விஜயகாந்த்தும் நானும் நெருங்கி பழகினோம்..அப்படி செய்வார்னு நினைக்கல..மன்னிப்பு கேட்டார்..நடிகை ஓபன்
சென்னை: விஜயகாந்த் உடல்நல குறைவால் கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார். தமிழ் சினிமாவிலும் தமிழ்நாடு அரசியலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அவர் உயிரிழந்த பிறகு பலரும் அவர் செய்த உதவிகள், அவரது குணாதிசயங்கள் குறித்து ஓபனாக பேசிவருகிறார்கள். அந்தவகையில் பிரபல நடிகை ஸ்ரீலேகா விஜயகாந்த் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
மக்களால் கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த். திரைத்துறையில் அவர் இருந்தபோது ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு இணையாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். நடிகராக இருந்தபோதே ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். மக்களுக்கு மட்டுமின்றி தன்னுடைய சக நடிகர்களுக்கும் ஏகப்பட்ட உதவிகளை செய்திருக்கிறார். அவரிடம் உதவி பெற்றவர்களின் லிஸ்ட் மிகப்பெரிதாக நீண்டுகொண்டே செல்லும் என்பதுதான் எதார்த்தமான உண்மை.

அரசியலில் விஜயகாந்த்: மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக அரசியலுக்கு வந்தார் அவர். குறிப்பாக மறைந்த முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாடு அரசியலில் உச்சக்கட்ட பீக்கில் இருந்த சமயத்தில் தேமுதிக கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். முதல் தேர்தலில் அவர் வென்று சட்டப்பேரவைக்குள் சென்றார். அதிலும் அவர் வாங்கிய வாக்கு சதவீதம் இருவரையும் கொஞ்சம் யோசிக்கத்தான் வைத்தது. அதனால் அடுத்த தேர்தலில் தங்களுடன் கூட்டணி அமைக்க அழைப்பு விடுத்தார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் விஜி: கருணாநிதியோ எப்படியாவது விஜயகாந்த்தை தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கணக்கு போட்டு ஏகப்பட்ட காரியங்களை செய்தார். ஆனால் விஜயகாந்த்தோ யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். அந்தத் தேர்தலில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தது தேமுதிக. விஜயகாந்த்தும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரானார். கட்சி ஆரம்பித்து தான் சந்தித்த இரண்டாவது தேர்தலிலேயே எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த்தை பார்த்து ஒட்டுமொத்த மக்களும் ஆச்சரியம்தான் பட்டார்கள்.
சரிவை சந்தித்த விஜயகாந்த்: அவரது அரசியல் பயணம் நன்றாக போய்க்கொண்டிருந்த சூழலில் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை ஓபனாக எதிர்க்க; ஜெவோ தனது சாணக்கியத்தனத்தை காண்பிக்க ஆரம்பித்தார். அதனால் தேமுதிகவிலிருந்து ஒவ்வொருவராக விலக ஆரம்பித்தார்கள். அப்படி விலகியவர்கள் எல்லாம் விஜயகாந்த்துக்கு ரொம்பவே நெருக்கமானவர்கள். எனவே அப்செட்டான அவருக்கு அரசியல் நிலை மட்டுமின்றி உடல்நிலையும் மோசமாக தொடங்கியது. இதனை அவரது மகனே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்த அவரால் மீண்டும் பழையபடி ஆக்டிவ் அரசியலில் ஈடுபட முடியவில்லை.

உயிரிழந்த விஜயகாந்த்: இப்படிப்பட்ட சூழலில் கடந்த 2023ஆம் ஆண்டு அவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்கு தமிழ்நாடெங்கிலுமிருந்து சென்னைக்கு படையெடுத்தார்கள் மக்கள். அதுமட்டுமின்றி இப்படி ஒரு மனிதரை இனி யாராலும் பார்க்கவே முடியாது என்று அவரை முன்பு திட்டியவர்கள்கூட அவர் உயிரிழந்தபோது கலங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல நடிகையான ஸ்ரீலேகா விஜயகாந்த் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
ஸ்ரீலேகாவின் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "விஜயகாந்த் நடித்த அகல் விளக்கு படத்தின்போதுதான் நானும் அவரும் நெருக்கமானோம். அவர் ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் அசால்ட்டாக நடித்து அசத்திவிடுவார். ஆனால் பாடல் காட்சிகளில்தான் அவர் ரொம்பவே சிரமத்தை சந்திப்பார். அகல் விளக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷோபா. அந்தப் படத்தின் ஷூட்டிங்போது பாடல் காட்சிகள் குறித்து சொல்லி என்னிடம் வருத்தப்பட்டார். அடுத்த நாள் வேறு அவருக்கும், ஷோபாவுக்கும் பாடல் ஷூட்டிங் ஒன்று இருந்தது. உடனே நானும் அவரும் முதல் நாள் ஒத்திகை பார்த்துக்கொண்டோம். அந்த ஒத்திகையில் நான் ஷோபாவாக நடித்தேன். ஒத்திகைக்கு பிறகு ஓரளவு தைரியம் பெற்றார் அவர்.

