எனக்கு குழந்தை பிறக்குமானு சந்தேகம்.. 37 வயதில் தான் கர்ப்பமானேன்.. மனமுருகி பேசிய கலா மாஸ்டர்!
சென்னை: தமிழ் சினிமாவில் முக்கியமான டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் தான் கலா. இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஒரியா என பல்வேறு மொழிகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் பணியாற்றியுள்ளார். தற்போது நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கும் கலா மாஸ்டர், தனது திருமணம் குறித்தும், மகன் பிறந்தது பற்றியும் மனமுருகி பேசி உள்ளார்.
நடன இயக்குனர் ரகுராமின் மூலம் திரைத்துறைக்கு 12 வயதில் க்ரூப் டான்சராக வந்தவர் தான் கலா. இவர் புன்னகை மன்னன் படத்தில் நடன இயக்குநராக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து, பல முன்னணி இயக்குநர்களின் படத்திலும், முன்னணி நடிகர்களுக்கு இவர் பிடித்தமான நடன இயக்குநராக மாறினார். 1990 கால கட்டத்தில் கலா மாஸ்டர் கொடிகட்டிப்பறந்த நிலையில், தற்போது அவரது சகோதரியான பிருந்தா தான் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு டான்ஸ் கோரியோகிராப் செய்து வருகிறார். நடன இயக்குனர் என்பதை தாண்டி சூப்பர் டான்சர், சூப்பர் டான்சர் ஜூனியர், ஓடி விளையாடு பாப்பா, மானாட மயிலாட, போட்டிக்கு போட்டி போன்ற அனைத்து நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்றி வருகிறார். இதுமட்டுமில்லாமல் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில், விஜய் சேதுபதியின் அக்காவாக நடித்து நடிகையாக மாறினார்.

கலா மாஸ்டர்: 7 பெண்கள் கொண்ட ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கலா மாஸ்டர், 1997 ஆம் ஆண்டு தொழிலதிபர் கோவிந்தராஜனை மணந்தார். ஆனால், இந்த திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்காமல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து, 2004 ஆம் ஆண்டு மகேஷ் என்பவரை மணந்தார். இந்த தம்பதிகளுக்கு 2007ம் ஆண்டு வித்யூத் என்கிற மகன் உள்ளார். இந்நிலையில், நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலா மாஸ்டர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி உள்ளார்.

37 வயதில் கர்ப்பம்: அதில், எனக்கு கல்யாணம் ரொம்ப லேட்டாகத்தான் நடந்தது, எனக்கு குழந்தை பிறக்குமா என்றெல்லாம் கூட பலர் பேசினார்கள். அப்போது என்னுடை 37 வயது வயதில் தான் நான் கர்ப்பமானேன். அப்போது மருத்துவர்கள் எல்லாம், ரொம்ப லேட் பிரக்னன்ஷி இதுல கவனமாக இருக்க வேண்டும் என்றார்கள். ஆனால், அப்போது தான் நான் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பலர் கவனமாக இருக்க வேண்டும் என சொல்லியும் நான் அதை கட்டுக்கொள்ளாமல், எல்லா நிகழ்ச்சிக்கும் செல்வேன். எங்க அம்மா கால கட்டிப்போட்டு எங்கேயும் போகக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், நான் நைட்டோட நைட்டா கால் கட்டை அவிழ்த்துக்கொண்டு விஜய்யின் பட ஷூட்டிங்கிற்கு சென்றுவிடுவேன்.
எனக்கு எப்போதுமே தைரியம் அதிகம், நடப்பது நடக்கட்டும் என்று அந்த நேரத்தில் எப்போதும் பிஸியாகவேத்தான் இருந்தேன். அந்த நேரத்தில் தான் என் மகன் எனக்கு தெய்வமாக பிறந்தான். அவன் பிறந்து தான் வாழ்க்கையில் எல்லாமே கிடைத்தது. இப்போது என் குடும்பமே ரொம்ப சந்தோஷமாக மகிழ்ச்சியா சூப்பராக இருக்கு என்று கலா மாஸ்டர் தனது மகன் குறித்து மனமுருகி பேசினார்.


Click it and Unblock the Notifications











