விஜய்யை அசிங்கப்படுத்திய பிரபல பத்திரிகை.. என்ன செய்தார் தெரியுமா விஜய்?
சென்னை: முதல் படத்தின்போது தன்னை பிரபல பத்திரிகை அசிங்கப்படுத்தியதை அடுத்து விஜய் செய்திருக்கும் செயல் குறித்து பார்க்கலாம்.
இயக்குநரின் மகன் என்ற பெயரோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜய். இதனால் அவருக்கு திரைத்துறைக்குள் நுழைவதற்கான கதவு எளிதாக திறந்தது. ஆனால் திறமை என்ற ஒன்று இல்லாமல் இன்று அவர் இந்தியாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் சினிமாவுக்காக அவர் தன்னை மாற்றிக்கொண்டார்.

எஸ்.ஏ.சந்திரசேகரே துணை
விஜய் சினிமாவுக்குள் நுழைவதற்கு அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முதலில் விருப்பம் இல்லை. ஆனால் விஜய்தான் பிடிவாதமாக நான் சினிமாவில்தான் நடிப்பேன் என கூறினார். இதனால் வேறு வழியின்றி சினிமாவில் விஜய் நடிப்பதற்கு எஸ்.ஏ.சி ஒத்துக்கொண்டார். ஆனால் வேறு இயக்குநர்களிடம் அனுப்பாமல் தானே ஒரு பிரபலமான இயக்குநர் என்பதால் தன்னுடைய படத்திலேயே அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டார் சந்திரசேகர்.

விஜய்க்காக எஸ்.ஏ.சி எழுதிய நாளைய தீர்ப்பு
இதனையடுத்து விஜய்க்காக நாளைய தீர்ப்பு கதையை எழுதினார். முதல் நாள் பூஜை போடப்பட்டபோது, எஸ்.ஏ.சியின் மகன் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி பரவ திரையுலகத்தை சேர்ந்த பாதி பேர் பூஜையில் கலந்துகொண்டனர். வந்தவர்களில் பலர் வாழ்த்து சொல்ல, சிலர் விஜய்யை பார்த்து இவரெல்லாம் ஹீரோவா என எஸ்.ஏ.சியின் காதுபடவே பேசியிருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் நடக்கும் என முன்பே கணித்திருந்த எஸ்.ஏ.சி எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்திருக்கிறார். அதன் பிறகு முதல்நாள் ஷூட்டிங்கும் நடந்து முடிந்திருக்கிறது.

முதல் நாளே வீட்டுக்கு வந்து அழுத விஜய்
முதல் நாள் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது அந்த யூனிட்டில் பணிபுரிந்த சிலரே விஜய்யின் காதுக்கு எட்டும்படி, 'இவரெல்லாம் ஹீரோவா. இயக்குந்ர் மகன் என்றால் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகிவிடலாம் போல' என பேசியிருக்கின்றனர். விஜய்க்கு சினிமாவில் முன் அனுபவம் அப்போது இல்லாததால் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம் விஜய். ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு விஜய் அதை நினைத்து நினைத்து அழுதிருக்கிறார். ஆனால் சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும் என விஜய்யை தேற்றிய எஸ்.ஏ.சி, சினிமாவில் வென்று இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமென்றால் நடனம், சண்டை என முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.

விஜய்க்காக எஸ்.ஏ.சந்திரசேகர் செய்த செயல்
ஒருவழியாக நாளைய தீர்ப்பு படத்தின் ஷூட்டிங் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ரிலீஸுக்கு இரண்டு நாள்கள் முன்பு பத்திரிகையாளர்களுக்கான காட்சியை திரையிட்டு காண்பித்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தை முடித்துவிட்டு, 'விஜய்யை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் குறை இருந்தால் என்னிடம் நேரடியாக சொல்லுங்கள். நிறை இருந்தால் அதனை உங்கள் எழுத்தில் கொண்டுவாருங்கள். நல்லபடியாக விமர்சனம் எழுதுங்கள்' என கோரிக்கை வைத்தார்.

உருவகேலி செய்த பிரபல பத்திரிகை; விஜய் செய்த காரியம்
இந்தச் சூழலில் நாளைய தீர்ப்பு பட சமயத்தில் வியாபாரத்தின் உச்சத்தில் இருந்த பிரபல பத்திரிகை படம் குறித்த விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனால் அந்தப் பத்திரிகை செய்தது விமர்சனம் என்ற பெயரில் தனிநபர் தாக்குதலை. அந்தப் பத்திரிகையில் படம் குறித்த விமர்சனத்தை சுமாராக எழுதிவிட்டு, விஜய் குறித்து, 'லாரி டயரில் சிக்கி நஞ்சுபோன தகர டப்பா போல் ஹீரோ இருக்கிறார்' என எழுதியது. இதனால் கொந்தளித்துப்போன எஸ்.ஏ.சந்திரசேகர் அந்தப் பத்திரிகையின் அலுவலகத்துக்கு சென்று சண்டையிட்டிருக்கிறார். மேலும் மற்ற பத்திரிகைக்காரர்களும் விஜய் குறித்து உருவ கேலி செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து அந்த பத்திரிகை வருத்தம் தெரிவித்ததாம்.

உலகின் மிகச்சிறந்த சொல் செயல்
இந்த விஷயம் ஆழமாக விஜய் மனதில் பதிந்துவிட, விஜய்யை உருவகேலி செய்து வெளியிட்ட அந்தப் பத்திரிகையை ஃப்ரேம் போட்டு தனது வீட்டில் மாட்டியிருக்கிறாராம். ஒவ்வொரு முறையும் அதை பார்த்து பார்த்தே எப்படியாவது வளர வேண்டும் என்ற முனைப்போடு உழைத்துதான் இப்போது விஜய் டாப் ஹீரோவாக இருக்கிறார். இந்தத் தகவலை சினிமாவின் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











