கமலுடன் சிங்கப்பூர் போயிருக்க வேண்டும்.. நடக்கவே நடக்காது என்றுதான் நினைத்தேன்.. சுகன்யா ஓபன் டாக்
சென்னை: பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சுகன்யா தமிழில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்த அவருக்கு திருமணமும் நடந்தது. ஆனால் சில காலமே அந்தத் திருமண வாழ்க்கை நீடித்தது. விவாகரத்து பெற்று சிங்கிளாக இருக்கும் அவர் தமிழில் மீண்டும் சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்தார். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுகன்யா. இயக்குநர் இமயம் அறிமுகப்படுத்திய நடிகை என்றாலே திறமை இருக்கும் என்பது சுகன்யா விஷயத்திலும் நிரூபணம் ஆனது. அப்படத்தில் தனது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்திய அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அப்படி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தனக்கென தனி மார்க்கெட்டையும் உருவாக்கவும் செய்தார்.
பரதநாட்டிய கலைஞர்: சுகன்யா அடிப்படையில் மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர் ஆவார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சென்னையில் பல மேடைகளில் அவரது பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்திருக்கிறது. இயல்பிலேயே பரதநாட்டியம் கைகூடி வந்ததால் என்னவோ சுகன்யாவின் எக்ஸ்பிரெஷன்கள் எல்லாம் ரொம்பவே அற்புதமாக இருந்தன. தமிழ்நாட்டு முகம், அனைவரையும் கவரும் பாவனைகள் என டாப் ஹீரோயின்களில் ஒருவராக மாறினார்.

வரிசையாக ஹிட்டுகள்: விஜயகாந்த்துடன் நடித்த சின்னக்கவுண்டர், கமலுடன் மகாநதி, இந்தியன், சத்யராஜுடன் வால்டர் வெற்றிவேல், திருமதி பழனிச்சாமி, பிரபுவுடன் செந்தமிழ்ப்பாட்டு, சரத்குமாருடன் மகா பிரபு என ஏராளமான ஹிட் படங்களில் நடித்து அசத்தினார். அவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த பார்த்த மற்ற நடிகைகளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் எடுத்தது என்பதுதான் உண்மை. ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவருக்கு 2002ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
நீடிக்காத திருமண வாழ்க்கை: தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட அவர்; ஒரே வருடத்தில் விவாகரத்தும் பெற்றார். அதற்கு யூகங்களாக பல காரணங்களை பலர் சொல்வதுண்டு. முதல் திருமண வாழ்க்கை முறிந்த கையோடு அந்த லைஃப் ஸ்டைலுகே கும்பிடு போட்டுவிட்டு சிங்கிளாக வலம் வருகிறார் அவர். இடையே சில்லுனு ஒரு காதல்,என்னமோ நடக்குது உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார் சுகன்யா.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் கமலுடன் இரண்டு படங்களில் பணியாற்றியது குறித்து சில வருடங்களுக்கு முன்பு அவர் கொடுத்த பேட்டி சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்திருக்கிறது. சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர், "மகாநதி படத்துக்கு முன்பே சினிமா துறையிலிருந்து ஒரு நடன நிகழ்ச்சிக்காக சிங்கப்பூருக்கு அவருடன் போயிருக்க வேண்டியது. ஆனால் அந்த ப்ரோகிராம் செய்ய முடியவில்லை. மூன்று ரிகர்சல்கள் சொன்னார்கள். ஆனால் பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையத்தில் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் ஒத்திகைக்கு செல்ல முடியவில்லை. ப்ரோகிராமும் செய்யவில்லை. எனவே கமலுடன் இனி வேலையே செய்ய முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால் மகாநதி, இந்தியன் என இரண்டு படங்கள் செய்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











