நிறைய தோல்வி படங்களை கொடுத்திருக்கிறேன்.. ஆனாலும்.. எமோஷனலான அஜித்குமார்
சென்னை: அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளி போயிருக்கிறது. அதேசமயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் மே மாதம் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு கண்டிப்பாக ரிலீஸாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அஜித் கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சினிமாவுக்குள் யாரின் துணையுமில்லாமல் நுழைந்து போராடி தனக்கென தனியிடத்தை பிடித்திருப்பவர் அஜித்குமார். அவரை திரையில் கண்டாலே போதும் என்று அவரது ரசிகர்கள் நினைப்பார்கள். ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் அவரது படத்துக்கு கிடைக்கும் ஓப்பனிங் வேறு எந்த ஹீரோவின் படத்துக்கும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முக்கியமாக போட்டிக்கு களமிறங்கிய வாரிசு திரைப்படத்தைவிடவும் துணிவுதான் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது.

விடாமுயற்சி: அவர் இப்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் டீசரும், சிங்கிளும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. படமானது பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது.
குட் பேட் அக்லி: இதற்கிடையே விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் கமிட்டானார் ஏகே. இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த நிறுவனம்தான் புஷ்பா, புஷ்பா 2 படங்களை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எஸ்.ஜே.சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த ஆதிக் இயக்கம் என்பதால் இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
மே மாதம் ரிலீஸ்: இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியானபோதே குட் பேட் அக்லி பொங்கலுக்கு ரிலீஸாகும் என்றுதான் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விடாமுயற்சி ரிலீஸாவதாக இருந்ததால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. அதன்படி இப்படமானது அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே மாதம் ரிலீஸாகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அஜித்குமார் தனது ரசிகர்கள் குறித்து நடிகர் சந்தானத்திடம் பில்லா பட சமயத்தில் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
அஜித் பேட்டி: அந்தப் பேட்டியில் அவர், "இந்த சினிமா துறையில் நிறைய தோல்வி படங்களை கொடுத்த நடிகர் நானாகத்தான் இருப்பேன். ஆனாலும் எனது ரசிகர்கள் என் மீது அளவு கடந்த அன்பையும், எதையும் எதிர்பார்க்காமலும் அன்பை வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது போன ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்திருக்கிறேன் என்று தோன்றுகிறது" என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஏகே இவ்வளவு ஓபனாக சொல்லிவிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.முன்னதாக அஜித்தை அவரது ரசிகர்கள் கடவுளுடன் ஒப்பிட்டு கோஷம் எழுப்பினார்கள். ஆனால் அப்படியெல்லாம் அழைக்க வேண்டாம் என்று அஜித் ஸ்ட்ரிக்ட்டாக கூறியது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











