ரஜினியின் பிளாக் பஸ்டர் படத்துக்கே கரெக்ஷன் சொன்ன பாக்யராஜ்.. திரைக்கதை மன்னன்னா சும்மா?
சென்னை: இந்தியத் திரையுலகில் 'திரைக்கதை மன்னன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், கதையை மட்டுமல்ல திரைக்கதையையும் வேறு கோணத்தில் யோசித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியவர். அவர் எழுதிய படங்கள் மட்டுமல்ல, பிற இயக்குநர்களின் படங்களையும் திரைக்கதை ரீதியாக அலசி ஆராய்ந்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வார். அவர் மறைந்த நிலையில் அவர் குறித்த பல தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி நடிப்பில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'தளபதி' படத்தின் கிளைமாக்ஸ் குறித்து பாக்யராஜ் கூறிய விமர்சனம் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் எல்லாக் காலங்களிலும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக 'தளபதி' பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் - மம்மூட்டி நட்பு, மணிரத்னத்தின் திரைக்கதை, இளையராஜாவின் இசை என ஒவ்வொரு அம்சமும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இருப்பினும், படம் வெளியான பிறகு ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பாக்யராஜ், படத்தின் கிளைமாக்ஸ் மட்டும் தனக்கு முழுமையான திருப்தியை தரவில்லை என்று வெளிப்படையாக கூறியதாக பின்னர் பகிர்ந்து கொண்டார்.

கிளைமாக்ஸ்தான் குறை: பாக்யராஜின் கருத்துப்படி, படத்தின் இறுதிக்காட்சியில் தேவா (மம்மூட்டி), சூர்யாவிடம் (ரஜினிகாந்த்) கலெக்டர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினரை கொன்றுவிட்டு வரும்படி கூறும் தருணத்திலேயே, சூர்யா "அர்ஜுன் என் தம்பி... அது என் குடும்பம்... இந்த உண்மை எனக்குத்தான் இப்போதுதான் தெரிந்தது" என்று கூறிவிடுகிறார். இந்த ஒரு வசனமே அதுவரை கட்டமைக்கப்பட்டிருந்த கதையின் விறுவிறுப்பை குறைத்துவிட்டதாக பாக்யராஜ் கருதியுள்ளார்.
இப்படி இருந்திருந்தால் இன்னும் தாக்கம் அதிகம்: தனது பார்வையை ரஜினியிடம் விளக்கிய பாக்யராஜ், அந்த உண்மையை உடனடியாக சொல்லாமல், சூர்யா தனது நண்பன் தேவாவுக்காக அந்த பணியை ஏற்றுக்கொள்வது போல கதையை நகர்த்தி, கடைசி நேரத்தில் தான் உண்மையை வெளிப்படுத்தியிருந்தால் ரசிகர்களுக்கு இன்னும் பெரிய அதிர்ச்சியும், உணர்ச்சிகரமான தாக்கமும் கிடைத்திருக்கும் என்று கூறியுள்ளார். அதனால் கதையின் சஸ்பென்ஸும், கிளைமாக்ஸின் எமோஷனலும் பல மடங்கு உயர்ந்திருக்கும் என்பதே அவரது கருத்தாக இருந்தது.

வியந்த ரஜினி: பாக்யராஜின் மாற்று கிளைமாக்ஸை முழுமையாக கேட்ட ரஜினிகாந்த், உடனே எழுந்து வந்து அவரது கையைப் பிடித்து, "இப்படி ஒரு கோணத்தில் யோசிக்க முடியுமா?" என்று வியப்புடன் பாராட்டியதாகவும் பாக்யராஜ் பின்னர் நினைவுகூர்ந்துள்ளார். படம் வெளியான பிறகும் திரைக்கதையை இவ்வளவு ஆழமாக அலசி, இன்னும் வலிமையான முடிவை சிந்தித்தது தான் பாக்யராஜை ரசிகர்கள் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடியதற்கு மிகப்பெரிய உதாரணம் என சினிமா ரசிகர்கள் இன்றும் இந்த சம்பவத்தை பகிர்ந்து வருகின்றன


Click it and Unblock the Notifications