பஞ்சாயத்து பேசுறீங்களா?.. துப்பாக்கிய எடுத்துட்டு இங்க வர சொல்லுங்க.. ரஜினியிடம் எகிறிய பாக்யராஜ்
சென்னை: பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து தனது திரை பயணத்தை தொடங்கிய பாக்யராஜ் இந்திய அளவில் மிக பிரபலமான இயக்குநர். திரைக்கதை மன்னன் என்று பெயர் எடுத்த அவர் இப்போது இயக்குவதை நிறுத்திவிட்டார். அவ்வப்போது சில படங்களில் நடித்துவருகிறார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் சூழலில் அவருக்கும் தயாரிப்பாளர் பாலாஜிக்கும் இடையே நடந்த மோதலில் ரஜினிகாந்த் ஒருமுறை மத்தியஸ்தம் செய்ய முயன்றார்.
இந்தியாவின் திரைக்கதை மன்னன் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டவர் பாக்யராஜ். சிம்ப்பிளான கதையைகூட தன்னுடைய திரைக்கதையால் உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்துபவர் அவர். பாரதிராஜாவிடம் முதலில் உதவி இயக்குநராக இருந்தார். உதவி இயக்குநராக மட்டுமின்றி பாரதிக்கு இரண்டு கைகளாகவும் இருந்தவர்தான் பாக்யராஜ். அதன் காரணமாக பாக்யராஜ் மீது பாரதிராஜாவுக்கு அளவு கடந்த பாசம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் அவதாரம்: பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களின் கதை பாக்யராஜுடையதுதான். சூழல் இப்படி இருக்க சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே அதிரிபுதிரி ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி அதே படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரமும் மிக பெரிய அளவில் பேசப்பட்டது. அதனையடுத்து கோலிவுட்டில் செம பிஸியாக ஆரம்பித்தார் பாக்யராஜ்.
பீக்கில் டைரக்டர் பாக்யராஜ்: அதன்படி ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், இது நம்ம ஆளு, சின்னவீடு, ராசுக்குட்டி என ஹிட் மேல் ஹிட்டாக குவித்து பீக்கிற்கு சென்றார். இயக்குநர், நடிகர் என்பது மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் கலக்கியவர். இளையராஜாவுடன் எழுந்த மோதல் காரணமாகத்தான் அவர் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது கவனிக்கத்தக்கது.

என்ன ஸ்பெஷல்?: அவரது படங்கள் என்றாலே அதில் எதார்த்தம் ததும்ப ததும்ப ஓடும். நமது அன்றாட நாட்களில், வீடுகளில் நடக்கும் பிரச்னைகள், சந்திக்கும் மனிதர்களின் இயல்பு உள்ளிட்டவைகளை தனது எழுத்திலும், நடிப்பிலும் கொண்டு வந்து நிறுத்தினார். அதேபோல் பாக்யராஜ் தனது படத்தின் பெயரை டைட்டில் கார்டை போடும் விதமும் கலகலப்பாகவே இருக்கும். உதாரணமாக சின்னவீடு படத்தின் பெயரை சிவனின் தலையில் போட்டு புதுவித ஸ்டைலை உருவாக்கியிருப்பார். அதேபோல், 'இது அனுபவ ரீதியான கதை.. எனக்கல்ல.. நமக்கு? என போட்டும் அதகளம் செய்திருப்பார். இப்படி பல விஷயங்கள் பாக்யராஜின் படங்களில் வித்தியாசமாக இருக்கும்.
மிஸ்டர் இந்தியா: இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். இந்நிலையில் அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் குறித்து பார்க்கலாம். அதாவது ஹிந்தியில் உருவான மிஸ்டர் இந்தியா படத்தை தமிழில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் பாலாஜி விரும்பியிருக்கிறார். அதன்படி இயக்குநராக கே.விஜயனை ஃபிக்ஸ் செய்துவிட்டு; பாக்யராஜை ஹீரோவாக கமிட்டாக்க முடிவெடுத்து அவரிடம் சென்றாராம். அப்போது பாக்யராஜோ, எதற்காக ரீமேக் படம் புதிதாக ஒரு கதையை உருவாக்கலாமே என சொல்ல; பாலாஜியோ ரீமேக் செய்வது என்பதில் உறுதியாக இருந்தாராம்.
