ஃபோன் செய்த ஆர்த்தி.. தயவு செஞ்சு பண்ணாத.. செம கடுப்படித்த ரவி மோகன்.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: ஆர்த்தியை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் ரவி மோகன். இரண்டு பேரும் காதலின் அடையாளமாக வாழ்ந்துவந்த சூழலில் அவரை பிரிவதாக ரவி கடந்த வருடம் அறிவித்தார். அவரது அந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தப் பிரிவுக்கு காரணம் கெனிஷாவுடனான தொடர்புதான் என்று பலரும் கிசுகிசுத்த சூழலில்; அதனை ரவியும் உறுதி செய்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க நேற்று ஆர்த்தி தனது அடுத்த அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பல விஷயங்களை அவர் ஓபனாக பேசியிருந்தார்.
ரவி மோகன் தமிழ் சினிமாவில் எந்தவிதமான சர்ச்சைகள், விமர்சனங்களிலும் சிக்காமல் இருந்தவர். ஆனால் கடந்த வருடத்திலிருந்து அவரை சுற்றி பெரிய சர்ச்சை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அவர் அறிவித்து நீதிமன்றத்திலும் விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில் இதுவரை தீர்ப்பு வராத நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு தன்னுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட கெனிஷா பிரான்சிஸுடன் வந்தார். அதனையடுத்து ரவி - ஆர்த்தி - கெனிஷா விவகாரம் மீண்டும் பெரிய பேசுபொருளானது.
ஆர்த்தி மற்றும் ரவியின் அறிக்கை: கெனிஷாவுடன் திருமணத்துக்கு ரவி வந்ததை பார்த்த ஆர்த்தி உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ரவி குறித்தும் தனது காதல் வாழ்க்கை மற்றும் மகன்கள் குறித்தும் ரொம்பவே எமோஷனலாக பேசியிருந்தார். அதற்கு பிறகு ஆர்த்திக்கு திரைத்துறையிலும், ரசிகர்களிடையேயும் ஆதரவு அலை பெருக தொடங்கியது. சூழல் இப்படி இருக்க ரவி மோகனும் தனது பங்குக்கு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், 'தனது குழந்தைக்கு நடந்த விபத்தை மறைத்துவிட்டார்கள். தந்தை, தாய்க்கு பணம் கொடுக்கக்கூட அனுமதிக்கவில்லை. பல நூறு கோடி ரூபாய் கடனுக்கு என்னை பொறுப்பேற்க வைத்தார்கள்' என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

சுஜாதாவின் விளக்கம்: அவரது அறிக்கையில் மட்டுமின்றி இந்தப் பிரச்னை ஆரம்பத்திலிருந்தே ஆர்த்தியின் தாய் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. நிலைமை கைமீறி போவதை உணர்ந்த ஆர்த்தியின் அம்மா சுஜாதா ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அந்த விளக்கத்தில், 'ரவியை நான் ஹீரோவாக, மாப்பிள்ளையாக மட்டும் பார்க்கவில்லை. ஒரு மகனாக பார்க்கிறேன். அவர் எனது மகளுடன் இணைந்து வாழ வேண்டும். அழகாக ஒரு வாழ்ந்த ஒரு மகள் இப்போது வாழாவெட்டியாக இருப்பதை பார்க்க்கும் வலி ஒரு தாய்க்கு மட்டும்தான் தெரியும். நான் ரவியை பல நூறு கோடி ரூபாய் கடனுக்கு பொறுப்பேற்க வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். ஒரு ரூபாய் கடனுக்காகவாவது அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். நான் கொடுமைக்கார மாமியார் கிடையாது' என்று தெரிவித்திருந்தார்.
உறுதியாக இருக்கும் ரவி மோகன்: இப்படி ஆர்த்தியும் அவரது தாயும் தங்கள் தரப்பு விளக்கத்தை கொடுத்துவருகிறார்கள். ஆனால் ஆர்த்தியுடன் இனி இணைந்து வாழப்போவதில்லை என்பதில் மிக மிக உறுதியாக இருக்கிறார் ரவி. இதற்கிடையே கெனிஷா கொடுத்த ஒரு பேட்டியில் நான் எனது சோல் மேட்டை கண்டுபிடித்துவிட்டேன். அவர் பாதுகாப்பாக உணர வைக்கிறார் என தெரிவித்திருந்தார். எனவே இரண்டு பேருக்குமான திருமணம் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் ரவி மோகனின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன வீடியோ?: அதாவது சில வருடங்களுக்கு முன்பு புதுயுகம் என்ற சேனலில் நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ரவி. அப்போது அவர் பேசுகையில், "பேராண்மை பட சமயத்தில் நான் தீவிரமாக டயட் இருந்தேன். அப்படி இருந்ததால் எப்போதும் பசித்துக்கொண்டே இருக்கும். குடிப்பதற்கு தண்ணீர்கூட ஒரு மூடியில்தான் கொடுப்பார்கள். தீவிர பசியின் காரணமாக நான் எல்லோரிடமும் கடுப்படித்துக்கொண்டே இருப்பேன். நான் சாப்பிடாமல் இருந்ததை பார்த்து எனது அம்மாவோ, ரசம் சாதம் தரவா; அந்த சாதம் தரவா என்று கேட்பார். நானோ கோபத்தில், 'அய்யோ நான் சோறே சாப்பிடக்கூடாது. சாவடிக்காதீங்க' என்று கடுப்படிப்பேன்.
ஆர்த்தியின் ஃபோன் கால்: அப்படித்தான் ஒரு முறை பேராண்மை ஷூட்டிங்கிற்காக கேரளாவில் இருந்தேன். அந்த சமயத்தில் ஆர்த்தியும் நானும் காதலித்துக்கொண்டிருந்தோம். அப்போது அவர் எனக்கு ஃபோன் செய்தார். உடனே நான், 'தயவு செய்து எனக்கு ஃபோன் செய்யாத. மூன்று நாட்களுக்கு நான் தண்ணீரே குடிக்கக்கூடாது. எனக்கு தண்ணீர்கூட கொடுக்கமாட்டாங்க. ப்ளீஸ் கால் பண்ணாத' என்று கடுப்படிப்பேன். டயட் இல்லாத நேரத்தில் நான் சூப்பராக இருப்பேன். அப்பா, அம்மாதான் தெய்வம். எனது மனைவிதான் உலகம் என்று இருப்பேன்" என கூறினார். அவரது இந்த வீடியோ திடீரென இப்போது ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ இவ்வளவு ஜாலியாக, கேஷுவலாக பேசியிருக்கிறார். ஆர்த்தியுடனும் நல்லவிதமாகத்தான் இருந்திருக்கிறார். பிறகு ஏன் இத்தனை வருடங்கள் கழித்து இப்படி ஒரு முடிவில் ரவி உறுதியாக இருக்கிறார் என்ற கேள்வியையும் முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆர்த்தியின் இறுதி அறிக்கை: இதற்கிடையே ஆர்த்தி நேற்று தனது இறுதி அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், "கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ள இந்தக் காலத்தில் என்னைச் சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகள் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படிச் செய்துவிட்டது. ஒரு முறை கடைசியாக அனைவருக்கும் உண்மையைச் சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல.
அவர்தான் காரணம்: எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம். எங்களைப் பிரித்தது எங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல. வெளியில் இருந்து வந்த ஒருவர் தான். "உங்கள் வாழ்வின் ஒளி" என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளைக் கொண்டு வந்தார் என்பதே உண்மை. இந்த நபர், சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே எங்கள் வாழ்கையில் வந்துவிட்டார். இதை ஒரு வெற்று குற்றச்சாட்டாக அல்ல மாறாக போதுமான ஆதாரங்களுடன் தான் கூறுகின்றேன்.
அந்தப் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது: எனக்குக் 'கட்டுபடுத்திய மனைவி' என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.என் கணவரை அன்புடன் பராமரித்து, அவருக்குக் கேடு தரும் தீய பழக்கவழக்கங்களிலிருந்தும் எங்கள் வீட்டின் உறுதியை சீர்குலைக்கும் விஷயங்களிலிருந்தும் அவரைப் பாதுகாத்துக் கட்டுப்படுத்தியது என் குற்றம் என்றால், அப்படியே இருக்கட்டும். எந்த ஒரு உண்மையான மனைவியும் தன் கணவரின் நலனுக்காக எதைச் செய்வாரோ நானும் அதைத்தான் செய்தேன். ஆனால் அப்படி நடந்து கொள்ளாத பெண்களுக்கு இந்த சமுதாயம் சுமத்தும் அனைத்து கொடூரமான பட்டங்களையும் கணவரின் நலனை காப்பாற்றியும் நான் சுமக்கிறேன்.

காரில்தான் சென்றார்: தனது சொத்துகளை, கெளரவத்தை இழந்து வெறும் காலோடு ஒன்றும் அவர் வீட்டை விட்டு வெளியேறிப் போகவில்லை.நன்றாக முன் கூட்டியே மிகத் தெளிவாகத் திட்டமிட்டு விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து, தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரில்தான் வீட்டை விட்டுச் சென்றார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் அமைதியாகவும், மிகுந்த நிதானத்தோடும் திட்டமிட்டு தான் வீட்டை விட்டு வெளியேறினார்.
உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பிச் செல்ல நினைத்திருந்தால், நேராக அவர் அடிக்கடி "தொலைத்த பெற்றோர்கள்"என்று குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு, எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை ஏன் தட்டினார்? திட்டமிட்டு நடந்த இந்த சதியை தற்காப்பு நடவடிக்கையாக யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம். துன்புறுத்தப்பட்டதாக, தனிமைப்படுத்தப்பட்டதாகப் புகார் கூறுகிறார், அப்படியானால், ஏன் இத்தனை ஆண்டுகள் வரை காத்திருந்தார்? ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளைக் கொண்டாடினார்? ஏன் குடும்ப விழாக்களில் கலந்துகொண்டார்? வாழக்கூடாத சூழ்நிலையில் எதற்காக இத்தனை வருடங்கள் வாழ்ந்தார்? அவருக்கு உரிமையுள்ள அனைத்தையும் நன்றாக அனுபவித்துவிட்டு தனது குட்டு வெளிப்பட்டு தன் மீது குற்றம் சுமத்தப்படும் என்ற நிலையில்தான் வீட்டை விட்டு வெளியேறினார்" என பல விஷயங்களை குறிப்பிட்டு பரபரப்பை கூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











