விரக்தியின் வலி என்னனு தெரியுமா? தேம்பி தேம்பி அழுதார்.. மறைந்த மனோஜின் உருக்கமான பேட்டி!
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48. இவரது மறைவு திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த ஆண்டு மனோஜ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், நான் பல தயாரிப்பு நிறுவனத்திடம் வாய்ப்பு கேட்டு அலைந்து இருக்கிறேன் யாரும் என்னை நம்பவில்லை. விரக்தியின் வலி என்னனு தெரியுமா? பேசி இருந்தார்.
மனோஜ் பாரதிராஜா, 1999ம்ஆண்டு தாஜ்மகால் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பாக மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக பாம்பே படத்தில் பணியாற்றி இருந்தார். இவருக்கு நடிப்பைவிட இயக்கத்தின் மீது அதிக ஆர்வம் இருந்தது. இருந்த போதும், பாரதிராஜா, தன் மகன் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டதால், தாஜ்மஹால் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்ற போதும், படம் எடுபடவில்லை. இதைத்தொடர்ந்து, அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈர நிலம் ஆகிய படத்தில் ஹீரோவாக நடித்தார். பின் சினிமாவில் சில ஆண்டுகள் காணாமல்போன மனோஜ், மாநாடு, விருமன் படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் மனோஜ் மரணம்: இந்நிலையில், நடிகர் மனோஜூக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மாலை 6 மணியளவில் அவரது வீட்டில் காலமானார். ஒரு மாதத்திற்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனோஜ் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இணையத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மனோஜ் அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு என் வலி என்னவென்று தெரியாது. அவனுக்கு என்னடா பாரதிராஜா பையன். அவனுக்கு என்ன குறைச்சல் என்றுதான் சொல்வார்கள். என் இடத்தில் இருந்து பார்க்கும் போதுதான், எனக்குள் இருக்கும் வலி வேதனை தெரியும். ஜாலியாக கமெண்ட் அடித்துவிட்டு சென்றுவிடுவார்கள். அதில் இருக்கும் வலி அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். எப்பேர்பட்ட ஜாம்பவானாக இருந்தாலும் அவன் வாழ்க்கையில் கஷ்டம் இருக்கும். இதனால் நானே எனக்கு சமாதானப்படுத்திக் கொண்டு, எல்லாத்தையும் தூக்கிப்போடு, உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு வரும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்

அவ மட்டும் இல்லனா: 2005 இல் இருந்து 2012 வரை நான் வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்தேன். அந்த நேரத்தில் வருமானமே கிடையாது. அடுத்து என்ன செய்வது என்றுகூட தெரியாது. அந்த நேரத்தில் என் வாழ்க்கையில் எனக்கு உறுதுணையாக, என்னுடைய எல்லா கஷ்டத்தையும் தாங்கிக் கொண்ட எனக்கு ஆறுதலாக இருந்தது என்னுடைய மனைவியும், என்னுடைய குழந்தைகளும் தான். அவர்கள் மட்டும் இல்லை என்றால், நான் என்றைக்கோ மன அழுத்தத்திற்கு சென்று இருப்பேன்.
என் அப்பாவின் பெயர் தான் எனக்கு பாசிட்டிவான விஷயமும் நெகட்டிவான விஷயத்தையும் கொடுத்தது. மார்கழி படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது, அப்பா என்னை பார்த்து தேம்பி தேம்பி அழுதார். என்னப்பா என்ன ஆச்சு என்று கேட்டேன். அதற்கு அவர், நான் உன்னை என்னமோ நினைத்தேன். நானே உன்னை நம்பவில்லை. உன்னை நான் தான் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று வருத்தப்பட்டார் என்று மனோஜ் அந்த பேட்டியில் கூறியிருந்தார். தற்போது மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் இந்த பேட்டி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.


Click it and Unblock the Notifications











