பூனைக்காக போடப்பட்ட கேஸ்.. கமல் படத்துக்கு இப்படியும் ஒரு சிக்கலா?.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: கமல் ஹாசன் இந்திய அளவில் ஃபேமஸான நடிகர். இதுவரை 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் தன்னுடைய படங்களை வித்தியாசமாக கொடுக்க வேண்டுமென்பதில் தீவிரமாக இருப்பவர். அந்தப் படங்களுக்கு வரவேற்பு கிடைக்காவிட்டாலும் சோதனை முயற்சிகளை தொடர்ந்து செய்துவருபவர். இந்தச் சூழலில் அவர் நடித்த சிகப்பு ரோஜாக்கள் படம் பற்றிய சுவாரஸ்ய தகவலை இயக்குநர் பாரதிராஜா தெரிவித்திருக்கிறார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கமல் ஹாசன் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இயங்கிவருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் ஒருகட்டத்தில் தவிர்க்க முடியாத ஹீரோவாக மாறினார். ஒருபக்கம் கமர்ஷியல் படங்கள் கொடுத்தாலும் மறுபக்கம் வித்தியாசமான படங்கள் கொடுப்பதிலும் மிகப்பெரிய கவனத்தை வைத்திருந்தார். அப்படி அவர் கொடுத்த படங்கள் ஏராளம் இருக்கின்றன. அந்தப் படங்கள் ரிலீஸானபோது பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் காலங்கடந்து கொண்டாடப்படும்.

சிகப்பு ரோஜாக்கள்: கமல் ஹாசனின் கரியரில் முக்கியமான படங்களில் ஒன்று சிகப்பு ரோஜாக்கள். பாரதிராஜா இயக்கியிருந்த அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். த்ரில்லர் ஜானரில் உருவான அந்தப் படத்தில் கமல் தனது நடிப்பில் படு பயங்கரமான திகிலை கிளப்பியிருப்பார். இன்றுவரை அந்தப் படம் தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாசிக்காக இருக்கிறது. இந்தச் சூழலில் அப்படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா ஒரு பேட்டியில் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்திருக்கிறார்.
பாரதிராஜா பேட்டி: பாரதிராஜா அளித்த அந்தப் பேட்டியில், "கமல் ஹாசன் - ஸ்ரீதேவியை வைத்து நான் இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் படத்தை வெறும் 20 நாட்களில் முடித்தேன். அந்தப் படத்தில் ஒரு கருப்பு பூனை வரும். அந்தப் பூனைக்காக நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். ஏனெனில் கருப்பு பூனை அந்த சமயத்தில் எங்களுக்கு கிடைக்கவே இல்லை. அதேபோல் இந்தப் படத்தின் கதையை கேட்டுவிட்டு எந்த ஹீரோவும் நடிப்பதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் கமல் ஹாசன் உடனடியாக ஒத்துக்கொண்டார்.
படத்தில் பங்களா: படத்தில் வரும் பங்களாவுக்காக பல லொக்கேஷன்களை பார்த்தோம். எதுவுமே செட் ஆகவில்லை. ஒருவழியாக சென்னை தி.நகரில் ஒரு பங்களா எங்களுக்கு செட் ஆனது. பங்களாவுக்கு பட்ட கஷ்டத்தைவிடவும் அந்த கருப்பு பூனைக்காகத்தான் ரொம்ப நாங்கள் கஷ்டப்பட்டோம். ஒருவழியாக கருப்பு பூனையும் எங்களுக்கு கிடைத்துவிட்டது. முதலில் அந்த பூனையை வைத்து இரண்டு நாட்கள் ஷூட்டிங் செய்தபோது எந்தப் பிரச்னையும் வரவில்லை. ஆனால் அடுத்த நாளில் அந்தப் பூனை காணாமல் போய்விட்டது.
பூனைக்காக கேஸ்: பூனை காணாமல் போனதை தெரிந்துகொண்டு பூனையை வளர்த்தவர் கேஸ் போட்டுவிட்டார். கடைசிவரை அந்த பூனையை எங்களால் கண்டுபிடிகக்வே முடியவில்லை. ஒருவழியாக அவரை கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தினோம். அதனையடுத்து அவர் அந்த கேஸை வாபஸ் வாங்கினார். இப்படி பல விஷயங்களை கடந்து அந்தப் படம் முடிக்கப்பட்டது. படமும் சூப்பர் ஹிட்டடித்தது" என்றார். கமல் ஹாசனை வைத்து பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் பாரதிராஜாவுக்கு முதல் படம் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











