விஜய் பட ஷூட்டிங்கிற்கு சென்ற சங்கீதா.. வேவு பார்த்த படக்குழு.. ஆத்தாடி இப்படி வேற நடந்ததா?
சென்னை: விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கீதா; அவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவானது ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. ஒட்டுமொத்த திரைத்துறையையும் இந்த விவகாரம் அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதுவும் அவர் தாக்கல் செய்த மனுவில் விஜய் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி விவாதத்தையும் கிளப்பிவிட்டிருக்கிறது.
லண்டனில் பிறந்து வளர்ந்தவர் சங்கீதா. அவரது பூர்வீகம் தமிழீழம். விஜ்ய்யின் ரசிகையாக இருந்து காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்குள் சில பிரச்னைகள் ஏற்பட்டன. அந்தப் பிரச்னைகள் சரி செய்யப்பட்டுவிடும் என குடும்பத்தினர் நம்பினார்கள். ஆனால் நாளுக்கு நாள் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவு மோசமாகி விவாகரத்துவரைக்கும் சென்றுவிட்டது. விஜய்யின் திருமண வாழ்க்கையில் இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. சொல்லப்போனால் பெரிய வெடிகுண்டையே தூக்கிப்போட்டிருக்கிறார் சங்கீதா.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள்: தனது மனுவில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார். முக்கியமாக, 'தனது கணவர் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். எவ்வளவோ சொல்லியும் இரக்கமே இல்லாமல் அந்த நடிகையுடனான உறவை தொடர்ந்தார். அந்த நடிகையும் என் கணவருடன் வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமின்றி; அந்தப் புகைப்படங்களையும் ஷேர் செய்தார். அது எனது பிள்ளைகளுக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. நன்மதிப்பு கெடக்கூடாது என்பதற்காக அந்த நடிகையின் பெயரை சொல்லவில்லை.

நடிகையின் பெயர்: இந்த விஷயத்தில் எனது கணவர் மூலம் ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகையின் பெயரையும் சொல்வேன். தேவைப்பட்டால் அந்த நடிகையை இதில் இரண்டாவது எதிர் மனுதாரராகவும் சேர்ப்பேன். விஜய் உளவியல் ரீதியாகவே சரியில்லாதவர். என்னை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்தார். பொருளாதார விஷயத்திலும் நெருக்கடியை கொடுத்தார்' என ஏகப்பட்ட விஷயங்களை குறிப்பிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்களால் கண்டிப்பாக விஜய்யின் இமேஜ் டேமேஜ் ஆகியிருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள முடிகிறது.
பற்றி எரியும் பஞ்சாயத்து: பொதுவாக விஜய்க்கு பெண்களிடம் நல்ல இமேஜ் இருக்கிறது. இப்போதோ, கட்டிய மனைவியையே இப்படி நடத்தியிருக்கிறார் என்ற பேச்சுக்கள் அவரை நோக்கி பாய தொடங்கியிருக்கின்றன. அவர் வாயை திறந்து இதிலாவது பேசுவார் என்று பார்த்தால்; இதிலும் வழக்கபோல் சைலெண்ட் மோடுக்கு போய்விட்டார். மாதர் சங்கம் எல்லாம் அவருக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்திருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க ரசிகர்களும், தவெகவினரும் எல்லை மீறி சென்று சங்கீதாவை வசை சொற்களால் பேச தொடங்கிவிட்டார்கள். அதை தடுப்பது விஜய் கைகளில்தான் இருக்கிறது.
ஏ.வெங்கடேஷ் பேட்டி: இந்நிலையில் விஜய்க்கும், சங்கீதாவுக்கும் காதல் மலர்ந்தபோது விஜய்யை வைத்து நிலா வா படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் பேசிய அவர், "விஜய்க்கும், சங்கீதாவுக்கும் காதல் மலர்ந்தபோது நான் அவரை வைத்து நிலா வா படம் ஷூட்டிங் செய்துகொண்டிருந்தேன். அப்படத்துக்கு கிட்டத்தட்ட விஜய்தான் தயாரிப்பாளர். அவரது தந்தைதான் அத்தனை வேலைகளையும் பார்த்தார். ஒருமுறை அவரிடம், விஜய்க்கும், லண்டனை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம்னு சொல்றாங்களே என கேட்டேன். முதலில் அப்படி எல்லாம் இல்லை என சொல்லிவிட்டு; பிறகு சின்னதாக ஸ்மைல் செய்துவிட்டு எஸ்.ஏ.சி சென்றுவிட்டார். நான் பாதி உறுதி செய்துகொண்டேன்.
ஷூட்டிங் வந்த சங்கீதா: பிறகு ஒரு நாள் பாடல் ஷூட்டிங்கின்போது என்னிடம் என்னுடைய டீமில் ஒருவர் வந்து, விஜய் திருமணம் செய்துகொள்ளப்போகிற பெண் வந்திருக்காங்க என சொன்னார். அப்படியே ஷூட்டிங் ஸ்பாட் முழுக்க சங்கீதா வந்திருக்கும் செய்தி பரவிவிட்டது. எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம் பேராக விஜய் அமர்ந்திருக்கும் இடத்தை தாண்டி வேறு ஏதோ வேலை போல் சென்றார்கள். அதை விஜய்யும் கவனித்தார். நானும் அதே மாதிரி சென்றுவிட்டு வந்தேன். நாங்கள் போனபோதெல்லாம் விஜய் மட்டும்தான் அமர்ந்திருந்தார். சங்கீதாவை காணவில்லை.
கொஞ்ச நேரம் கழித்து வந்த விஜய் என் தோளில் கை போட்டு, என்ன அண்ணா எல்லோரும் வந்து என்னை பார்க்குறாங்க. நான் கட்டிக்கபோற பொண்ண பார்க்கத்தானே.. லண்டன்லேர்ந்து வந்தாங்க.. ஏர்போர்ட் போறதுக்கு முன்னாடி என்னை பார்த்துட்டு போறாங்க' என சொல்லி முடித்துக்கொண்டார். பிறகு திருமணத்துக்கெல்லாம் அழைக்கவில்லை. கொஞ்ச வருடங்கள் கழித்து பகவதி படத்தின் கதை சொல்லப்போகும்போது சங்கீதாவை பார்த்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications















