நான் அப்போது அதை சொல்லியிருந்தால் சிரித்திருப்பார்கள்.. தனுஷ் இப்படி ஓபனாக சொல்லிட்டாரே!
சென்னை: தனுஷ் இப்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்துவருகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் படம் தவிர்த்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், இளையராஜா பயோபிக், ஹாலிவுட்டில் ஒரு படம் என படு பிஸியாக இருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
துள்ளுவதோ இளமை படத்தில் ஹீரோவாக தனுஷ் அறிமுகமானபோது அவரை கிண்டல் செய்யாதவர்களே யாரும் இல்லை. இவரெல்லாம் ஹீரோவா; பென்சிலுக்கு ட்ரெஸ் போட்ட மாதிரி இருக்கிறது என்று ஏகப்பட்ட பேர் எல்லை மீறி விமர்சனம் செய்தார்கள். ஆனால் தனுஷோ அதனை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. தன்னுடைய வேலை திறமையை வளர்த்துக்கொண்டு தான் வளர்வது மட்டும்தான் என்பதில் உறுதியாக இருந்து அதன்படியே செய்தார். இதனால் அவருக்கு ஹிட் படங்களும் அமைந்தன; ரசிகர்களும் உருவாகினார்கள்.

இந்தியாவின் சிறந்த நடிகர்: தமிழில் மெல்ல மெல்ல வளர்ந்த அவர் இப்போது இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்கிற பெயரை பெற்றிருக்கிறார். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை அனாயசமாக செய்து முடிக்கும் வல்லமை உடையவர் அவர். அதேபோல் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரை எல்லாம் வளர்த்துவிட்டதிலும் தனி கவனம் பெற்றார். அதேபோல் ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதை பெற்ற அவர் பாலிவுட்டிலும் தனக்கான இடத்தை தக்க வைத்திருக்கிறார்.
அடுத்த படங்கள்: நடிப்பு மட்டுமின்றி பாடல்கள் பாடுவது, எழுதுவது, படம் இயக்குவது என பிஸியாக இருக்கிறார். இதுவரை அவர் பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களை இயக்கியிருக்கிறார். இவற்றில் ப.பாண்டி ஹிட்; ராயன் ஃப்ளாப். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படத்தில் இயக்குநராக தனுஷ் தன்னை நிரூபிப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
செம பிஸி தனுஷ்: ஒருபக்கம் இயக்குநராக கலக்கும் அவர் நடிப்பில் அசுர வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறார். குபேரா, இட்லி கடை, மாரி செல்வராஜ் இயகக்த்தில் ஒரு படம், அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், இளையராஜா பயோபிக், ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம் என படு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார். தற்போது இட்லி கடை ஷூட்டிங்கில் மும்முரமாக இருந்த அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தனுஷின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தனுஷின் பேட்டி: சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில்,"2002ஆம் ஆண்டு நான் நடிக்க வந்த புதிதில் வருங்காலத்தில் தேசிய விருது வெல்வேன் என்றோ, ஹாலிவுட் படங்களில் நடிப்பேன் என்றோ சொல்லியிருந்தால் நிச்சயம் எல்லோரும் சிரித்திருப்பார்கள். எனவே ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பு சொல்லக்கூடாது என்பதை கற்றுக்கொண்டேன். எனது மீது உச்சக்கட்ட நம்பிக்கை வைத்தேன்" என்றார். முன்னதாக தனுஷ் சர்வதேச அளவில் மின்னக்கூடிய ஒரு நடிகராக உயர்வார் என்று மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா கணித்திருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











