அதெல்லாம் செட் ஆகாது.. சிவாஜியை தடுத்து நிறுத்திய பிரபு.. நந்தா படத்துக்கு இப்படி ஒரு கதையா?
சென்னை: பாலா இயக்கி சூர்யா நடித்த நந்தா படத்தில் சிவாஜி கணேசன் நடிக்காமல் போனதற்கு காரணம் நடிகர் பிரபு. அந்தக் காரணம் குறித்து பார்க்கலாம்.
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. யாரும் தொட யோசிக்கும் கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதில் நடிகர்களிடம் சிறப்பான நடிப்பை வாங்குவதில் வல்லவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை இயக்கிவருகிறார்.

சேது மூலம் கவனம் ஈர்த்த பாலா
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு சேது படத்தை இயக்கினார் பாலா. அந்தப் படம் பெரும் வெற்றி பெற்று விக்ரமுக்கும், பாலாவுக்கு வாழ்க்கை கொடுத்தாலும் அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்குள் ஏகப்பட்ட சிக்கலை சந்தித்தது. படம் ரிலீஸாவதற்கு முன்னதாக மட்டும் விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே 100 தடவை திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ஒருவழியாக படம் ரிலீஸாகி மெகா ஹிட்டாக, சேது படம் ஒரு குறிஞ்சி பூ என்றெல்லாம் விமர்சனங்கள் நல்லவிதமாக எழுந்தன. தனது நண்பரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து பாலா அந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

இரண்டாவது படத்திலும் கவனம் ஈர்த்த பாலா
ஒரு இயக்குநருக்கு முதல் படம் எவ்வளவு முக்கியமோ அதைவிட அதிகம் முக்கியம் இரண்டாவது படத்தை சிறப்பாக கொடுப்பது. அப்போதுதான் அந்த இயக்குநரால் சினிமாவில் நிலைக்க முடியும் என்பது பலரது கருத்து. எனவே சேது படத்துக்கு எடுத்துக்கொண்ட சிரத்தையைவிட இரண்டாவது படமான நந்தாவுக்கு பாலா அதிகம் எடுத்துக்கொண்டார். தமிழ்நாட்டுக்கு வரும் ஈழத்து அகதிகள், அவர்களுக்கு உதவும் ஒரு பெரியவர் மற்றும் அவருடன் இருக்கும் ஹீரோ என்பதை ஒன்லைனாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் அதுவரை பேசாத ஈழத்து அகதிகளின் வலிகளையும், வாழ்வியலையும் பேசியது. சூர்யா மிகச்சிறப்பாக அந்தப் படத்தில் நடித்து தனக்குள் இருக்கும் நடிகனை ரசிகளிடம் காண்பித்தார்.

நந்தாவில் முக்கியத்துவம் பெற்ற பெரியவர் கதாபாத்திரம்
நந்தா படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது ராஜ்கிரண் ஏற்றிருந்த பெரியவர் கதாபாத்திரம். அரசாங்கத்தை மீறி தனக்கு தோன்றும் நல்ல விஷயங்களை ஈழத்து அகதிகளுக்காக செய்யும் கதாபாத்திரமாக வடிவமைத்திருப்பார். அதுமட்டுமின்றி கதாநாயகனை வழிநடத்தும் கதாபாத்திரமாகவும் அந்தக் கதாபாத்திரம் இருக்கும். அதனை உணர்ந்து ராஜ்கிரண் மிக அருமையாக நடித்திருப்பார். குறிப்பாக, சூர்யாவை அமரவைத்து, ‘அநியாயம் என்று உனக்கு எது எல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் தட்டி கேள். நீ ஒரு அவதாரம்' என பெரியவர் கூறும் காட்சியை இன்றும் பலர் ரசிக்கின்ற்னர்.

பெரியவராக முதலில் நடிக்க வேண்டியவர் சிவாஜி கணேசன்
இப்படி பல காட்சிகள் கூஸ்பம்பஸ் உருவாகும் வகையில் பெரியவர் கதாபாத்திரத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும். அதனை சிறப்பாக செய்திருப்பார் ராஜ்கிரண். ஆனால் இந்தக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அன்னை இல்லத்தில் நந்தா கதையை பாலா சிவாஜியிடம் கூற கதையும், பெரியவர் கதாபாத்திரமும் மிகவும் பிடித்துவிட்டதாம். மேலும், அதில் நடிப்பதற்கு ரொம்பவே ஆர்வமாக இருந்தாராம் சிவாஜி கணேசன்.

சிவாஜியை தடுத்து நிறுத்திய பிரபு
ஆனால் அந்த சமயத்தில் சிவாஜிக்கு சற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் நடப்பதோ ராமேஸ்வரம் போன்ற கடற்கரை பகுதிகளில். வெயில் மற்றும் உப்பு காற்றில் சிவாஜி இருக்கும் உடல்நிலைக்கு நடிக்க முடியாது. அப்படி நடித்தால் அவரது உடல்நிலைக்கு பிரச்னை வந்துவிடுமோ என அஞ்சிய பிரபு பாலாவிடம் சென்று, ‘அப்பாவுக்கு இப்போது உடல்நிலை சரியில்லை. எனவே அவ்வளவு தூரம் வந்து நடிக்க முடியாது' என கூறிவிட்டாராம். இதனையடுத்துதான் பெரியவர் கதபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இதனை ஒரு பேட்டியில் நடிகர் ராஜ்கிரணே கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











