Throw Back: ஜெயலலிதா மாறவே இல்லை.. நெகிழ்ச்சியுடன் பேசிய கமல் ஹாசன்
சென்னை: நடிகர் கமல் ஹாசன் ஜெயலலிதாவுடனான தனது அனுபவம் குறித்து பேசியது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
நடிகையும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஜெயலலிதா அரசியலில் மிகப்பெரிய ஆளுமை. எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவை கட்டுப்பாட்டோடு வைத்திருந்தார். அதனால் இப்போதும் ஜெயலலிதாவின் மரணத்தை அதிமுகவை தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று அவரது 75ஆவது பிறந்தநாள் ஆகும்.

ரஜினிகாந்த்தின் வாழ்த்து
ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "ஜெயலலிதாபோல் இன்னொரு பெண்ணை பார்க்க முடியாது. அவரது அழகு, கம்பீரம், ஆளுமை, துணிச்சல் யாருக்கும் வராது. ஜெயலலிதா கருணை உள்ளம் கொண்டவர். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு தனி பெண்ணாக பிளவுப்பட்ட கட்சியை ஒன்றாக்கி மேலும் பலமாக்கி தமிழ்நாட்டை ஆண்டவர். அதனால்தான் அவருக்கு புரட்சித் தலைவி என்று பட்டம் கிடைத்தது" என குறிப்பிட்டிருந்தார்.

ஜெயலலிதாவுடனான அனுபவத்தை பகிர்ந்த கமல் ஹாசன்
இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் ஜெயலலிதாவுடனான தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசிய அவர், "ஜெயலலிதாவுடன் தொழில்நுட்ப கலைஞராக பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவருடன் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருக்கிறேன். உன்னைச் சுற்றி உலகம் என்கிற ஒரு படம். அது எக்காரணத்தினாலோ பாதியில் நின்றுபோனது. மற்றொரு படம் அன்புத் தங்கை. அதில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன். அதுவும் அகஸ்மாத்தாக கிடைத்த வாய்ப்புதான்.

முதல் முதலாக ஜெயலலிதாவை பார்த்த அனுபவம்
முதன் முதலில் பாலாஜி சார் வீட்டில் தான் அவரை சந்தித்தேன். ஆனந்தவிகடன் பேட்டி ஒன்றுக்காக, பாடத் தெரிந்த குழந்தைகளை வரவழைத்தார். பாலமுரளியின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் பாடிய ஒரு நாள் போதுமா பாடலை அப்போது நான் நன்றாக பாடுவேன். அப்போ எனக்கு 13 வயது இருக்கும். அந்த பாடலை நான் பாடியபோது, ஜெயலலிதா அதை கேட்டுக்கொண்டிருந்தார். அந்த போட்டோவை நீண்ட நாட்கள் வைத்திருந்தேன். அந்த சமயத்தில்தான் , ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்திருந்தேன். அப்போது நேரில் ஜெயலலிதாவை பார்த்த போது, எனக்கு பாடல் வரிகள் எல்லாம் மறந்துவிட்டது. அவர்களை அப்படி ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போதிருந்து இப்போதுவரை ஜெயலலிதா மாறவில்லை
அதன் பின் அனாதை ஆனந்தன் படத்தில் அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு ஏவிஎம் ஸ்டூடியோவில் கிடைத்தது. இப்போது நினைத்து பார்த்தால் அதுவே பெரிய அதிர்ஷ்டம். ஆனால், எனக்கு தனியாக ஒரு உருவம் தெரியவில்லை. அன்று இருந்த அதே உருவம்தான், இன்று முதலமைச்சராகவும் இருக்கிறார். எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இதெல்லாம் அவர்களுக்கு முன்பே தெரிந்தது மாதிரிதான் அப்போதும் இருப்பார். இத்தனைக்கும் அப்போது அவங்க ரொம்ப சின்னப் பொண்ணு. ஆனால் தனியாகத்தான் உட்கார்ந்திருப்பார்.
இன்று முதல்வராக இருக்கும் போது இருந்த அதே நடை, உடைதான் அப்போதும் இருந்தது. எப்போதும் புத்தகத்தோடுத்தான் இருப்பார். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கோடு இருக்கும். அந்தக் கோட்டை யாராலும் தாண்ட முடியாது" என்றார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி பரப்புரையில் பேசிய நடிகர் கமல் ஹாசன், 'விஸ்வரூபம் படத்தின் சமயத்தின்போது என்னை தடுமாற வைத்து ரசித்தார் ஒரு அம்மையார்' என ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications