Vikram - இந்தக் கதைக்கு நீங்க வேண்டாம் சார்.. விக்ரமிடம் ஓபனாக சொன்ன இயக்குநர்
சென்னை: Vikram (விக்ரம்) ஒரு கதையை எழுதிவிட்டு அதற்கு நீங்கள் செட் ஆகமாட்டீர்கள் என இயக்குநர் பாலாஜி சக்திவேல் விக்ரமிடம் தெரிவித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துவருகிறார். தனது கரியரின் ஆரம்பத்தில் நடித்த படங்கள் சரியாக போகவில்லை.

இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத விக்ரம் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.
கமர்ஷியல் ஹிட்டடித்த விக்ரம்: சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களில் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
பொன்னியின் செல்வன்: விக்ரம் நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது. ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை ஏற்று அதில் மிரட்டியிருந்தார் விக்ரம். அடுத்ததாக பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் தங்கலான் படம் தனது திரையுலக வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் அவர். அதனை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் படத்தின் மேக்கிங் வீடியோவும் இருக்கிறது.

சாமுராய்: விக்ரம் எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்துபவர். அப்படி அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று சாமுராய். ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த பாலாஜி சக்திவேல் இயக்கிய முதல் படம் அது. கடந்த ஆம் ஆண்டு வெளியான அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் படத்தை ரசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
டாப் படம்: இந்நிலையில் சாமுராய் படத்துக்கு பிறகு பாலாஜி சக்திவேல் ஒரு கதை யோசித்துவிட்டு விக்ரமிடம் நேரடியாக சென்று இந்தக் கதை உங்களுக்கு செட் ஆகாது என சொன்ன சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது, சாமுராய் படம் சுமாராக போனதில் பாலாஜி சக்திவேலுக்கு கொஞ்சம் அப்செட். இருப்பினும் விக்ரமைப் பொறுத்தவரை அந்தப் படம் டாப் ப்டம் என்ற கருத்தே இருந்திருக்கிறது. இதன் காரணமாக சாமுராய் படத்துக்கு பிறகு ஒரு பெரிய வீட்டை ஆஃபிஸாக மாற்றி பாலாஜிக்கு கொடுத்து எனக்காக இன்னொரு கதையை எழுதுங்கள் என சொல்லியிருக்கிறார்.
காதல் பிறந்த கதை: பாலாஜி சக்திவேலும் அந்த வீட்டில் இருந்தபடி ஒரு சிகரெட்டை புகைத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்போது பள்ளி சீருடை அணிந்த ஒரு மாணவியும், பைக் மெக்கானிக்கும் பேசிக்கொண்டிருந்தனர். ஏற்கனவே ரயிலில் ஒருவர் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை பாலாஜி சக்திவேலிடம் கூறியிருந்தார். அந்தக் கதையையும், இவர் சென்னையில் பார்த்த காட்சியையும் சேர்த்து கதை எழுத ஆரம்பித்துவிட்டார்.

நீங்க செட் ஆகமாட்டீங்க: கதையை முடித்த கையோடு திருநெல்வேலிக்கு சென்றிருக்கிறார் பாலாஜி சக்திவேல். சாமி பட ஷூட்டிங்கில் இருந்த விக்ரமை சந்தித்து, சார் நான் கதை எழுதிட்டேன். ஆனா இந்தக் கதைக்கு நீங்க நிச்சயமா செட் ஆகமாட்டீங்க. இதை ரொம்ப சிம்ப்பிளா எடுக்கணும்.
நீங்க என் மேல வைத்த நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி. உங்களுக்கான கதை எழுதிட்டேனா நிச்சயமா உங்கள்ட்ட வரேன் சார் என சொல்லியிருக்கிறார். விக்ரமும் அதை புரிந்துகொண்டு பாலாஜி சக்திவேலை அனுப்பி வைத்திருக்கிறார். அதன் பிறகு அந்தக் கதையை ஷங்கர் தயாரித்தார். படத்தில் பரத்தும், சந்தியாவும் நடித்திருந்தார்கள். அந்தப் படம்தான் காதல். இந்தத் தகவலை பாலாஜி சக்திவேல் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











