ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய ஜென்டில்மேன் தெரியுமா?.. ஒத்துக்கிட்டா அவ்வளவுதான்..தயாரிப்பாளர் ஓபன் டாக்
சென்னை: ரஜினியின் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அவர் இப்போது கூலி படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். கண்டிப்பாக இது தமிழ் சினிமாவில் பெரிய ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள். இந்தப் படத்தை முடித்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். அதன் ப்ரோமோ வீடியோ சமீபத்தில்தான் வெளியானது.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 50 வருடங்கள் வரை கோலிவுட்டில் தனது தாக்கத்தை தவறாமல் செலுத்திவருகிறார். நடை, உடை, பாவனை, பேச்சு என அத்தனையிலும் ஸ்டைலை கொண்டிருக்கும் ரஜினியை ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையில் இருக்கும் பலரும் ரோல் மாடலாக ஏற்றிருக்கின்றனர். முக்கியமாக அவரது எளிமையை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். மேலும் அதனால்தான் அவர் இவ்வளவு பெரிய உயரத்துக்கு சென்றிருப்பதாகவும் கூறுவார்கள்.

வேட்டையன்: அவரது நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. த.செ.ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அதேசமயம் ரஜினிகாந்த்தின் நடிப்புக்கும், இந்தக் கதையில் அவர் நடிக்க ஒத்துக்கொண்டதற்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். இருப்பினும் ரஜினிக்காக ஞானவேல் தனது மேக்கிங்கில் நிறைய காம்ப்ரமைஸ் செய்துவிட்டார் என்றும் விமர்சனங்கள் எழ தவறவில்லை.
கூலி ரஜினி: வேட்டையன் படத்தை முடித்திருக்கும் ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் நாகார்ஜுனா, அமீர் கான், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. கண்டிப்பாக இந்தப் படத்தை மிகப்பெரிய ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்று லோகேஷும், ரஜினியும் முனைப்போடு உழைத்துவருவதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
ஜெயிலர் 2: கூலி படத்தை முடித்துவிட்டு குட்டி ரெஸ்ட் எடுக்கும் ரஜினிகாந்த் அடுத்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். இதனை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். படத்தின் முதல் பாகம் அட்டகாசமான வெற்றியை பெற்றது. இதனால் இரண்டாவது பாகத்தையும் அப்படியே கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில்தான் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது. இப்படி இந்த வயதிலும் படு பிஸியாக இருக்கும் ரஜினி குறித்து தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
சரவணன் பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "கதாநாயகர்களில் ஜென்டில்மேன் என்றால் அது ரஜினிகாந்த்தான். அப்படி ஒரு நல்ல மனிதர். முரட்டுக்காளை திரைப்படம் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதுவரை அவர் எமோஷனல், சென்ட்டிமென்ட், ஃபெர்பார்மன்ஸ் என இருந்தார். இந்தப் படத்தில்தான் அவரை முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக மாற்றினோம்.
ஒருமுறை அவர் என்னிடம் நான் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருக்க வேண்டியவன். ஆனால் நீங்களோ என்னை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிவிட்டீர்கள் என்று சொன்னார். உடனே நான் அதனால்தான் சார் உங்களுக்கு இவ்வளவு ரசிகர்கள், சம்பளம் என்று கிண்டலாக சொன்னேன். அவரை பொறுத்தவரை ஒரு படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் என்றால் அது நன்றாக வருவதற்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











