200 கிலோ தங்க நகைளை அணிந்து நடித்த ஐஸ்வர்யா.. 50 பேர் காவலுக்கு நின்ற சம்பவம்.. எந்த படத்துக்கு தெரியுமா?
சென்னை: திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் படைப்புகளை உண்மைக்கு நெருக்கமாகக் காட்ட கோடிக்கணக்கில் செலவிடும் தருணங்கள் பாலிவுட் வரலாற்றில் உண்டு. அசுதோஷ் கோவாரிகரின் பிரமாண்டப் படைப்பான "ஜோதா அக்பர்" அத்தகைய படங்களில் ஒன்று. இதில் ஹிருத்திக் ரோஷனும் ஐஸ்வர்யா ராயும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த படம் இன்றைக்கும் பலரது விருப்பப் படங்களில் ஒன்றாக உள்ளது. காதல் தான் அச்சாரம், காதலுக்கு முன்னால் மதம் மட்டுமல்ல வேறு எந்த வேறுபாடுகளும் ஒர்க்-அவுட் ஆகாது.
2008 ஆம் ஆண்டு வெளியான ஜோதா அக்பர் திரைப்படம், முகலாயப் பேரரசர் அக்பர் மற்றும் ராஜபுத்திர இளவரசி ஜோதா பாய் இடையிலான காதல் கதையை மையமாகக் கொண்டது. இதில் ஐஸ்வர்யா ராய் மகாராணி ஜோதா பாயாக நடித்தார். அவரது இளவரசி தோற்றம் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஆனால், இப்படத்தில் அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் உண்மையான தங்கத்தாலும் வைரத்தாலும் செய்யப்பட்டவை என்பது பலருக்குத் தெரியாத உண்மை. அதேபோல் முத்துக்கள் பதித்த நகைகளை ஹிருத்திக் ரோஷனும் அணிந்திருந்தார்.

திரைப்படத்தினை உண்மைக்கு நெருக்கமாக மட்டும் இல்லாமல், கூடுமானவரை தத்ரூபமாக எடுக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர்கள் ஒரு செயற்கை ஆபரணத்தையும் பயன்படுத்தவில்லை. அதாவது கவரிங் நகைகளை, தங்க முலாம் பூசப்பட்ட நகைகளைக் கூட பயன்படுத்தவில்லை. படம் முழுவதும் ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த நகைகளின் மொத்த எடை சுமார் 200 கிலோவாக இருந்தது. இந்த நகைகளை டாடா நிறுவனத்தின் பிரபல ஆபரண நிறுவனமான தனிஷ்க் பிரத்தியேகமாக வடிவமைத்திருந்தது.
200 கிலோ நகைகள்: படம் முழுவதும் ஐஸ்வர்யா அணிந்திருந்த இந்த நகைகளை உருவாக்க 200 கலைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. தங்கம் மட்டுமின்றி, கோடிக்கணக்கான மதிப்புள்ள முத்துக்களும் வைரக் கற்களும் அவற்றில் பதிக்கப்பட்டிருந்தன. ஐஸ்வர்யா ராய் ஒரு நேர்காணலில், இவ்வளவு கனமான நகைகளை அணிவது தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாகவும், தயாராவதற்கு இரண்டு மணி நேரம் ஆனதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

50 பேர் பாதுகாப்பு: இந்த விலைமதிப்பற்ற நகைகளின் பாதுகாப்பிற்காக, படப்பிடிப்புத் தளத்தில் 24 மணி நேரமும் 50 பாதுகாவலர்கள் பணியில் அமர்த்த பட்டிருந்தனர். திரைப்படம் வெளியான பிறகு, ஐஸ்வர்யாவின் நகைகளின் வடிவமைப்பு பெரும் பிரபலமடைந்தது. அது போன்ற நகைகளின் தேவை சந்தையில் அதிகரித்தது. அதாவது பெண்கள் பலரும் ஜோதா அக்பர் படத்தில் ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த நகையைப் போல வேண்டும், வலையைப் போன்று வேண்டும், நெக்லஸ் போல வேண்டும் என கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். பலரும் தங்களது திருமணத்திற்கு அதேபோல் நகைகளைச் செய்யச் சொல்லி அணிந்து கொண்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்றைக்கும்: இன்றும் கூட மக்கள் திருமணங்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கு "ஜோதா அக்பர்" பாணி நகைகளை விரும்பி அணிகிறார்கள். இத்திரைப்படம் அதன் கதைக்காக மட்டுமல்லாமல், அதன் பிரம்மாண்டமான செட்கள் மற்றும் அற்புதமான நகைகளுக்காகவும் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் இசை மற்றும் ஜாவேத் அக்தரின் "க்வாஜா மேரே க்வாஜா", "ஜஷன்-இ-பஹாரான்" போன்ற பாடல்கள் இன்றும் இந்தி ரசிகர்களால் அதிகம் கேட்கப்படும் பாடல்களாக உள்ளது. இப்படத்திற்கு தமிழ் டப்பிங்கும் சிறப்பாகவே கை கொடுத்தது.


Click it and Unblock the Notifications











