3 குழந்தைகளின் தந்தை.. மஞ்சுளாவை தன் வலையில் விழவைத்த விஜயகுமார்.. தினமும் குடி..நடிகையின் கதை!
சென்னை: தமிழ் சினிமா இதுவரைக்கும் ஏகப்பட்ட கதாநாயகிகளை சந்தித்து இருக்கும். ஆனால், எல்லா கதாநாயகிகளும் மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறி தான். ஏதோ ஒரு சில நடிகைகள் தான் மக்கள் மனதில் இடம் பிடித்து கனவு கன்னியாக வலம் வந்தார்கள். அந்த வகையில் 70 கால கட்டத்தில் ரசிகர்களின் மனதில் வாழ்ந்த மஞ்சுளா விஜயகுமார் பற்றியும், அவர் எப்படி இரண்டாவது மனைவியாக விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார் என்பதை பற்றியும் இந்த செய்தியில் பார்க்கலாம்.
தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்டவர் தான் நடிகை மஞ்சுளா. இவரின் உண்மையான பெயர் மஞ்சுளா தேவி, சினிமாவிற்காக தனது பெயரை சுருக்கிக்கொண்டார். பனீ ராவ், கௌசல்யா தம்பதியருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார். மஞ்சுளாவின் தந்தை ரயில்வேத் துறையில் மேல் அதிகாரியாக பணியாற்றி கொண்டிருந்த போது. பணியிடை மாற்றம் காரணமாக தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு குடிபுகுந்தனர். அங்கு மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு ஆங்கில பள்ளியில் படித்து வந்த மஞ்சுளாவிற்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்துள்ளது. இதனால், பள்ளிக்கூடத்தை ஏதாவது ஒரு சாக்கு சொல்லி 'கட்' அடித்துள்ளார். சரியாக பள்ளிக்கூடம் போகாமல் இருந்தால், படிப்பை நிறுத்திவிடுவார்கள், பின் நாம் ஆசைப்பட்டபடி சினிமாவில் நடிகையாகிவிடலாம் என்ற எண்ணத்தில் மஞ்சுளா அப்படி செய்தார்.

சாந்திநிலையம் படத்தில்: மஞ்சுளா ஆசைப்பட்டது போலவே, பள்ளிக்கு சரியாக போகாததால், மஞ்சுளாவை பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டார்கள். மஞ்சுளாவை கண்டித்த பெற்றோர், அவரை வேறு ஒரு பள்ளியில் சேர்க்க முயற்சி செய்த போது, மஞ்சுளா தனக்கு படிப்பின் மீது விருப்பம் இல்லை, நடிப்பின் மீது தான் ஆசை என்று சொல்ல, சினிமாவிற்கும் நம் குடும்பத்திற்கும் சம்மந்தமே இல்லையே என யோசித்த, மஞ்சுளாவின் அப்பா, குடும்ப நண்பரான சங்கர் கணேஷிடம் விஷயத்தை சொல்லிஇருக்கிறார். அதன் பின் நான் மஞ்சுளாவிற்கு சாந்தி நிலையம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து கதாநாயகி வாய்ப்பு தேடி வந்த மஞ்சுளா, விஜயா ஸ்டூடியோவில் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். அப்போது தான், அந்த அழகு தேவதை எம்.ஜி.ஆர் கண்ணில் பட, அவருக்கு ஜோடியாக நடிக்க ஐந்து வருட கான்ட்ரக்ட் போடப்பட்டு ரிக்ஷாக்காரன் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
தனி ரசிகர் கூட்டம்: அந்த படத்தை தொடர்ந்து எம்ஜிஆருடன் உலகம் சுற்றும் வாலிபன், இதயவீனை, நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் நடித்தார். அதே போல சிவாஜியுடன் டாக்டர் சிவா, எங்கள் தங்க ராஜா, அவன் தான் மனிதன், என் மகன், அன்பே ஆருயிரே, மன்னவன் வந்தானடி, உத்தமன், அவன் ஒரு சரித்திரம், ஏ.வி.எம் ராஜனுடன் டாக்டர் அம்மா, முத்துராமனுடன் மறுபிறவி, எல்லாரும் நல்லவர்கள், மு.க.முத்து உடன் பூக்காரி, ஸ்ரீகாந்த் உடன் ராஜ நாகம், தெலுங்கில் அப்போது சூப்பர் ஸ்டாராக இருந்த என்.டி.ஆர், சோபன் பாபு போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து, 70 காலகட்டத்தில் தனது அழகாலும், ஸ்டைலும், கவர்ச்சியும், தமிழ், தெலுங்கு ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார் மஞ்சுளா.
