ரஜினிகாந்த் என்னிடம் அதை பற்றி கேட்கக்கூட இல்லை.. அட இவ்வளவு ஜென்டில் மேனா?.. ஓபனாக பேசிய தனுஷ்
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பத்து வருடங்களுக்கும் மேலாக சுமூகமாக நகர்ந்துகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்பு விரிசல் விழுந்தது. நாளாக நாளாக அந்த விரிசல் மேலும் விரிவடைந்து கடந்த வருடம் சட்டப்பூர்வமான விவாகரத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. தற்போது இரண்டு பேரும் பிரிந்து வாழும் சூழலில் தனுஷின் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
ரஜினிகாந்த்தை நேரில் பார்த்துவிட மாட்டோமா என்று பலர் ஏங்கிக்கொண்டிருக்கும் சூழலில்; திரைத்துறைக்கு வந்து சில வருடங்களிலேயே ரஜினி வீட்டு மருமகன் ஆனார் தனுஷ். அவரும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் காதல் கொண்டேன் பட சமயத்தில் சந்தித்து பழகி காதலிக்க ஆரம்பித்தார்கள். தீவிரமான யோசனைக்கு பிறகு தனுஷுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தார் ரஜினி. அவர்களது திருமணம் கடந்த 2004ஆம் ஆண்டு சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அந்தத் திருமணத்தை பார்த்து பலரும் பொறாமைப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஏன் பொறாமை?: ஏனெனில் ஐஸ்வர்யாவை திருமணம் செய்த சமயத்தில் தனுஷ் இப்போது இருக்கும் அளவுக்கு ஃபேமஸான நடிகர் இல்லை. ஒரு சில படங்களே நடித்திருந்தார். அப்படிப்பட்ட நிலையில் போயஸ் கார்டனில் பெண் எடுத்துவிட்டாரே என்று சீனியர் நடிகர்களேகூட ஆச்சரியம் கலந்து பொறாமையுடனேயே பார்த்தார்கள். ஆனால் தனுஷோ ரஜினியின் நிழலில் மட்டும் வாழ்ந்துவிடக்கூடாது என்பதில் மிக தெளிவாக இருந்து தனது திறமையை வளர்த்து நூறு சதவீதம் உழைப்பை தனது ஒவ்வொரு படத்திலும் போட்டார்.
தனுஷின் மாமனார் ரஜினிகாந்த்: இதன் காரணமாக ரஜினியின் மருமகன் தனுஷ் என்ற நிலை கடந்து தனுஷின் மாமனார் ரஜினிகாந்த் என்ற நிலை உருவானது. இந்திய அளவில் மிக முக்கியமான நடிகராக மாறியிருக்கிறார் தனுஷ். ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதையும் வென்றிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட் என அவரது எல்லைகள் விரிவடைய தொடங்கியிருக்கின்றன. மேலும் ரஜினிகாந்த்தை வைத்து காலா என்கிற திரைப்படத்தையும் தயாரித்தார்.

விவாகரத்து: ரஜினி மகளுக்கும் தனுஷுக்கும் திருமண வாழ்க்கை சுமூகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை சில வருடங்களுக்கு முன்பு அவர்களது உறவில் விரிசல் விழ தொடங்கியது. அதற்கு யூகங்களாக இன்றுவரை பலர் பல காரணங்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தாங்கள் இரண்டு பேரும் பிரிந்து தனித்தனி பாதையில் செல்வதாக அறிவித்தார்கள். ஆனால் விவாகரத்து மனுத்தாக்கல் செய்யாமல் இருந்தார்கள்.
இதன் காரணமாக அவர்கள் மீண்டும் இணைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்பட்டது. இரு வீட்டாரும் அவர்களை எப்படியாவது மீண்டும் சேர்த்து வைத்திட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை முன்னெடுத்தார்கள். ஆனால் அவர்களோ நீதிமன்றத்துக்கு சென்று சட்டப்பூர்வமாக விவாகரத்தை பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ரஜினியின் மகளை பிரிந்தாலும் ரஜினி மீதான தனுஷின் மதிப்பு இன்றளவும் அப்படியேத்தான் இருக்கிறது.
தனுஷின் பேட்டி: இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து தனுஷ் அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. படிக்காதவன் பட சமயத்தில் பேட்டி கொடுத்த அவரிடம் நெறியாளர், ரஜினி பட டைட்டிலை யூஸ் செஞ்சிருக்கீங்க அவர் என்ன சொன்னார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தனுஷ், 'உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர் அதை பற்றி என்னிடம் கேட்கக்கூட இல்லை. அவரது பெயரை காப்பாற்ற வேண்டும் என்றுதான் எனது மனதில் இருந்தது. காப்பாற்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்' என்றிருந்தார்.


Click it and Unblock the Notifications











