சிக்குபுக்கு ரயிலே ட்யூனே புதுசு இல்லையே.. ஏ.ஆர்.ரஹ்மானை அலறவிட்ட வாலி..காப்பி அடித்தாரா இசைப்புயல்?
சென்னை: உலக அளவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இதுவரை எண்ணிலடங்கா ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். பல பாடல்களை அவர் உருவாக்கினாலும் இதுவரை அவர் காப்பி அடித்ததாக எந்த சர்ச்சையும் எழுந்ததில்லை. ஆனால் இயக்குநர் வெங்கடேஷ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், மறைந்த பாடலாசிரியர் வாலிக்கும் இடையே நடந்த உரையாடலை பகிர; அதை வைத்து பலரும் ரஹ்மான் காப்பி அடித்துவிட்டதாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் அறிமுகமே தேவையில்லை. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இசைத்துறையில் கோலோச்சி வருகிறார். உள்ளூர் விருதுகள் தொடங்கி சர்வதேச விருதுகள் வரை வாங்கி அசத்தியிருக்கிறார். இசைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர் படத்துக்கு படம் புது புது ட்யூன்களை உருவாக்கி ரசிகர்களை மகிழ்வித்துவருகிறார். கடந்த வருடத்தில் அவர் இசையமைப்பில் வெளியான தக் லைஃப், காதலிக்க நேரமில்லை பட பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.
பதிலடி கொடுத்த ரஹ்மான்: ரஹ்மான் சினிமாவுக்குள் வந்து புது இசையை கொடுக்க ஆரம்பித்தபோது கம்ப்யூட்டரை வைத்து ட்யூன் செய்கிறார். இவரால் ஒரு கிராமத்து படத்துக்கு இசையமைக்கவே முடியாது என பலரும் சொன்னார்கள். அப்படி பேசியவர்களுக்கு கிழக்கு சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட படங்களில் தரமான கிராமிய பாடல்களை கொடுத்து பதிலடி கொடுத்தார். அப்போதிருந்துதான் ரஹ்மானால் எந்த மாதிரியான படங்களுக்கும் இசையமைக்க முடியும் என்பதை அனைவருமே உணர்ந்தார்கள்.

பஞ்சாயத்தை சந்திகாக இசைப்புயல்: அதேபோல் சில இசையமைப்பாளர்கள் காப்பி அடித்து ட்யூனை உருவாக்குகிறார்கள் என்ற விமர்சனங்கள் எழுவதுண்டு. அனிருத் உள்ளிட்ட பல கலைஞர்கள் அந்த விமர்சனத்தை சந்தித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் சந்திக்காமல் இருந்தார். ஆனால் இப்போது இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஒரு பேட்டியில் ரஹ்மானுக்கும், வாலிக்கும் இடையே நடந்த உரையாடலை பகிர்ந்தார். அதை வைத்து பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் காப்பி அடித்துவிட்டதாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஏ.வெங்கடேஷ் சொன்னது என்ன?: அவர் அளித்த பேட்டியில், "ஜென்டில்மேன் திரைப்படத்தில் இடம்பெற்ற சிக்குபுக்கு ரயிலே பாடலை வாலி எழுதினார். அப்போது அவர் என்ன எழுதிக்கொடுத்தாலும் ரஹ்மானுக்கு பிடிக்கவில்லை. புதிதாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். இதனால் வாலி உச்சக்கட்ட கோபமாகிவிட்டார். உடனே வாலி; ரஹ்மானிடம், 'நீ போட்டிருக்கும் ட்யூனை வாசி' என கேட்டார். ரஹ்மானும் சிக்குபுக்கு ரயிலே பாடல் ட்யூனின் தத்தகாரத்தை வாசித்து காண்பித்தார்.
இதுவே புதுசு இல்லையே: அதை கேட்ட வாலி, இதுவே புதுசு இல்லையே. நீ வாசித்தது, 'வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரு செய்யலாமா சண்டித்தனம் எதிர' என கூறிவிட்டார். எங்களுக்கு தூக்கி வாரி போட்டுவிட்டது" என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினரோ அப்போ சிக்குபுக்கு ரயிலே பாடல் ட்யூன் காப்பி அடிக்கப்பட்டதா என்று பேச தொடங்கிவிட்டார்கள். ஆனால் வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர பாடலின் சந்தமும், சிக்குபுக்கு ரயிலே பாடலின் சந்தமும் ஒன்றாக இருக்கலாம். இரண்டும் ஒரே ட்யூன் இல்லை.
உதாரணத்துக்கு அமரன் படத்தில் இடம்பெற்ற மின்னலே ஹே மின்னலே பாடல் ட்யூனில், நல்லவன் எனக்கு நானே நல்லவன் என்ற வரிகளை பாடினால் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் இரண்டும் வேறு வேறு ட்யூன்கள். அதேசமயம் ஒரே சந்தத்தில் இருப்பவை. இப்படித்தான் மேற்கூறிய பாடல்களும். இதை புரிந்துகொள்ளாத சிலர்தான் ஏ.ஆர்.ரஹ்மான் காப்பி அடித்துவிட்டார் என்று பேச தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











