Goundamani: மனைவி மீது கோபப்பட்ட கவுண்டமணி.. ஆனால் அதிலும் நக்கல் தான்.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவால் இன்று அதாவது மே 5 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 67. கவுண்டமணியின் மனைவி இறந்தது திரைத்துறையில் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவரம் தெரிந்தவர்கள் கவுண்டமணியின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்று கொண்டு உள்ளார்கள். இந்நிலையில் கவுண்டமணி தனது மனைவி சாந்தி மீது கோபப்பட்டது குறித்த பழைய சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில், மிக மூத்த நகைச்சுவை நடிகராக உள்ளார். சினிமாவில் இருந்து குறிப்பாக நகைச்சுவை நடிகராக நடிப்பில் இருந்து அவர் விலகி இருந்தாலும், அவ்வப்போது சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக சினிமா நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்வதைத் தவிர்த்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி இறந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மற்றும் சாந்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு சுமித்ரா மற்றும் செல்வி என இரண்டு மகள்கள் உள்ளார்கள். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த சாந்தியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். சிகிச்சை பலனின்றி, இன்று காலை சுமார் 10. 30 மணி அளவில் காலமானார். இவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சத்யராஜ்: கவுண்டமணி திரையில் மட்டும் இல்லாமல், நிஜ வாழ்க்கையில் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர். இன்னும் சொல்லப்போனால், சரியான நக்கல் பிடித்தவர் என்று கூறலாம். இவரது நக்கல் குணம் குறித்து பல திரைப்பிரபலங்கள் தெரிவித்துள்ளார்கள். அப்படியான ஒரு சம்பவம்தான் நடிகர் சத்யராஜ் கூறியது. வழக்கமாகவே கவுண்டமணிக்கு சென்னையில் படப்பிடிப்பு என்றால் மதிய உணவுக்கு வீட்டிற்குச் சென்று விடுவார். ஒருமுறை சத்யராஜ் உடன் ஒரு படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார்.
கவுண்டமணி மனைவி: மதிய உணவு இடைவேளையின் போது சத்யராஜ் புரெடக்ஷன் நிறுவனம் அளிக்கும் உணவை சாப்பிடுகிறார் என்ற தகவலைத் தெரிந்து கொண்ட பின்னர், மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வரவில்லை, புரெடக்ஷன் நிறுவனம் போடும் சாப்பாட்டையே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று போன் செய்து சொல்லியுள்ளார். அதற்கு அவரது மனைவி, ஏற்கனவே எல்லாம் சமைத்தாகிவிட்டது. சாப்பாடு வீணாகப் போய்விடும் வீட்டில் வந்து சாப்பிடச் சொல்லி உள்ளார். படத்தின் கதாநாயகன் சத்யராஜ் இங்குதான் சாப்பிடுகிறார், இன்று ஒருநாள் மட்டும் இங்கு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கவுண்டமணி. ஆனால் அவரது மனைவி, சாப்பாடு வீணாகப் போய்விடும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லியுள்ளார்.

கோபம் & நக்கல்: இதனால் கோபமடைந்த கவுண்டமணி, பேசி முடித்த பின்னர், செல்போனை வேகமாக மேசை மீது போட்டுள்ளார். இதற்கு அருகில் இருந்த சத்யராஜ் ஏன் கோபப்படுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், " வேற என்னப்பா. என்னமோ சிங்கத்தை அடிச்சு கொழம்பு வெச்ச மாதிரியும், புலிய அடுச்சு சமைச்ச மாதிரியும் பேசிட்டு இருக்காங்க. கொஞ்சூண்டு சாப்பாடு, கொஞ்சூண்டு கீரை அதுக்கு இந்த பேச்சு பேசுறாங்க சத்யராஜ்" என்று கவுண்டமணி கூறியதாக சத்யராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தனது மனைவியிடம் கோபத்தை வெளிப்படுத்தும் போதும் நக்கல் குணம் மாறாதவர் கவுண்டமணி என இந்த வீடியோவை பார்த்தவர்கள் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











