ஆற்றுக்கு ஒரு பக்கம் கிறிஸ்தவர்களும், மறுபக்கம் குறிப்பிட்ட சமுதாயத்தினரும் இருந்திருக்கின்றனர். ஷூட்டிங் நடந்ததோ குறிப்பிட்ட சமுதாயத்தின் இடத்தில். இதனைக் கண்ட கிறிஸ்தவர்கள் எங்கள் ச்ம்பந்தப்பட்ட கதையை எப்படி நீங்கள் அங்கு எடுக்கலாம் என கேட்க, எங்கள் இடத்தில் ஷூட்டிங் நடத்துபவர்களை பத்திரமாக நாங்கள் அனுப்பி வைப்போம். இங்கு ஷூட்டிங் நடந்தால் கேட்பதற்கு நீங்கள் யார் என இவர்கள் கேட்க அந்த இடமே போர்க்களமாக மாறும் சூழல் உருவாகியிருக்கிறது.

களத்தில் குதித்த விஜயகாந்த்
நிலைமை கைமீறி போவதை உணர்ந்துகொண்ட விஜயகாந்த் காரிலிருந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்திருக்கிறார். ஆனால் சமாதானம் ஆகவே இல்லையாம். இதனையடுத்து கோபத்தின் உச்சத்துக்கு சென்ற விஜய்காந்த் மாறி மாறி கத்திக்கொண்டிருந்தவர்களிடம், 'டேய் நான்தான் பேசிட்டு இருக்கேன்ல ஏன் நீ ஏன் இடையில கத்துற' என தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தவர்களிடம் வேட்டியை மடித்துக்கொண்டு சத்தத்துடன் கேட்டாராம். விஜயகாந்த் கோபப்பட்டதை பார்த்த பிறகுதான் இரண்டு தரப்பினரும் சமாதானம் ஆனார்களாம். அதன் பிறகு அங்கிருந்து கிளம்பி படத்தின் ஷூட்டிங் முட்டத்திலும், சென்னையிலும் நடந்திருக்கிறது.

திருப்தி ஆகாத மனோபாலா; மெகா ஹிட்டான படம்
ஒருவழியாக படத்தின் ஷூட்டிங் முடிந்து படத்தை பார்த்த பிறகு இயக்குநர் மனோபாலாவுக்கு பெரிய அளவில் திருப்தி இல்லையாம். இதனையடுத்து லியாகத் அலிகான் கொடுத்த ஆலோசனையின் பெயரில் படத்தின் க்ளைமேக்ஸ் மற்றும் சில சீன்களில் திருத்தம் செய்யப்பட்டு படம் வெளியாகியிருக்கிறது. ஆனால் படம் யாரும் எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. ஒன்றுக்கு மூன்று மடங்கு லாபம் ராவுத்தர் பிலிம்ஸுக்கு கிடைத்திருக்கிறது.
அந்தப் படம்தான் மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும். இதனை மனோபாலா தனது யூட்யூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











