இளையராஜாவுடன் சண்டை போய்ட்டுத்தான் இருக்கு.. ரெக்கார்டிங் ரூமை விட்டு துரத்தினார்.. மிஷ்கின் பளிச்!
சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமா உலகில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் இசையில் மிகப்பெரிய ஆளுமையாக உள்ளார். திரையிசையில் இவருக்கு நிகர் இவர் மட்டும்தான். சுமார் 1500 படங்களுக்கு இசை அமைத்துள்ள இளையராஜா, இன்றைய தலைமுறைக்கும் மிகவும் நெருக்கமான ஹிட் பாடல்களைக் கொடுத்து வருகிறார். அவருடன் பணியாற்றிய இயக்குநர்கள் பலரும் அவர் குறித்து பல விஷயங்களை சிலாகித்து கூறுவது வழக்கமான ஒன்று. இப்படியான நிலையில் இயக்குநர் மிஷ்கின் தனக்கும் இளையராஜாவுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை குறித்தும், அவர் தன்னை ரெக்கார்டிங் ரூமை விட்டு வெளியே அனுப்பியது குறித்தும் பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதை இந்தத் தொகுப்பில் காணலாம்.
இளையராஜா தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக இசையமைப்பாளராக திகழ்கின்றார். தனது இசையின் மூலம் பல படங்களை மாபெரும் வெற்றிப் படமாக மாற்றியுள்ளார். இது மட்டும் இல்லாமல், தனது பாடல்கள் மூலம் பல கோடி மக்களின் இதயங்களில் குடி கொண்டுள்ளார் எனலாம். இவர் சமகால இயக்குநர்களுடனும் பணியாற்றி வருகிறார். இவரது இசையில் கடந்த ஆண்டில் வெளியான ஜமா, விடுதலை, விடுதலை பாகம் 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது. இளையராஜா, பல படங்களுக்கு பணமே வாங்காமல், இசையமைத்தும், பாடல்கள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

இவரது குடும்பமே இசைக் குடும்பமாகவே உள்ளது. அவரது மகன்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரிணி என அனைவரும் இசையமைப்பாளர்கள். இளையராஜாவோடு சேர்த்து நான்கு பேரும் பாடகர்கள். அதேபோல் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளராக உள்ளார். அவரது மகன்களான பிரேம்ஜி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். வெங்கட் பிரபுவை பொறுத்தவரையில், இயக்குநராகவும் நடிகராகவும் உள்ளார். இப்படி இளையராஜாவின் மொத்த குடும்பமும் இசைக் குடும்பமாகவும், சினிமா குடும்பமாகவும் உள்ளது.
மிஷ்கின்: இளையராஜாவுடன் பணியாற்றிய இயக்குநர்களில், மிஷ்கினும் ஒருவர். மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான, சைக்கோ படத்திற்கு கூட இளையராஜாதான் இசையமைத்தார். இளையராஜாவுடன் பணியாற்றிய அனுபவம் தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய மிஷ்கின், பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதாவது முதல் படத்தில் அவருடன் பணியாற்றும்போது, அவரை நான் மிகவும் கோபப்படுத்தி விட்டேன். ரெக்கார்டிங் ரூமில் சண்டைதான் வரும். சில நேரங்களில் என்னை ரெகார்டிங் ரூமை விட்டு வெளியே போகச் சொல்லிவிடுவார்.

இளையராஜா: நானும் சாதாரணமாக வெளியே வந்துவிடுவேன். சில காட்சிகளைப் பார்த்ததும், அவர் பின்னணி இசை அமைக்க ஆர்வமாக இருப்பார். ஆனால் நான் அங்கு பின்னணி இசையே வேண்டாம் எனக் கூறி விடுவேன். ஒருமுறை என்னை வெளியே போகச் சொல்லிவிட்டார். நான் காரை எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் வந்துவிட்டேன். அதன் பின்னர் என்னை வரச் சொன்னார். எங்கு நான் பின்னணி இசை அமைக்க வேண்டும் எனக் கூறு எனக் கூறினார். அவருக்கு என்னைப் பற்றி நன்றாக தெரிந்து விட்டது. நான், அவ்வளவு எளிதில் போக மாட்டேன் என.

சண்டை: எப்போது சந்தித்தாலும் அவரது காலைத் தொட்டு வணங்கி, எனது பாவங்களை நீக்கி விடுவேன். அதன் பின்னர் வாக்குவாதம் தான் நடைபெறும். எங்களுக்குள் சண்டை, அதன் பின்னர் பிரியம் என எப்போதும் மாறி மாறி நடந்து கொண்டுதான் இருக்கும். அவருடனான சண்டை இப்போதும் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது" என பேசியுள்ளார். இவரது இந்த பழைய பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











