Sripriya: நான் அதை பண்ணவே மாட்டேன்னு சொன்னேன்.. கமல் தான் வற்புறுத்தினாரு.. நடிகை ஸ்ரீபிரியா ஓபன்!
சென்னை: நடிகை ஸ்ரீபிரியா 70 மற்றும் 80களின் காலகட்டங்களில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவகுமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். பல முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்துள்ள ஸ்ரீபிரியா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் அதிகமாக நடித்துள்ளார்.
ஸ்ரீபிரியாவிற்கு அவள் அப்படித்தான் படம் மிகப் பெரிய பாராட்டுகளையும் தமிழக அரசின் விருதையும் பெற்று கொடுத்தது. முன்னதாக இந்த படம் குறித்து ஸ்ரீ பிரியா கொடுத்துள்ள பேட்டியில், இந்த படத்தில் கமல்தான் தன்னை வற்புறுத்தி நடிக்க வைத்ததாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய நடிப்பு, இயக்கத்தில் வெளியான படங்கள் குறித்தும் ஸ்ரீபிரியா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை ஸ்ரீபிரியா: நடிகை ஸ்ரீபிரியா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர். துடிப்பான, சவாலான கேரக்டர்களுக்கு பெயர் பெற்றவர். நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர் என அடுத்தடுத்த கட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டவர். துவக்கத்தில் தனக்கு தமிழ் சரளமாக பேச, எழுத வராது என்றும் அதற்காக பிற்காலத்தில் தான் வருத்தப்பட்டதாகவும் ஸ்ரீபிரியா தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆங்கில வழி கல்வியில் படித்ததால் தனக்கு இந்த சிரமம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமலிடம் நடிப்பு பயிற்சி: எதற்கு எடுத்தாலும் கமலைதான் பாலச்சந்தர் பெருமையாக பேசுவார் என்பதால் அவரிடம் தமிழ் உச்சரிப்பு, டான்ஸ், நடிப்பு என்று பல விஷயங்களை சிறிதும் கூச்சமின்றி கற்றுக் கொண்டதாகவும், நண்பர் என்பதை காட்டிலும் ஒரு சிறந்த ஆசிரியராக கமல்ஹாசன்மீது தான் அதிகமாக மதிப்பு வைத்திருப்பதாகவும் ஸ்ரீபிரியா மேலும் கூறியுள்ளார். பல்வேறு படங்களில் நடித்திருந்த நிலையில் ஆண் பிள்ளை சிங்கம் என்ற படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக, ஹீரோயினாக மாறியதாகவும் அப்போதெல்லாம் தனக்கு வெட்கப்படவே தெரியாது என்றும் ஸ்ரீப்ரியா மேலும் கூறியுள்ளார்.
சூப்பர்ஹிட்டான ஆட்டுக்கார அலமேலு: தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான நடிகையாக ஸ்ரீபிரியா, தொடர்ந்து பல படங்களில் இருந்தவர். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான படங்கள் அப்போது சரியாக போகாத நிலையில் தான் ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்ததாகவும் அந்தப் படமும் சரியாக போகவில்லை என்றால் தான் படம் தயாரிப்பதை நிறுத்துவேன் என்றும் தயாரிப்பாளர் தேவர் கூறியதாகவும் ஸ்ரீபிரியா மேலும் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தமிழில் மட்டுமில்லாமல் பொட்டேலு புண்ணம்மா என்ற பெயரில் தெலுங்கிலும் இந்த படம் வெளியாகி இரண்டு படமும் மிகப்பெரிய ஹிட் அடித்ததாகவும் ஸ்ரீபிரியா பகிர்ந்துள்ளார்.
வற்புறுத்திய கமல்ஹாசன்: இந்தப் படங்களின் வெற்றிக்கு பிறகு கமல், ரஜினி என எந்த முன்னணி நடிகர் நடித்தாலும் தேவர் பிலிம்சின் முதல் காட்சியில் சென்டிமெண்டாக தன்னை தான் நடிக்க வைப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள ஸ்ரீ பிரியா, ஆட்டுக்கார அலமேலு படத்திற்குப் பிறகு தன்னுடைய சம்பளமும் கணிசமாக உயர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ஸ்ரீபிரியாவிற்கு மிகப்பெரிய பெயரை மட்டுமில்லாமல் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுக் கொடுத்த படம் அவள் அப்படித்தான். இந்த படத்தில் முடிக்க நடிக்க முதலில் தனக்கு விருப்பமே இல்லை என்றும் அந்த கதையை தீர்க்கதரிசனத்துடன் உள்வாங்கிய நடிகர் கமல்ஹாசன்தான் தன்னை வற்புறுத்தி நடிக்க வைத்ததாகவும் ஸ்ரீபிரியா தற்போது நினைவு கொண்டுள்ளார்.
யோசிக்காமல் ஒப்புக்கொண்ட கமல்: தொடர்ந்து பேசிய அவர் தன்னுடைய கணவர் ராஜ்குமார் சேதுபதி மலையாள த்ரிஷயம் படத்தை பார்த்துவிட்டு அதன் அனைத்து மொழிகளுக்கான உரிமையையும் வாங்கியதாகவும் அந்த படத்தை தமிழில் ரஜினியை வைத்து உருவாக்க நினைத்ததாகவும் ஆனால் தன்னுடைய டீம் மேட்ஸ் கமல்ஹாசன் அந்த கேரக்டருக்கு சிறப்பாக இருப்பார் என்று கூறியதால், கமலை வைத்து அந்த படத்தை உருவாக்கியதாகவும் கமலும் யோசிக்காமல் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். முதலில் திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமிக்கை தான் இயக்க நினைத்ததாகவும் ஆனால் ஜீத்து ஜோசப் அந்த படத்தை இயக்க கோரிக்கை வைத்த நிலையில் அவருக்கு அந்த வாய்ப்பு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கில் இயக்கிய திரிஷ்யம்: இதையடுத்தே தெலுங்கில் திரிஷ்யம் படத்தை வெங்கடேஷை கொண்டு ஸ்ரீப்ரியா இயக்கி முடித்துள்ளார். அங்கும் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி வருகின்றன. இதனிடையே மாலினி 22 பாளையங்கோட்டை படத்தையும் இயக்கியுள்ள ஸ்ரீப்ரியா, பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்த தனது கோபத்தை தான் இந்த படத்தில் காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











