HBD Balakrishna - தமிழ் தண்ணி குடித்து வளர்ந்த உடம்பு அது.. பிறந்தநாள் வாழ்த்துகள் பாலகிருஷ்ணா
சென்னை: Happy Birthday Balakrishna (பிறந்தநாள் வாழ்த்துகள் பாலகிருஷ்ணா) இன்று பிறந்தநாள் கொண்டாடும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா விழா ஒன்றில் பேசுகையில் இது தமிழ் தண்ணி குடித்து வளர்ந்த உடம்பு என்று எமோஷனலாக பேசினார்.
தமிழ்நாட்டில் சினிமா வழியில் வந்து ஆட்சி செய்தவர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் இருக்கின்றனர். அதேபோல் ஆந்திராவில் சினிமா வழியில் வந்து ஆட்சியை பிடித்தவர் என்.டி.ராமாராவ். என்டிஆர் என அழைக்கப்படும் ராமாராவ் தமிழில் கர்ணன் (சிவாஜி நடித்த கர்ணன்) படத்திலும் நடித்திருக்கிறார். அவருக்கு மொத்தம் இருக்கும் பத்து பிள்ளைகளில் ஆறாவதாக பிறந்தவர் பாலகிருஷ்ணா.

பாலையா எனும் பாலகிருஷ்ணா: என்டிஆரின் ஆறாவது மகனான பாலகிருஷ்ணாவும் தனது தந்தையின் வழியில் பயணித்து சினிமாவில் நடிகரானார். என்டிஆர் இயக்கிய தத்தம்மா கலா என்ற படத்தின் மூலம் 1974ஆம் ஆண்டு மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பாலகிருஷ்ணா. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் 1983ஆம் ஆண்டுவரை கதாநாயகனாக அறிமுகமாகாமல் இருந்தார்.
ஹீரோ பாலகிருஷ்ணா: இந்தச் சூழலில் சந்தானபாரதி - பி.வாசு இணைந்து தெலுங்கில் இயக்கிய சாகசமே ஜீவிதம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் பாலகிருஷ்ணா. அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சாகசமே ஜீவிதம் படம் பெரும் வரவேற்பைப் பெற்றதால் அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து கதாநாயகனாக அறிமுகமானார். அந்தவகையில் 1985ஆம் ஆண்டு மட்டும் அவர் நடிப்பில் மொத்தம் ஆறு படங்கள் வெளியாகின.
தொடர்ந்து ஹீரோதான்: அவர் நடித்த படங்கள் வெற்றி தோல்வி என மாறி மாறி ரிசல்ட்டுகளை கொடுத்தன. தோல்வி படங்கள் வந்தாலும் பாலகிருஷ்ணாவுக்கென்று ரசிகர்கள் கூட்டம் பெருகியது. இதன் காரணமாக நூறு படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்துவிட்டார் பாலகிருஷ்ணா. சமீபத்தில் அவர் ஹீரோவாக நடித்து வீரசிம்ஹா ரெட்டி படம் வெளியானது. அடுத்ததாக பகவந்த் கேசரி என்ற படமும் வெளியாகவிருக்கிறது.இதற்கிடையே அரசியலில் என்ட்ரி ஆகி தெலுங்கு தேசம் கட்சியின் எம்பியாகவும் இருக்கிறார் அவர்.
சர்ச்சைகளின் நாயகன்: கதாநாயகனாக அவர் பிரபலமடைந்த அளவுக்கு சர்ச்சைகளில் சிக்கியும் பிரபலம் அடைந்தார். ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய காலணியை அணிவிக்க சொல்லி உதவியாளர் ஒருவரை அடித்தது, தன்னுடன் செல்ஃபி எடுக்க வருபவர்களின் மொபைல் ஃபோன்களை தட்டிவிடுவது, பட விழா ஒன்றில் தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் தன்னுடைய மொபைல் ஃபோனை அசிஸ்டெண்ட்டிடம் மேடையில் இருந்தபடி தூக்கி எறிந்தது என அவரது ஒவ்வொரு செயல்பாடும் அதகளமாகத்தான் இருக்கும்.
அறிவியலுக்கு எதிரானவரா?: அதேபோல் பாலகிருஷ்ணாவின் படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகள் பெரும் ட்ரோல்களை சந்திப்பவை. உதாரணமாக அவர் நடித்த பல்நதி பிரமநாயுடு படத்தில் ஒற்றை விரலில் அதிவேக ரயிலை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவது, விஜயேந்திர வர்மா படத்தில் துப்பாக்கியில் சுட்டு பறக்கும் விமானத்தை வீழ்த்தும் காட்சி, அகண்டா படத்தில் ஒரே உதையில் ஸ்கார்ப்பியோ காரை பல கிலோமீட்டர் திருப்பி அனுப்புவது என அவர் நடித்த பல காட்சிகள் அறிவியலுக்கு எதிராக இருப்பதாக ரசிகர்கள் கூறுவதுண்டு.
கலங்கிய பாலகிருஷ்ணா?: அதேசமயம் இயக்குநர்கள் சொல்லும் காட்சிகளை எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் ஒத்துக்கொள்வேன். அதனால்தான் இதுபோன்ற காட்சிகளை ஒத்துக்கொண்டேன். சொல்லப்போனால் அந்த மாதிரி இயக்குநர்களால்தான் எனது திரை வாழ்க்கை இவ்வளவு கிண்டலுக்கு ஆளாகியிருப்பதாக அவர் தனது நெருங்கிய வட்டாரத்திடம் கூறியதாகவும் ஒரு தகவல் டோலிவுட்டிலும், கோலிவுட்டிலும் உலாவுவது உண்டு.
தமிழ் தண்ணி குடித்து வளர்ந்த உடம்பு: இந்நிலையில் தமிழ் சினிமா ஸ்டண்ட் யூனியன் 50ஆவது ஆண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருந்தார் பாலகிருஷ்ணா. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழ்நாட்டினை என்னால் மறக்கவே முடியாது.ஏனென்றால் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த மண்ணில்தான். தமிழ் தண்ணி குடித்து பிறந்து வளர்ந்த உடம்பு இது.
பெரியப்பா எம்ஜிஆர், சித்தப்பா சிவாஜி: என் பெரியப்பா எம்ஜிஆர், சித்தப்பா சிவாஜி இருந்த ஊர் இது. ஜூடோ ரத்தினம், விக்ரம் தர்மா உள்ளிட்டோருடன் நான் நிறைய படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவர்கள் எல்லாம் அவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கிறார். ஹீரோ அடிப்பதை பார்த்து எல்லோரும் நமக்கு கை தட்டுகிறார்கள். ஆனால் அவர்களுக்குத்தான் தட்ட வேண்டும். இந்த 50ஆவது ஆண்டு நிகழ்ச்சிக்கு நான் வந்தது மகிழ்ச்சி. 75ஆவது ஆண்டு நிகழ்ச்சிக்கு எனது மகனை அனுப்புவேன். 100ஆவது ஆண்டு நிகழ்ச்சிக்கு எனது பேரனை அனுப்புவேன்" என்றார்.
பாலகிருஷ்ணாவை தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் அதிகம் ட்ரோல் செய்வதுண்டு. ஆனால் அவரோ இந்த உடம்பு தமிழ் தண்ணி குடித்து வளர்ந்த உடம்பு என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். தமிழ் தண்ணீர் குடித்து வளர்ந்த பாலகிருஷ்ணாவுக்கு, தமிழ் பில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











