இந்த வியாக்கியானம் எல்லாம் பேசாத.. கிளம்பி வான்னு சொன்னா வா.. நடிகையை அலறவிட்ட இயக்குநர் பாலா
சென்னை: இயக்குநர் பாலா இந்திய அளவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். கடந்த சில வருடங்களாகவே அவரது சினிமா கரியர் கொஞ்சம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இப்போது அவர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அண்மையில் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கூடிய விரைவில் படமும் ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் இயக்குநர் பாலா குறித்து நடிகை சங்கீதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
சேது படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான பாலா இந்திய அளவில் முக்கியமான இயக்குநர். அவர் இயக்கும் ஒவ்வொரு படமும் வெவ்வேறு கதைக்களங்களை தொட்டு ரசிகர்களை கலங்கடிக்கும் வல்லமை கொண்டிருந்தவை. ஆனால் கடந்த சில காலமாக அவர் ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். அவரை சுற்றி தொழில் ரீதியாகவும்; தனிப்பட்ட ரீதியாகவும் பல பிரச்னைகள் வந்தன. சூழல் இப்படி இருக்க அவர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை முடித்திருக்கிறார். முதலில் இந்தப் படத்தில் சூர்யா கமிட்டாகியிருந்தது நினைவுகூரத்தக்கது.

சங்கீதா பேட்டி: இந்நிலையில் பிதாமகன் படத்தில் நடித்து நல்ல பெயரை பெற்ற நடிகை சங்கீதா தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாலா குறித்து பேசியிருக்கிறார். அவர் அந்தப் பேட்டியில், "தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட பத்தூ படங்கள் எனது கைகளில் இருந்தன. அதனால் தமிழ் சினிமாவில் எனக்கு பெரிதாக டச் இல்லாமல்தான் இருந்தது. எனவே சூர்யா, விக்ரம் ஆகியோர் இங்கு பெரிய ஹீரோ ஆகிவிட்டார்கள் என்பதும் எனக்கு தெரியாது.
பிதாமகன் ஷூட்டிங்: அப்படிப்பட்ட சூழலில்தான் பாலா சார் இயக்கிய பிதாமகன் படத்தில் நடிப்பதற்கு என்னிடம் கேட்டார்கள். ஆனால் என்னிடம் டேட்ஸ் இல்லை. அதன் காரணமாக மறுத்துவிட்டேன். அதனையடுத்து பல நடிகைகளை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் பாலாவுக்கு அந்த நடிகைகளின் நடிப்பில் திருப்தி இல்லாததால் திருப்பி அனுப்பி கொண்டிருந்தார்கள்.
கோபப்பட்ட வம்சி: ஒருமுறை நான் ஃபிலிம் பேர் விருது வாங்கினேன். அப்போது வம்சி என்னிடம் அடுத்ததாக என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார். நான் அடுத்தடுத்து படங்களின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. இயக்குநர் பாலா அழைத்தார். ஆனால் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றேன். உடனே சடார் என்று கோபப்பட்ட வம்சி, பாலா படத்தை நீ எப்படி மிஸ் செய்யலாம். உடனடியாக அவருக்கு ஃபோன் செய்து மன்னிப்பு என்று சொல்லிவிட்டார். நானோ சார் என்னிடம் டேட்ஸ் இல்லை என்று கூறினேன்.
அலட்சியமான பாலா: அதற்கு அவரோ பாலா படத்தில் நடிக்க அழைத்தால் நீதான் தேதிகளை உருவாக்க வேண்டும் என்று சொன்னார். அதனையடுத்து பாலாவுக்கு ஃபோன் செய்து, சார் நான் ஃபிலிம் ஃபேர் விருது வாங்கியிருக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அவரோ ஆங்.. அப்புறம் என்று அலட்சியமாக பேசினார். ஒரு வாழ்த்துக்கூட சொல்லவில்லை. பிறகு வம்சி என்னை கண்டித்ததை குறிப்பிட்டு அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் சார் என்று சொன்னேன். அதற்கு அவர் இப்போது என்ன செஞ்சிட்டு இருக்க என்று கேட்டார்.
வியாக்கியானம்லாம் பேசாத: பாலகிருஷ்ணா படத்தில் நடிக்கிறேன். அதன் ஷெட்யூல் கேன்சல் ஆகியிருக்கிறது என்றேன். உடனே அவர் சரி கிளம்பி மதுரைக்கு வா என்று கூறினார். அதற்கு நானோ, சார் அந்த கேரக்டரில் வேறு ஹீரோயின் நடித்துக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அவரது வேலையை கெடுத்து எனக்கு வேலை வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு அவரோ, இந்த வியாக்கியானம் எல்லாம் நான் உனட்ட கேக்கல. கிளம்பி வான்னா வா என்று சொன்னார். அதற்கு பிறகு பிதாமகன் படத்தில் நடித்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











