நடிகரின் பெயரை வைத்து சிம்புவுக்கு ஹிட் பாடல் கொடுத்த டி.ராஜேந்தர்.. செம சுவாரஸ்யம்
சென்னை: தமிழ் சினிமாவில் பல துறைகளில் வென்று காட்டியவர் டி.ராஜேந்தர். அவரது மகன் சிம்புவும் தனது தந்தை போலவே நடிப்பு, இயக்கம், இசையமைப்பு, பாடல்கள் பாடுவது, எழுதுவது என இருப்பவர். அவர் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் தவிர்த்து மூன்று படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன. இந்தச் சூழலில் சிம்புவுக்காக டி.ராஜேந்தர் காதல் அழிவதில்லை படத்தில் ஒரு பாடல் எழுதியதன் பின்னணி குறித்து தெரியவந்திருக்கிறது.
மயிலாடுதுறையை பூர்வீகமாகக் கொண்ட ராஜேந்தர் ஏவிசி கல்லூரியில் எம்.ஏ படித்தவர். தனது வீதியில் நடக்கும் சில நிகழ்ச்சிகளில் தன்னிடம் இருக்கும் சிறிய சிறிய பொருள்களை கொண்டு வாசித்தே அருகில் இருப்பவர்களை ஆட வைத்தவர். அப்படிப்பட்ட மகா திறமைசாலி 1980ஆம் ஆண்டு ஒருதலைராகம் என்ற கதையை எழுதினார். படத்தை தயாரித்து இப்ராஹிம் இயக்கினார்.

ஒருதலை ராகம் வாசித்த டி.ஆர் : 80ஸ் கிட்ஸுக்கு ஒருதலை ராகம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. காதல் கதைதான் என்றாலும் அதில் இருந்த எமோஷனும், எழுதப்பட்ட வசனங்களும் வேறு ஒரு ஃபீலை கொடுத்ததால் அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக டி.ராஜேந்தர் அந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்ததால் அத்தனையும் தெரிந்த கலைஞனை கோலிவுட் பலமாக வரவேற்றது.
ரூல் செய்த ராஜேந்தர்: ஒருதலை ராகம் படம் கொடுத்த பெரும் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய வசந்த அழைப்புகள் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் அடுத்ததாக அவர் இயக்கிய ரயில் பயணங்களில், உயிருள்ள வரை உஷா, தங்கைக்கு ஓர் கீதம், உறவை காத்த கிளி, மைதில் என்னை காதலி, என் தங்கை கல்யாணி உள்ளிட்ட படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அவர் எழுதி இயக்கிய அத்தனை படங்களும் காதலையும், உறவுகளையும் மையப்படுத்தியிருந்ததால் குடும்பங்கள் கொண்டாடும் படைப்பாளியாக மாறினார் டி.ராஜேந்தர்.
இசையமைப்பாளராகவும் வென்ற டி.ஆர்: 80களில் இசை என்றாலே இளையராஜாதான் என்ற சூழல் நிலவியது. ஒரு இயக்குநர் இசையமைப்பாளராக மாறுவது அந்தக் காலகட்டத்தில் யாரும் யோசிக்க முடியாததாக இருந்தது. ஆனால் அதை உடைத்துக்காட்டியது பாக்யராஜும், டி.ராஜேந்தரும். இளையராஜாவுடன் மோதல் என்ற காரணம் உள்ளுக்குள் இருந்ததால் பாக்யராஜ் இசையை கற்றுக்கொண்டு இசையமைப்பாளராக மாறினார். ஆனால் டி.ராஜேந்தருக்குள் அடிப்படையிலேயே இசை அறிவு இருந்தது.
காதல் அழிவதில்லை: அவர் தனது மகன் சிம்புவை காதல் அழிவதில்லை படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் மாறா மாறா என்ற பாடலையும் டி.ஆர் எழுதினார். இந்தச் சூழலில் அந்தப் பாடல் பிறந்த கதை குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது காமெடி நடிகர் சுகுமாரும் அந்தப் படத்தில் நடித்திருந்தார். அந்த சமயத்தில் ராஜேந்தரை சந்திப்பதற்கு சுகுமார் சென்றிருக்கிறார். அப்போது ஒரு பாடல் எழுத வேண்டும் ஆனால் வரிகள் எதுவும் சிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
உடனே சுகுமாரோ என் பெயரை முதல் வரியாக வைத்து எழுதுங்களேன் என்று சொன்னாராம். உடனே அவர் மாறா மாறா சுகுமாரா என்ற பாடலை எழுதினாராம். அந்தப் பாடலும் பயங்கரமாக ஹிட்டடித்ததுவிட்டது. இந்தத் தகவலை சுகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