பிரச்னை: ஒருவழியாக பாக்யராஜை ஒத்துக்கொள்ள வைத்து ஹீரோயினாக மீனாட்சி சேஷாத்ரியை புக் செய்து ஷூட்டிங்கும் தொடங்கியிருக்கிறது. ஆனால் ஷூட்டிங்கின்போது இயக்குநர் கே.விஜயன் மரணமடைந்துவிட்டார். அதனையடுத்து பாக்யராஜிடம் சென்ற பாலாஜி, 'நீங்கள் விஜயனின் மகன் சுந்தர் விஜயனை அருகே வைத்துக்கொண்டு இயக்கத்தை கவனித்துக்கொள்ள வேண்டும்' என கேட்க; பாக்யராஜும் ஒத்துக்கொண்டார். மேலும் கேமராமேனும் அனுபவமில்லாத புதுமுகம். இவையெல்லாம் சமாளித்து சுந்தரை அருகே வைத்துக்கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் திரைக்கதை மன்னன். அதேசமயம் படத்தில் இயக்கம் என்ற இடத்தில் கே.விஜயன், சுந்தர் கே.விஜயன் என்றுதான் வரும்.
இதற்கிடையே இந்தப் படத்துக்கு சம்பளம் மட்டுமின்றி கோயம்புத்தூர் விநியோக உரிமையையும் தருவதாக பாக்யராஜிடம் பாலாஜி உறுதி அளித்திருக்கிறார். ஆனால் பாலாஜியே கோவையிலும் விநியோகம் செய்யும் செயல்களில் இறங்க; அது பாக்யராஜுக்கு தெரியவந்ததை அடுத்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு பஞ்சாயத்தை எடுத்து சென்றிருக்கிறார். அது கைகொடுக்காமல் போக ஃபெப்ஸிக்கு கொண்டு செல்ல; அங்கும் பாலாஜி தனது செல்வாக்கை பயன்படுத்தி ஃபெப்ஸியின் தலைவரையே சிறைக்குள் தள்ளியிருக்கிறார். இதனால் போராட்டங்களும் வெடித்தன.
ரஜினி என்ட்ரி: வேறு வழியில்லாமல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் பாக்யராஜ் சென்று; ஃபெப்ஸி தலைவரை வெளியே எடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலைமையில் பாக்யராஜை சந்திக்க வந்த ரஜினி, 'பாலாஜியுடன் மோதல் எதற்கு?.. அவர் ஒரு முரட்டு ஆள். துப்பாக்கிய காட்டி மிரட்டுகிறார்' என சொல்ல; உடனே கொதிப்படைந்த பாக்யராஜோ, 'பாலாஜி துப்பாக்கியை எடுத்து நீட்டியவுடன், 'என்ன பாக்யராஜை சுட்டுவிடுவேனு சொல்கிறீர்கள். நீங்கள் செய்வது பெரிய தவறு; அராஜகம், அநாகரீகம் என்று அவரிடம் சொல்லியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு என்னிடம் வந்து பஞ்சாயத்து பேசுகிறீர்கள்.
ஒதுங்கிய ரஜினி: அவருக்குத்தான் (பாலாஜி) என் வீடு தெரியுமே. இங்கே வந்துதான் என்னை அந்தப் படத்துக்கு கமிட் செய்தார். எனவே அவர் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு இங்கே வர சொல்லுங்க' என கூறினார். உடனே ரஜினியோ, 'இல்லை நீங்கள் செய்வது தவறு என்று பாலாஜியிடம் நான் அந்த இடத்திலேயே சொல்லிவிட்டேன்' என்றாராம். அதற்கு பிறகு இனியும் இந்தப் பிரச்னையில் நாம் தலையிடுவது சரியில்லை என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டாராம் ரஜினிகாந்த். இந்தப் பிரச்னையெல்லாம் ஓய்ந்த பிறகு பாலாஜிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. அந்த சமயத்தில் பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் நேரில் சென்று பாலாஜியை நலம் விசாரித்துவிட்டு வந்தாராம். இந்த சம்பவத்தை எழுத்தாளர் R.P. ராஜநாயஹம் தான் எழுதிய சினிமா எனும் பூதம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











