சூரிக்கு அடையாளம் கொடுத்த புரோட்டா காமெடி.. எந்தப் படத்தில் முதலில் வர வேண்டியது தெரியுமா?
சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக கருடன் படம் வெளியானது. துரை செந்தில் குமார் இயக்கியிருந்த அந்தப் படம் சூரிக்கு பெரிய ஹிட் படமாக அமைந்திருக்கிறது. அடுத்ததாக விடுதலை 2, ஏழு கடல் ஏழு மலை, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க இயக்குநர் எழில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.
செட் அசிஸ்டெண்ட், ஆர்ட் அசிஸ்டெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என கிடைத்த வேலைகளை எல்லாம் சினிமாவில் இழுத்துப்போட்டு செய்தார் சூரி. சங்கமம் படத்தின் ஒரு பாடலில் புலி வேஷம் கட்டி மணிவண்ணனோடு ஆடும் சிறுவர்களுக்கு புலி போல் வேஷம் போட்டுவிட்டதுகூட சூரிதான். மேலும் அந்தப் பாடலில் சில நொடிகள் திரையிலும் தோன்றுவார் சூரி. இப்படி தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் தலை காட்டியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

புரோட்டா சூரி: சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுதான் விதி. அந்த சினிமா சூரியையும் கைவிடவில்லை. பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் புரோட்டா மூலம் சூரியின் பசியை ஆற்றினார். 50 புரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார்.
முன்னணி காமெடி நடிகர்: வெண்ணிலா கபடிக்குழுவிலிருந்து தனியே தெரிந்த சூரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தனது காமெடி திறமையை காட்ட சரசரவென்று முன்னணி நடிகர் என்ற இடத்துக்கு உயர்ந்தார். அதன் பலனாக ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடியில் நடித்து கலக்கினார். முக்கியமாக சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்துமே சிரிப்பு எமோஜி ரகம்.
விடுதலை சூரி: காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். கடந்த வருடம் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர். ஆக்ஷன் காட்சிகளில் அசால்ட்டாக ரிஸ்க் எடுத்திருந்த சூரிக்கு விடுதலை அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது. இதனையடுத்து கொட்டுக்காளி என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.
ஏழு கடல் ஏழு மலை: மேலும் விடுதலை 2 படத்தில் நடித்துவரும் சூரி; ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்திருக்கும் ஏழு கடல் ஏழு மலை என்ற படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில்கூட அந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி வெளியானது. அவர் கடைசியாக கருடன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. இன்று முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் படம் ஸ்ட்ரீமாவது குறிப்பிடத்தக்கது.
எழில் பேட்டி: இந்நிலையில் பிரபல இயக்குநர் எழில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், "என்னிடம் சுசீந்திரன் உதவி இயக்குநராக வேலை செய்தார். ஜெயம் ரவியை வைத்து நான் தீபாவளி படத்தை இயக்கினேன். அந்தப் படத்தில்தான் புரோட்டா காமெடியை வைக்க ஆசைப்பட்டேன். ஆனால் சில காரணங்களால் எடுக்க முடியவில்லை. அதற்கு பிறகு சுசீந்திரன் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அந்த சமயத்தில் என்னை தொடர்புகொண்ட அவர், 'சார் புரோட்டா காமெடியை இந்தப் படத்தில் வைத்துக்கொள்ளட்டுமா?' என்று கேட்டார். நான் உடனே, 'வைத்துக்கொள். ஆனால் காமெடியை கெடுக்காமல் எடு' என்று சொன்னேன். சுசீந்திரனும் அந்த காமெடியை நன்றாகவே எடுத்திருந்தார்" என்றார். தீபாவளி படத்தில் சூரி சிறு வேடம் ஒன்றில் நடித்திருப்பார் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











