50 வருடங்களுக்கு கத்துவோம்.. ரஜினியை சோ இப்படி கலாய்த்திருக்கிறாரே.. என்ன நடந்தது?
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல வருடங்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஒருவழியாக அந்த பாதையில் வருவதற்கான முதல் அடியையும் எடுத்து வைத்திருந்தார் சூப்பர் ஸ்டார். ஆனால் உடல்நலத்தை காரணம் காட்டி அதிலிருந்து பின்வாங்கிவிட்டார். இப்போது விஜய் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்டார். அதை பார்த்து ரஜினியின் ரசிகர்கள் சோகத்தில் ரத்த கண்ணீர் வடிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ரஜினிகாந்த் இந்திய அளவில் செல்வாக்கு உடையவர். தமிழ்நாட்டில் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய எப்போதும் ஒரு ரசிகர் படை தயாராகவே இருக்கிறது. அதன் அடிப்படையில் 90களில் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. அவரும் ஜெயலலிதாவை எதிர்த்து சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார். மேலும் 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - தமாகா கட்சிகள் கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். அந்தத் தேர்தலில் அந்தக் கூட்டணி பெற்ற மெகா வெற்றிக்கு ரஜினியின் வாய்ஸும் ஒரு காரணம் என்ற கருத்து இன்றளவும் இருக்கிறது.

ஆன்மீக அரசியல்: அதற்கு பிறகு அவரிடம் அரசியலுக்கு வருவது குறித்து கேட்டால் ஒன்று காலம் பதில் சொல்லும் என்பார்; இல்லையென்றால் கையை மேலே காட்டி இறைவன் கைகளில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு செல்வார். இப்படிப்பட்ட சூழலில் கிட்டத்தட்டம் 9 வருடங்களுக்கு முன்னதாக தனது ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்த அவர்; அரசியலுக்கு வருவது உறுதி என்றும்; தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் கூறி அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.
ஜகா வாங்கிய ரஜினி: கட்சி தொடங்குவதற்கான வேலைகள் எல்லாம் ஜோராக ஆரம்பித்தன. அந்த நேரத்தில் உடல்நலம் சரியில்லாமல் போனது. அதனையடுத்து உடல்நலத்தை காரணம் காட்டி அரசியல் பிரவேசத்திலிருந்து பின்வாங்கிவிட்டார். அப்படியே காலங்கள் ஓடிவிட்டன. விஜய்யோ இப்போது அரசியலுக்கு வந்து தமிழ்நாடு முதலமைச்சராகிவிட்டார். அதை பார்த்த சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களோ, ரஜினி மட்டும் அரசியலுக்கு வந்திருந்தால் விஜய் இடத்தில் அவர் இப்போது இருந்திருக்க வேண்டும் என கூறுகிறார்கள்.
ரஜினி கான்ஃபிடன்ஸ்தான்: விஜய் முதலமைச்சரான பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினியேகூட, 'நான் அரசியலுக்கு வந்திருந்தால் நூறு சதவீதம் வென்றிருப்பேன். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை' என உறுதியாக சொல்லியிருந்தார். இதற்கிடையே அவர் அரசியலுக்கு வருவதாக சொன்னபோது திமுகதான் அவரை மிரட்டியது. அதை தாங்கும் சக்தி அப்போது அவருக்கு இல்லை என தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா பேசியதும்; அது பெரிய சர்ச்சையையும், கண்டனத்தையும் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டாகும் பேச்சு: இந்நிலையில் மறைந்த சோ தனது நண்பர் ரஜினிகாந்த் குறித்து பேசிய ஒரு வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கைகள் வலுத்த காலகட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் இரண்டு பேரும் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய சோ, "ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என இன்னும் தமிழ்நாட்டில் 50 வருடங்கள் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் போல. அன்றுகூட கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் அவ்வளவு லேசில் மாட்டுவதில்லை. அவரை மாதிரி ஒரு ஆள் அரசியலுக்கு வந்தால் ரொம்ப நல்லது" என்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
