ரகுவரனை பிரிய இதுதான் காரணமாம்.. ஏன் பிரிந்தோம்னு மகனுக்கும் தெரியும்.. ஓபனாக பேசிய நடிகை ரோகிணி
சென்னை: கோலிவுட் எத்தனையோ நடிகர்களை கண்டிருக்கிறது. ஆனால் ரகுவரன் போல் இதுவரை யாரையும் கோலிவுட்டால் கண்டெடுக்க முடியவில்லை. ஏனெனில் ரகுவரன் நடிப்பில் பல வேரியஷன்களை காண்பிக்கக்கூடியவர். அப்படி அவர் பல வேரியஷன்களை காட்டி நடித்த படங்கள் ஏராளம். அதனாலேயே அவருக்கு நிகரான நடிகர் இன்றுவரை யாரும் இல்லை என்ற பேச்சுதான் இருக்கிறது. அவர் உயிரிழந்தாலும் அவரது படங்களை இப்போதும் ரசிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கிடையே நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரகுவரன் அவரை பிரிந்துவிட்டார். இந்நிலையில் ரகுவரனும் தானும் பிரிந்ததற்கான காரணம் குறித்து ரோகிணி ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் கூறியிருக்கும் விஷயங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை சமூக வலைதளங்களில் ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நடிகர்களில் ஒருவர் ரகுவரன். எத்தனையோ வில்லன்களை தமிழ் சினிமா கண்டிருக்கிறது. ஆனால் ரகுவரன் போல் ஒரு வில்லனை பார்த்ததில்லை. முதலில், ரகுவரன் சினிமா கல்லூரியில் இணைந்து படித்தார். அங்கு சினிமா தொடர்பான விஷயங்களையும், நடிப்பையும் கற்றுக்கொண்ட அவர் தொடர்ந்து வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார். முயற்சியின் பலனாக ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அந்தப் படமும் தேசிய விருது வென்றது.அதிலிருந்து பெரிய கவனத்தை தமிழ் சினிமாவில் பெற ஆரம்பித்தார் ரகு.

வில்லன் ஆன ரகுவரன்: கோலிவுட்டில் ஒரு விதி இருந்தது. அதாவது வில்லன் என்றால் ஆஜானுபாகுவாக, மற்றவர்களை உருவத்தை வைத்தே பயப்பட வைக்க வேண்டும் என்பதுதான் அது. ஆனால் ரகுவரனோ அதற்கு நேர்மாறானவர். ஒல்லியான தேகம், குழி விழுந்த கன்னம், அளவுக்கு அதிகமான உயரம் என வில்லனுக்கு அதுவரை கோலிவுட் எழுதியிருந்த ஃபார்முலாவை மீறி இருந்தார். தனது உடல் மொழி, வாய்ஸ், பார்வை என அனைத்தையும் வைத்து வில்லனாக ஒரு கலக்கு கலக்கினார். அவர் அந்த டெம்ப்ளேட்டை உடைத்ததிலிருந்துதான் வில்லன் ரோல் மேற்கொண்டு பலருக்கும் எளிதாக மாறியது என்றும்; அவரை ரோல் மாடலாக வைத்துக்கொண்டு வில்லனாக வேண்டும் என்று பலரும் விரும்பினார்கள் எனவும் திரைத்துறையினர் சொல்வதுண்டு.
