ஏ.ஆர்.ரஹ்மான் இல்லைனா இவர் இல்லை.. யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளரான கதை தெரியுமா?
சென்னை: இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா 26 வருடங்களை நிறைவு செய்திருக்கும் சூழலில் அவர் இசையமைப்பாளர் ஆனது குறித்த ப்ளாஷ்பேக்
இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா. கடந்த 26 வருடங்களாக இசை மூலம் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. யுவனின் இசை இல்லாமல் ஒரு நாளைக்கூட ரசிகர்கள் கடப்பது கிடையாது. அந்த அளவுக்கு அவர் இசையின் மூலம் ரசிகர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறார்.

யுவன் சாம்ராஜ்ஜியம் எப்போது ஆரம்பித்தது?
1997ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தில் அறிமுகமானார் யுவன் ஷங்கர் ராஜா. அதற்்கு பிறகு ஒன்றிரண்டு படங்களில் வேலை செய்த யுவன் ஷங்கர் ராஜாவுக்கு 1999ஆம் ஆண்டு பொற்காலம் எனலாம். அந்த ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார், உனக்காக எல்லாம் உனக்காக ஆகிய இரண்டு படங்களிலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பெரிதும் பேசப்பட்டது. சொல்லப்போனால் யுவன் ஷங்கர் ராஜாவின் ராஜ்ஜியம் அப்போதிருந்துதான் ஆரம்பித்தது. இந்த இரண்டு படங்களுக்கு பிறகு அவர் இசையமைத்த ரிஷி, தீனா, வின்னர், துள்ளுவதோ இளமை, நந்தா, மனதை திருடிவிட்டாய், மௌனம் பேசியதே, ராம் என யுவன் இசையமைத்த படங்களின் பாடல்கள் அனைத்துமே ஹிட்டாகின.

ரீமிக்ஸ் கலாசாரத்தை உருவாக்கிய யுவன் ஷங்கர் ராஜா
இப்படி வரிசையாக ஹிட் கொடுத்துக்கொண்டிருந்தாலும் மறுபக்கம் ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், தேவா என இன்னொரு படை இருந்தது. நிலைமை இப்படி சென்றுகொண்டிருக்க வித்தியாசத்தை விரும்பிய யுவன் ஷங்கர் ராஜா 2003ஆம் ஆண்டு வெளியான குறும்பு படத்தில் முதல்முதலாக, 'ஆசை நூறு வகை' பாடலை ரீமிக்ஸ் செய்து அந்த கலாசாரத்தை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு பலரும் ரீமிக்ஸ் கலாசாரத்துக்குள் சென்றது அனைவரும் அறிந்தது.

யுவன் அமைத்த மேஜிக் கூட்டணி
யுவன் ஷங்கர் ராஜாவின் பெரிய பலமே அவர் எந்த இயக்குநருடன் இணைந்தாலும் அந்த கூட்டணியை தன் பாடல்கள் மூலம் மேஜிக் கூட்டணியாக மாற்றிவிடுவதுதான். அப்படி அவர் செல்வராகவன், அமீர், விஷ்ணுவர்தன், ராம், வெங்கட் பிரபு என இணைந்த இயக்குநர்களோடு எல்லாம் மேஜிக் செய்தார். அதிலும் பாடலாசிரியர்களுடனான அவரது கூட்டணி அலாதியானது. மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாருடன் அவர் இணைந்த கொடுத்த பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழிக்க முடியாதவை. முத்துக்குமார் மட்டுமின்றி சினேகன், பா.விஜய் என இணைந்தவர்களோடு எல்லாம் வரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இசை அமைத்தார். தற்போதைய இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருக்கும் யுவன் இசையமைக்க வந்து 26 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளரான கதை
இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா 26 வருடங்களை நிறைவு செய்திருந்தாலும் அவருக்கு ஆரம்பத்தில் இசையமைக்க வேண்டும் என்பதில் பெரிய ஆர்வம் இல்லை. தான் ஒரு பைலட்டாக வேண்டும் என்பதுதான் அவருடைய கனவாகவும், லட்சியமாகவும் இருந்தது. ஆனால் அவர் இசையமைப்பாளர் ஆனதற்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் காரணம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

ஏ.ஆர்.ரஹ்மான்தான் காரணம்
ஒருமுறை யுவன் ஷங்கர் ராஜா பள்ளி சென்றபோது அங்கு அவருடைய உறவினர் ஒருவர் யுவனிடம் வந்து, 'ஏ.ஆர்.ரஹ்மான பார்த்தியா எப்டி மியூசிக் போடுறார்னு. இனி அவர்தான் தமிழ் சினிமாவை ரூல் செய்யப்போகிறார். இளையராஜா இனி அவ்வளவுதான்' என கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த யுவன் ஷஙகர் ராஜா, 'என்ன இது இத்தனை வருஷமா எங்கே போனாலும் இளையராஜா இளையராஜா என்றுதானே சொல்வார்கள். இப்போது எல்லோரும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரை உச்சரிக்கிறார்களே' என்று யோசித்திருக்கிறார்.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த யுவன் ஷங்கர் ராஜா அன்றைய இரவு முழுவதும் இதனையே நினைத்துக்கொண்டிருந்திருக்கிறார். அந்த சமயத்தில், 'இசையில் இருக்கும் நம் அப்பாவின் மரபு விட்டுப்போகக்கூடாது. எனவே நாமும் இசையமைப்பாளராக வேண்டும்' என்ற முடிவை எடுத்திருக்கிறார். இதன் பிறகுதான் தன்னுடைய பைலட் கனவை வெளியே பறக்கவிட்டு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை உள்ளே வளர்த்திருக்கிறார் யுவன்.


Click it and Unblock the Notifications











