நான்லாம் உன்னை மதிக்கலாமா?. மறக்க கத்துக்கோ.. நீ பெரிய நடிகன்.. பிரபலத்துக்கு நாகேஷ் சொன்ன அட்வைஸ்
சென்னை: நடிகர் நாகேஷ் இந்திய சினிமாவில் தவிர்க்கவே முடியாதவர். உடல்மொழி, பேசும் மொழி என அனைத்திலும் காமெடியையும், பல உணர்வுகளையும் கலந்துகட்டி அடிப்பவர். இன்றுவரை எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் அவரது இடத்தை நெருங்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை. இந்தச் சூழலில் பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான இளவரசுக்கு நாகேஷ் செய்த அட்வைஸ் குறித்து இதில் பார்க்கலாம்.
இந்திய திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் நாகேஷின் இடம் தனித்துவமானது. தனது அபாரமான நடிப்பின் காரணமாக தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துவிட்டு சென்றிருக்கும் அவர் முதலில் அரசாங்க வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். ஆனால் நடிப்பின் மீது தீராத ஆர்வம் இருந்ததன் காரணமாக அந்த வேலையை துச்சமாக உதறிவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார். சென்னை வந்த அவர் நாடக கம்பெனியில் சேர்ந்து தனது திறமையை படிப்படியாக வளர்க்க ஆரம்பித்தார்.
சினிமா வாய்ப்பு: அதன்படி அவர் மனமுள்ள மறுதாரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் தோல்வியடைந்தது. தொடர்ந்து நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவுக்கு அவருக்கு பெயரை பெற்றுக்கொடுத்தது. அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது கே.பாலசந்தர் எழுதிய நாடகத்தை மையமாக வைத்து கிருஷ்ணன் -பஞ்சு இயக்கிய சர்வர் சுந்தரம் திரைப்படம்.

பட்டையை கிளப்பிய நாகேஷ்: அந்தத் திரைப்படத்தில் நாகேஷின் உடல்மொழியும், நடிப்பும் வேறு தளத்தில் இருந்தன. அப்படத்தில் ஹோட்டல் காட்சிகள் மட்டுமின்றி அனைத்து காட்சிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி பாலசந்தர் மட்டுமின்றி பலரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் காரணமாக பாலசந்தரின் குட் புக்கில் இடம்பிடித்தார் அவர். சர்வர் சுந்தரம் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தவருக்கு திருவிளையாடல் திரைப்படம் அடுத்த திருப்புமுனையாக அமைந்தது.
தருமி நாகேஷ்: அதில் சிவாஜி கணேசனுக்கு போட்டியாக தருமி என்ற கேரக்டரில் நடித்து அப்ளாஸை அள்ளினார். சிவாஜி கணேசன் நாகேஷிடம் கவிதை சொல்லும் சீனில் எல்லாம் நாகேஷ் செய்த சம்பவம் தரமானது. தொடர்ந்து அவர் நடித்த நீர்க்குமிழி, காதலிக்க நேரமில்லை, பட்டினத்தில் பூதம், தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட பல படங்கள் மெகா ஹிட்டடித்தன. நாகேஷின் நடிப்பும் உச்சம் சென்றது.
1000 படங்கள்: நாகேஷ் கிட்டத்தட்ட 1000 படங்கள்வரை நடித்திருக்கிறார். காமெடியன், கேரக்டர் ரோல், வில்லன் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் புகுந்து விளையாடக்கூடியவர் நாகேஷ். கேரக்டர் ரோலை பொறுத்தவரை பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், நம்மவர், அவ்வை சண்முகி, பூவெல்லாம் உன்வாசம், பூவே உனக்காக என முத்திரை பதித்த ரோல்கள் ஏராளமானவற்றை அவர் ஏற்றிருக்கிறார். இன்றுவரை யார் காமெடி செய்தாலும் அதில் நாகேஷின் உடல்மொழி கொஞ்சமேனும் வந்துவிடும்.
இளவரசுக்கு சொன்ன அட்வைஸ்: இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான இளவரசுக்கு நாகேஷ் செய்த அட்வைஸ் குறித்து காணலாம். அதாவது ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் நாகேஷிடம் சென்ற இளவரசு, 'இறந்தகால நினைவுகள்தான் எதிர்காலத்துக்கான முதலீடு' என்று ஒன்று படித்தேன். அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டாராம். அதற்கு சிகரெட் புகைத்தபடியே பேச ஆரம்பித்த நாகேஷோ, 'இல்லை இது தவறு. திருவிளையாடல் தருமி, தில்லானா மோகனாம்பாள் வைத்தி போன்ற கேரக்டர்கள் எல்லாம் என்னை எங்கேயோ கொண்டு போயின. அதெல்லாம் இறந்த காலம். இப்போதெல்லாம் எனக்கு வேலையே இல்லை. ஆனால் நீயோ மாதத்துக்கு 15 நாட்களாவது ஷூட்டிங் சென்றுவிடுகிறாய். இப்போதைக்கு நீதான் என்னைவிட பெரிய நடிகன். அப்படி இருக்கையில் நான் அப்போது பெரிய நடிகனாக இருந்தேன் என்ற நினைப்பில் இருந்தால் உன்னை மதித்து நான் பேசுவேனா?.. அதனால் எதுவாக இருந்தாலும் மறக்க கத்துக்கோ. இறந்தகாலத்தை ஏன் பார்க்குற. அதுதான் இறந்துவிட்டதே" என்றாராம்.


Click it and Unblock the Notifications