ஆண்டனி மார்க் ஆண்டனி: ரஜினிகாந்த் ஸ்க்ரீனில் வந்தால் அவரைத் தவிர்த்து வேறு யார் மீதும் கண்கள் போகாது. ஆனால் அந்த விதியையும் மாற்றிக்காட்டியவர் ரகுவரன். பாட்ஷா படத்தில் அவர் ஏற்றிருந்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் எல்லாம் இனிமேல் யாரும் செய்ய முடியாதது. பாட்ஷாவாக நடிக்க நான் இருக்கிறேன். ஆனால் மார்க் ஆண்டனியாக இனி யாராலும் நடிக்க முடியாது என ரஜினியேக்கூட ஒரு மேடையில் புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு ரகுவரன் தனது நடிப்பால் அந்தப் படத்தில் அருமையாக ஸ்கோர் செய்திருப்பார். இன்றுவரை தமிழ் சினிமாவின் ட்ரேட்மார்க் கேரக்டர்களில் அவர் ஏற்றிருந்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
குணசித்திர வேடம்: பொதுவாக வில்லன் நடிகர்கள் குணசித்திர வேடத்துக்கு மாறும்போது மெல்லிய தடுமாற்றம் ஒன்று ஏற்படும். ஆனால் ரகுவரனோ அதற்கும் விதிவிலக்கானவர். முகவரி, சிவப்பதிகாரம், யாரடி நீ மோகினி, சிவாஜி என அவர் குணச்சித்திர வேடங்களிலும் தனது தனித்துவமான நடிப்பை காண்பித்து அசால்ட்டாக ஸ்கோர் செய்திருப்பார். அதிலும் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் மகனுக்காக நடிகை நயன்தாராவிடம் சென்று பேசும் காட்சியாகட்டும், தனுஷிடம் பணத்தை தூக்கி எறிந்து எமோஷனலாகவும் கோபமாகவும் பேசுவதாகட்டும். ஒவ்வொரு சீனிலும் அட்டகாசமாக நடித்திருந்தார். அந்தப் படம்தான் அவர் நடித்த கடைசி படம் ஆகும். விரைவில் அவர் தொடர்பான ஆவண படம் ஒன்றும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமும், பிரிவும்: இதற்கிடையே நடிகை ரோகிணியை ரகுவரன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரிஷி என்ற ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் சில மன கசப்புகளால் ரோகிணியும், ரகுவரனும் பிரிந்துவிட்டார்கள். இருந்தாலும் இருவரும் மகன் மீது அதீத பாசம் வைத்திருந்தனர். குறிப்பாக ரகுவரனுக்கு ரிஷி மீது அளவு கடந்த பாசம் இருந்தது. காதலோடு சென்றுகொண்டிருந்த ரகுவரன் - ரோகிணி வாழ்க்கை எதற்காக பாதியில் முடிந்தது என்பது குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் ரோகிணி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
ரோகிணியின் பேட்டி: தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "ரகுவரனின் முதல் ரசிகை நான்தான். நான் ஹீரோயினாக நடித்த முதல் படத்தில் அவர்தான் ஹீரோவாக நடித்தார்.அப்போது எனக்கு 15 வயது. அவருக்கு 23 வயது. அதற்கு பிறகு 13 வருடங்கள் கழித்துதான் சந்தித்தோம். அந்த கால இடைவெளியில் ஏகப்பட்ட விஷயங்கள் மாறியிருந்தன. பிறகு ஏழு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். அதற்கு பிறகு சில காரணங்களால் எங்களுக்குள் விரிசல் வந்தது.அது எங்களுக்கு மட்டுமே நடக்ககூடிய விரிசல் இல்லை. எல்லா உறவுகளுக்குள்ளும் அந்த விரிசல் வரத்தான் செய்யும். ஒருகட்டத்தில் எங்கள் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றுதான் நான் நினைத்தேன்.
இதனால்தான் பிரிந்தேன்: அதற்காக நான் அவரிடமிருந்து பிரிந்து வந்துவிட்டேன். ஆனால் தனிப்பட்ட ரீதியாக அவர் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது.அதனால்தான் அவரை நான் திருமணமும் செய்துகொண்டேன். எங்கள் மகன் ரிஷியை பார்ப்பது அவருக்கு பெரிய சந்தோஷம். அந்த சந்தோஷத்துக்கு நானும் பங்களித்திருக்கிறேன் என்று நினைக்கையில் ஸ்பெஷலாக இருக்கிறது. ரகுவரனின் வாரிசு ரிஷிதான். என் மகன் வழியால் ரகுவின் டிஎன்ஏ தொடரப்போகிறது என்பது சந்தோஷமாக இருக்கிறது. மகனுக்கு இப்போது நடிப்பதற்கு ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவனது குழந்தைகள் நடிப்பதற்கு ஆசைப்படலாம்தானே. ரகுவரன் எதையுமே எளிதாக மறக்கக்கூடியவர் இல்லை. அது எல்லோருக்குமே நன்றாக தெரியும்.
களங்கம் ஏற்படுத்தவில்லை: சில விஷயங்கள் எங்களுக்குள் நடந்தது. ஆனால் அவருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு கிடையாது. அவரைப் பற்றி நான் ஏதாவது சொன்னால் என்னை பார்த்து கேள்வி கேட்பதற்கு அவர் இருக்க வேண்டும். ஆனால் அவர் இப்போது இல்லை. அவர் இல்லாத நேரத்தில் அப்படி பேசுவது சரி கிடையாது என்று நினைக்கிறேன். அதேநேரம் எனக்கு நடந்தது நடந்ததுதான். அந்த உண்மை யாருக்கு தெரிய வேண்டுமோ அவர்களுக்கு தெரிந்தால் போதும்.முக்கியமாக எனது மகன் ரிஷிக்கும் தெரியும்" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











