Ajith: அஜித்தை இரண்டு முறை ஸ்கெட்ச் போட்ட இயக்குநர் பாலா... ஆனாலும் அதுமட்டும் நடக்கவே இல்லையே!
சென்னை: அஜித் - இயக்குநர் பாலா கூட்டணி இரண்டு முறை இணையவிருந்தும் அது முடியாமல் போனது. அதற்கான காரணங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இணையாமல் போன அஜித் - பாலா கூட்டணி
அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த அஜித், தற்போது மாஸ் ஹீரோ கான்செப்ட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக சேது மூலம் இயக்குநராக அறிமுகமான பாலா, தனது இரண்டாவது படத்தின் ஹீரோவாக அஜித்தை தான் தேர்வு செய்தார்.
அதன்படி, அஜித் நடிப்பில் பாலா இயக்கவிருந்த நந்தா படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது. அஜித்தும் அப்போது தான் மாஸ் ஹீரோ இமேஜ்ஜிற்கு மாறி வந்தார். இதனால் அஜித் - பாலா கூட்டணிக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், திடீரென அஜித் நந்தா படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் தான் சூர்யா அந்தப் படத்தில் கமிட்டானார். அதுவரை நடிக்கத் தெரியாது என விமர்சனம் செய்யப்பட்ட சூர்யாவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றது நந்தா.
அதேபோல், மீண்டும் அஜித்துடன் இணைய முடிவு செய்தார் பாலா. அதன்படி பாலாவின் நான் கடவுள் படத்திலும் அஜித் கமிட்டாக, போஸ்டரும் வெளியானது. இதனால் இந்த முறையாவது அஜித் - இயக்குநர் பாலா கூட்டணி இணையும் என ரசிகர்கள் எதிர்பார்க்க, அதுவும் போஸ்டருடன் ட்ராப் ஆனது. இதன் பின்னரே அஜித்துக்குப் பதிலாக ஆர்யா இந்தப் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
நந்தா, நான் கடவுள் என இரண்டு படங்களிலும் அஜித் நடிக்கவிருந்து கடைசி நேரத்தில் விலகியது குறித்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல், இந்த இரண்டு படங்களிலும் பாலாவின் முதல் ஹீரோ சாய்ஸ் அஜித் தான் என இயக்குநர் அமீர் கூறியிருந்தார். ஆனால், அஜித் விலகியது பற்றிய சரியான தகவல்கள் வெளியானது இல்லை.
இந்நிலையில், பாலாவுடன் அஜித் இணையாமல் போனது பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலா எப்போதுமே லைவ் லொக்கேஷனில் படப்பிடிப்பு நடத்துவது வழக்கம். அதுமட்டும் இல்லாமல் படப்பிடிப்புத்தளத்திலேயே தனது நடிகர்கள், நடிகைகளுக்கு ஆக்ரோஷமாக நடிப்பு சொல்லிக் கொடுப்பாராம். ஒருவரையொருவர் அடிக்கும் காட்சிகள் கூட ரியலாக இருக்க வேண்டும் என நினைப்பவர். அதுமட்டும் இல்லாமல் ஹீரோ என்ற இமேஜ்க்கெல்லாம் இடமே கொடுக்க மாட்டார்.
இதனையெல்லாம் தாங்க முடியாமல் தான் பாலாவின் படங்களில் இருந்து அஜித் விலகியதாக கோலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் சிலர் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