மனதில் வந்த காதல்: இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டு இருந்த போது தான் மஞ்சுளாவின் மனதில் காதல் துளிர்விட்டது. விஜயகுமாருடன் உன்னிடம் மயங்குகிறேன் படத்தில் நடித்த போது, மஞ்சுளாவிடம் நட்பாக பேசி பழகி உள்ளார். ஒரு கட்டத்தில் மஞ்சுளாவை அவருக்கு பிடித்து போக, ஒரு நாள் மஞ்சுளாவிடம், நான் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என கேட்டு உள்ளார். விஜயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக சொன்னதால், குழம்பிப்போன மஞ்சுளா, இதை நீங்கள் என் அம்மாவிடம் தான் கேட்க வேண்டும் என மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி உள்ளார். ஆனால், மஞ்சுளாவின் மனதிலும், விஜயகுமார் மீது ஒரு விதமான காதல் இருந்துள்ளது.
காதல் திருமணம்: இதன்பின், விஜயகுமார் மஞ்சுளாவின் பெற்றோரை சந்தித்து திருமணம் குறித்து பேசி இருக்கிறார் விஜயகுமார். அப்போது மஞ்சுளாவின் பெற்றோர், அவளுக்கு இந்த திருமணத்தை விருப்பம் என்றால் எங்களுக்கு எந்த விதமான தடையும் இல்லை என காதலுக்கு பச்சை கொடி காட்ட, இருவரின் திருமணமும் எளிமையாக நடைபெற்றது. அதன் பிறகு இருவரின் காதலுக்கு சாட்சியாக, வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் பிறந்தார்கள். அடுத்தடுத்து பிறந்த குழந்தைகளால், சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு, தன்னுடைய குழந்தைகளை கவனித்துக் கொண்டார். பின்,1990 காலகட்டத்தில் மீண்டும் நடிக்க வந்த மஞ்சுளா, முரளியுடன் புது வசந்தம், பிரபுவுடன் செந்தமிழ் பாட்டு, அமரன், காவியத்தலைவன், சமுத்திரம், சேரன் பாண்டியன், நாம் இருவர் நமக்கு இருவர் என போன்ற படத்தில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கி அதிலும் வெற்றி பெற்றார்.

மன அழுத்தம்: நடிகை மஞ்சுளா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது குழந்தைகள் மீது அதீக பாசம் வைத்து இருந்த மஞ்சுளா, தனது மகள் வனிதா, மகனை கேட்டு நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட மன கசப்பால், வனிதா வெறுத்து அவள் தனது மகளே கிடையாது, ராட்சசி. அவள் என் வயிற்றில் பிறந்ததை நினைக்கும்போதே கேவலமாக உள்ளது என்றெல்லாம் திட்டித்தீர்த்தார். இதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு மஞ்சுளா காலமானார். அவரின் மறைவின் போது கூட வனிதாவை இறுதிச்சடங்கு செய்யவிடாமல் பிரச்சனை நடந்தது. ரஜினி, சரத்குமார், ராதாரவி வனிதாவை அழைத்து இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் படி சொன்னதாக, ஷகிலாவுடனான பேட்டியில் வனிதா கூறியிருந்தார். மேலும், அம்மா மன உளைச்சலில் இருந்தார்கள். இதனால், தினமும் அம்மா குடிப்பார்கள். குடிப்பழக்கத்தால், அம்மாவிற்கு மூன்று முறை மஞ்சள் காமாலை வந்தது, அப்போதும் அவங்க குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை என கூறியிருந்தார். மஞ்சுளாவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அவரின் மரணத்திலும் பல விதமான கருத்துக்கள் இருந்தாலும், மஞ்சுளா இன்றும் மக்களின் மனதில் அழகிய தமிழ் மகளாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











