Rajini - அவர் என்னை அறிமுகப்படுத்தியவர்.. அவங்க கம்பெனில எப்படி அத கேக்குறது?.. ரஜினி செய்த நெகிழ்ச்சி செயல்
சென்னை: Rajini (ரஜினி) இயக்குநர் கே.பாலசந்தரின் கவிதாலயா புரொடக்ஷன்ஸ்காக ரஜினிகாந்த் செய்த செயல் ஒன்று தெரியவந்திருக்கிறது.
ரஜினிகாந்த்தும் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ரசிகராக இருக்கிறது. ரொம்பவே கஷ்டப்பட்டு சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவருக்கு பலமே அவருடைய எளிமையும், நன்றி மறக்காத குணமும்தான் என்று திரைத்துறையினரே கூறுவார்கள். வாலிகூட குசேலன் படத்தில், 'அவர் உருவம் பாரு எளிமை அந்த எளிமைதானே அவருக்கு வலிமை' என ரஜினிக்காக ஒரு வரி எழுதியிருப்பார்.

போராட்டம்: இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தாலும் எளிமையாக இருக்க முக்கிய காரணம் அவர் சந்தித்த போராட்டங்களும், அவமானங்களும்தான். ஒரு ஆம்லேட்டுக்கு அசிங்கப்பட்டிருக்கிறார், காரில் கொண்டு சென்று விட முடியுமா என கேட்டு அசிங்கப்பட்டிருக்கிறார், தமிழ் சரியாக பேசவரவில்லை கறுப்பான உருவம் என விமர்சிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அத்தனையையும் தாங்கி இப்போது சூப்பர் ஸ்டார் நாற்காலியில் இருக்கிறார்.
நன்றி மறவாமை: அதேபோல் நன்றி மறக்காத குணமும் அவருக்கு நிறையவே உண்டு. தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திய கலைஞானத்துக்கு சொந்த வீடு வாங்கிக்கொடுத்தார். தனக்கு யாரெல்லாம் ஆரம்பகாலத்தில் உதவினார்களோ அவர்கள் யாரையுமே மறக்காமல் இருக்கிறார். தன்னை அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். பாலசந்தர் ஃபோன் செய்தால்கூட எழுந்து நின்று பேசும் அளவுக்கு அது இருந்தது.
கவிதாலயா: இப்படிப்பட்ட சூழலில் கவிதாலயா நிறுவனத்துக்காக ரஜினிகாந்த் செய்த செயல் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது கே.பாலசந்தர் கவிதாலயா நிறுவனத்தை தொடங்கிவிட்டார். ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டாலும் ரஜினிகாந்த் 80களில் மாஸ் ஹீரோவாக உயர்ந்துவிட்டதால் இயக்கம் செட் ஆகாது என்று கே.பாலசந்தர் நினைத்திருக்கிறார்.
பிரமிட் நடராஜன்: அப்போது அந்த நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பிரமிட் நடராஜன் (இப்போது தயாரிப்பாளர்) பாலசந்தரிடம் நீங்கள் ரஜினியை வைத்து படம் இயக்கவேண்டாம். தயாரிக்கலாம். நான் சென்று ரஜினியிடம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டாராம். அந்த சமயத்தில் ஏவிஎம் நிறுவனத்துக்காக முரட்டுக்காளை படத்தில் நடித்திருந்திருக்கிறார் ரஜினி.
நேராக ஏவிஎம் சென்ற நடராஜன் ரஜினிகாந்த் பெற்ற சம்பளத்தை தெரிந்துகொண்டு அவரை சந்திக்க சென்றிருக்கிறார். ரஜினியிடம், பாலசந்தர் சார் கம்பெனிக்கு ஒரு படம் பண்ணனும் என சொல்லியிருக்கிறார். அதற்கு ரஜினிகாந்த் ஓகே பண்ணிட்டா போச்சு என ஒத்துக்கொண்டார். இருந்தாலும் பாலசந்தர் இயக்குவதாக இருந்தால் எப்படி ஒத்துவரும் என யோசனையில் இருந்திருக்கிறார். அதை உணர்ந்துகொண்ட நடராஜன், பயப்பட வேண்டாம் கே.பாலசந்தர் இயக்கமாட்டார். எஸ்.பி.முத்துராமனையே இயக்குநராக போடலாம் என சொல்லியிருக்கிறார்.
அதற்கும் ரஜினிகாந்த் ஒத்துக்கொள்ள சம்பளம் தொடர்பான பேச்சு தொடங்கியிருக்கிறது. அப்போது ரஜினிகாந்த், அய்யயோ என்னை அறிமுகப்படுத்துனவர் பாலசந்தர் சார். அவர் கம்பெனிக்கு படம் பண்ணும்போது பணமா. அதெல்லாம் வேண்டாம் என சொல்லியிருக்கிறார். அதற்கு நடராஜனோ, இல்லை ரஜினி நான் ஏவிஎம்க்கு சென்று உங்கள் சம்பளத்தை தெரிந்துவிட்டுதான் வந்தேன்.
அதே சம்பளம் தருகிறேன். இந்தாங்க அட்வான்ஸ் என குறிப்பிட்ட தொகையை கொடுத்திருக்கிறார். அதனை பெற்றுக்கொள்ள ரஜினிகாந்த் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். ஆனால் நடராஜனோ இந்த அட்வான்ஸை நீங்கள் வாங்கிக்கொண்டால் மட்டும்தான் இந்தப் படம் நடக்கும். இல்லையென்றால் இந்த திட்டத்தையே கைவிட்டுவிடுவோம் என சொல்லியிருக்கிறார்.
இருந்தாலும் ரஜினிகாந்த் முழு மனதாக ஒத்துக்கொள்ளாமல் நடராஜனின் வற்புறுத்தலுக்காகவே வாங்கிக்கொண்டாராம். இந்தத் தகவலை கரு.பழனியப்பன் ஒரு பேட்டியில் பகிர்ந்து, 'ரஜினிகாந்த் இப்படி ஒரு உச்சத்தில் இருப்பதற்கு காரணம் தன்னை அறிமுகப்படுத்தியவர் மீது அளவு கடந்த மரியாதை வைத்ததுதான்' என குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











