ஜெகஜால கில்லாடி.. சம்சாரம் அது மின்சாரம் விசுவின் A to Z சினிமா வாழ்க்கை.. ஒரு குட்டி ரவுண்டப்!
சென்னை: விசு என்கிற மீனாட்சி சுந்தரம் ராமசாமி எனும் கலைஞன் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக இருந்தவர். இவரது படங்களை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்தார்கள். அதற்கு காரணம் அவரது திரைக்கதை நேர்த்தி. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர் , தயாரிப்பாளர் என கொடிகட்டிப் பறந்த விசு குறித்து ரசிகர் ஒருவர் மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் "Missed_Thrills" என்ற பெயரில் இருக்கும் அந்த ரசிகர் பகிர்ந்துள்ள தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
அவரது பதிவில், " தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் முத்திரை பதித்தவர் தான் நம்ம விசு. குறைந்த பட்ஜெட்டில் பிளாக்பஸ்டர் படங்கள் கொடுப்பதில் கைதேர்ந்தவர். தனது திரைப்பயணத்தை இயக்குநர் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குநராக தொடங்கினார். பட்டினப் பிரவேசம் (1977), தில்லு முல்லு (1981), நெற்றிக்கண் (1981) போன்ற படங்களுக்கு வசனம் மற்றும் கதை எழுதி அனைவரையும் கவனிக்க வைத்தார். அவரது வசனங்கள் எளிமையும், கூர்மையும் கொண்டவையாக இருந்தன.
1986-ல் வெளியான "சம்சாரம் அது மின்சாரம்" விசுவின் மாஸ்டர் பீஸ். குடும்ப உறவுகளின் சிக்கல்களை உணர்வுபூர்வமாகவும், நகைச்சுவையாகவும் சொன்ன இப்படம், பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு, பிலிம்பேர் விருதையும் வென்றது. இப்படம் தமிழ் சினிமாவில் குடும்ப படங்களுக்கு ஒரு முன்மாதிரி என்பதில் ஐயமில்லை. இவரின் படங்கள் எப்போதும் குடும்ப உறவுகள், சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்டது. மணல் கயிறு, திருமதி ஒரு வெகுமதி, புதிய சகாப்தம், டவுரி கல்யாணம் போன்ற படங்கள் குடும்பத்துடன் தியேட்டருக்கு வர வைத்தது.

ட்ரேட்மார்க் டச்: "குடும்பத்துடன் தான் தனது படங்களை காண வேண்டும்" என்பது விசுவின் ட்ரேட்மார்க் டச். இவர் இயக்கத்தில் வந்த சிதம்பர ரகசியம் ஒரு காமெடி கலந்த திரில்லர். வழக்கமான விசுவில் இருந்து விலகி, நகைச்சுவையும் திரில்லரும் கலந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. எஸ்.வி.சேகரின் நகைச்சுவை நடிப்பு படத்தின் ஹைலைட். வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம். தில்லு முல்லு படத்தில் "மனநலம் பாதிக்கப்பட்ட டாக்டர்" வேடத்தில் விசு நடித்து பேசிய வசனங்கள் இன்றும் மீம்ஸாக உலா வருகின்றன. மன்னன், உழைப்பாளி, நல்லவனுக்கு நல்லவன், அருணாச்சலம் போன்ற படங்களில் ரஜினியுடன் நடித்து தனி இடம் பிடித்தார். "விசு மாதிரி பேசாதே" என்பது அப்போது ட்ரெண்ட்.
விசுவும் உமாவும்: விசுவின் படங்களில் "உமா" என்ற கேரக்டர் இல்லாமல் இருக்காது. இது அவரது மனைவி உமாவை கௌரவிக்கும் விதமாக இவரின் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு அந்த பெயர் வைப்பது வழக்கம். சன் டிவியில் அரட்டை அரங்கம் என்ற பேச்சு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், தமிழ் தொலைக்காட்சியில் டாக் ஷோ கலாசாரத்தை முதலில் பிரபலபடுத்தியவர் இவரே. சமூக பிரச்சினைகளை விவாதித்து, பலருக்கு உதவி செய்தார். இந்த நிகழ்ச்சி மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது.

முன் மாதிரி: இவரின் சகோதரர் தான் கிஷ்மு, பார்ப்பதற்கு இவரை போலவே இருப்பார். இவரும் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் படத்தில் "ஐஸ் மாமா" கேரக்டரில் வந்து அசத்துபவர் இவரே. விசுவின் படங்கள் இன்றைய தொலைக்காட்சி தொடர்களுக்கு முன் மாதிரி. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை எளிமையாகவும், உணர்வு பூர்வமாகவும் சொன்ன அவரது படைப்புகள் காலமெல்லாம் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு டிவிட்டர்வாசிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. மேலும் மறைந்த நடிகர், இயக்குநர் விசு குறித்த தகவல்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