நெருங்கி பழகினோம்: அதற்கு பிறகு நானும் அவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். என்னுடைய வீட்டுக்கெல்லாம் வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். என்னுடன் மட்டுமின்றி என்னுடைய குடும்பத்தினரிடமும் நெருக்கமானார். நான் அந்த சமயத்தில் ரொம்பவே பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தேன். அதனை கவனித்த அவர் எனது அம்மாவிடம், 'பப்பிம்மா பிஸியாக நடிக்குது. எனக்கோ வாய்ப்புகளே வரவில்லை. நான் மதுரைக்கே சென்று எனது ரைஸ் மில்லையே பார்த்துக்கொள்கிறேன் என்று கேட்டார். அதற்கு என்னுடைய அம்மாவோ, அப்படியெல்லாம் அவசரப்பட்டு முடிவு எடுக்காதே. நீ சினிமாவுக்கு வந்திருக்கிறாய் என்றால் தோல்வியெல்லாம் அடையமாட்டாய் என்று தைரியம் கொடுத்தார்.
கிண்டல் செய்தார்கள்: விஜயகாந்த் அப்படி சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவர் கறுப்பாக இருந்தார். அதன் காரணமாக அவரது நிறத்தையும், முடியையும் வைத்து இன்டஸ்ட்ரியில் கிண்டல் செய்துகொண்டே இருந்தார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்தான் அவர் சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நடித்தார். என் குடும்பத்தினர் அனைவருமே அந்தப் படத்தை பார்க்க சென்றோம். விஜயகாந்த் தோன்றும்போதெல்லாம் ரசிகர்களிடமிருந்து விசில்களும், கைத்தட்டல்களும் பறந்தன. அதை பார்த்துவிட்டு விஜயகாந்த்திடம் எனது அம்மா, 'விஜயகாந்த் இனி நீ வென்றுவிடுவாய். எதற்கும் கவலைப்படாதே' என்று மகிழ்ச்சியோடு கூறினார். அம்மா சொன்னபடியே விஜயகாந்த்துக்கு அடுத்தடுத்த படங்கள் ஹிட்டடிக்க ஆரம்பித்தன.
வாய்ப்பு வாங்கிக்கொடுக்கவில்லை: விஜயகாந்த் டாப்புக்கு வந்தபோது எனது அம்மா எனக்காக அவரிடம் வாய்ப்பு கேட்டார். அப்போது அவர் திரைத்துறையில் நான் சொல்லி கேட்கும் காலம் வரும்போது கண்டிப்பாக பப்பிக்கு வாய்ப்பு வாங்கி தருவேன் என்று கூறினார். ஆனால் அவர் ஒருபோதும் எனக்கு வாய்ப்புகள் வாங்கி தரவில்லை. நானும் அவரிடம் வாய்ப்புகள் கேட்கவில்லை. ரொம்பவே நெருங்கி பழகியவர் என்னுடைய அப்பா மரணத்துக்கு வரவில்லை. அது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு ஒரு டப்பிங் தியேட்டரில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானாக சென்று பேசவில்லை. அவரே வந்து, 'குடும்பத்தில் சில பிரச்னைகள் அதனால்தான் அப்பா மரணத்துக்கு வர முடியவில்லை. மன்னித்துக்கொள்' என்று கூறினார்.
அதற்கு நானோ அப்பா இறந்த அன்று வந்திருக்க வேண்டாம். அதற்கு பின்னாட்களில் வந்திருக்கலாமே என்றேன். அவரோ நிச்சயமாக வந்திருக்க வேண்டும் என்று சொல்லி மீண்டும் மன்னிப்பு கேட்டார். அதேசமயம் அவர் நடிகர் சங்க தலைவராக வந்த பிறகு எனது கணவருக்கு அவ்வளவு பக்கபலமாக இருந்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











