Blue Sattai Maran: நிருபரை ஒருமையில் அழைத்த ரஜினி.. வீடியோ வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டின்போது நடிகர் ரஜினிகாந்த் சொன்ன குட்டிக்கதை பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இதையொட்டி பல பதிவுகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு வருகிறார்.

ரஜினியின் பழைய வீடியோவை வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார் என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்னும் சில தினங்களில் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
அனிருத் இசையில் படத்தின் மூன்று பாடல்கள் அடுத்தடுத்து லிரிக் வீடியோவாக வெளியாகி யூடியூபில் ட்ரெண்டானது. படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியான காவாலா பாடல் வெளியான அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. படத்தில் ரஜினியை காட்டிலும் தமன்னாவின் ஆட்டம் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தப் பாடல்களை தொடர்ந்து கடந்த 28ம் தேதி படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.
இந்த ஆடியோ வெளியீட்டில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்று சிறப்பான பேச்சுக்களை வெளிப்படுத்தினர். எப்போதுமே தன்னுடைய படங்களின் ரிலீசின்போது பரபரப்புகளை ஏற்படுத்தும் வகையில் பேசுவார் ரஜினிகாந்த். சிலகாலங்கள் அரசியலை வைத்து விளையாடினார். அந்த வகையில் தற்போது இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், தளபதியாக கொண்டாடப்படும் விஜய்யை சுட்டிக்காட்டும் வகையில் காக்கா -பருந்து கதையை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த சில மாதங்களாக சூப்பர்ஸ்டார் பட்டத்தையொட்டி பல நிகழ்வுகள், பேச்சுக்கள் கோலிவுட்டில் நடைபெற்று வருகிறது. அந்த பேச்சுக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினியின் இந்த பேச்சு அமைந்தது, காக்கா என்னதான் உயரே பறந்தாலும் பருந்தாக முடியாது என்பதாக ரஜினியின் பேச்சு அமைந்தது. ரஜினியின் இந்த பேச்சு அதிகமான விமர்சனங்களையும் விஜய் ரசிகர்களிடையே கண்டனங்களையும் பெற்றுள்ளது.
ரஜினியின் இந்தப் பேச்சை அடிப்படையாக வைத்து பிரபல சினிமா விமர்சகரும் டைரக்டருமான ப்ளூ சட்டை மாறனும் தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல பதிவுகளை செய்து வருகிறார். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் மன்னன் படத்தில் தொழிலாளர்கள் உரிமைக்காக போராடும் கிளிப்பிங்கை இணைத்து, அவர், எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்று கொடுத்த பேட்டியையும் இணைத்திருந்தார்.
இதன்படி, ரஜினியின் இருவேறு நிலைப்பாடுகளை அவர் இந்தப் பதிவில் காட்சிப்படுத்தியிருந்தார். மேலும் கோபத்துடன் அந்த பேட்டியில் பேசிய ரஜினிகாந்த், ஏய் வேற ஏதாவது கேள்வி இருக்கா என்று கேட்டிருந்தார். நிருபரை ஒருமையில் அழைத்த ரஜினியின் நாகரிகத்தையும் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய பதிவின் கேப்ஷனிலும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ பழையதாக இருந்தாலும் தற்போதைய நிகழ்வுகளுக்கு இதை மேட்ச் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











