விட்டுட்டு வந்துட்டோமேனு தோன்றும்.. மனம் திறந்து பேசிய ஜிவி பிரகாஷின் முன்னாள் மனைவி
சென்னை: ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் கடைசியாக அமரன், லக்கி பாஸ்கர், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் வந்தன. அதில் இடம்பெற்ற இசை பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நடிக்க சென்றதால் அதிக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்துவந்த ஜிவி பிரகாஷ் இப்போது மீண்டும் இசையமைப்பில் பிஸியாகியிருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் இன்று நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கலும் செய்துவிட்டார்.
ஏ.ஆர். ரஹ்மானின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ்; தனது முதல் படமான வெயில் படத்திலேயே தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதற்கு பிறகு தொடர்ந்து அவர் இசையமைத்த படங்கள் அனைத்திலும் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. ஃபோக், மெலோடி, வெஸ்டர்ன் என எந்த ஜானரை எடுத்துக்கொண்டாலும் தன்னுடைய முத்திரையை அவர் பதித்ததன் காரணமாக குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளர் என்ற இடத்தை அடைந்தார் அவர்.
ஹீரோ ஆசையில் ஜிவி: ஜிவி பிரகாஷின் ஒவ்வொரு படத்தின் வேலையையும் கவனித்த ரசிகர்கள் அவருக்கு தகுந்த அங்கீகாரம் இன்னமும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை தொடர்ந்து கொட்டிக்கொண்டே வந்தார்கள். ஆனால் ஜிவியோ தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்திவந்தார். சூழல் இப்படி இருக்க சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருதை வென்று அசத்தினார் அவர். இதற்கிடையே ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசை அவருக்கு வர; டார்லிங் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ்.
பெரிய ஹிட் இல்லை: இசையமைப்பில் தனது தாக்கத்தை செலுத்த முடிந்த அளவுக்கு நடிப்பில் ஜிவி பிரகாஷால் செலுத்த முடியவில்லை. அவரது நடிப்பில் வெளியான படங்களில் சிகப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம், பேச்சிலர் உள்ளிட்ட படங்கள் மட்டுமே அவருக்கு ஓரளவு நல்ல பெயரை கொடுத்தது. பாலாவின் இயக்கத்தில் நடித்த நாச்சியார் படம்கூட பெரிதாக எடுபடவில்லை. கடைசியாக வெளியான கிங்ஸ்டன் படமும் சரியாக போகவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தும் அவர்; இப்போது அதிக படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார்.

களமிறங்கிய ஜிவி: அந்தவகையில் அவர் அமரன், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி, விக்ரம் நடித்திருக்கும் வீர தீர சூரன் படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர்; அன்பறிவ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் படத்துக்கும் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே காதலித்து திருமணம் செய்துகொண்ட சைந்தவியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார்.
ஒரே காரில் சென்ற ஜிவி, சைந்தவி: பிரிவதாக அறிவித்திருந்தாலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கேட்டு இரண்டு பேரும் நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்யாமல் இருந்தார்கள். இந்தச் சூழலில் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகி தங்களுக்கு டைவர்ஸ் வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இரண்டு பேருமே ஒரே காரில் மீண்டும் சென்றார்கள். இந்நிலையில் சைந்தவி அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சைந்தவியின் பேட்டி: அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மகள் குறித்து பேசிய அவர், "எனது குழந்தையை விட்டுவிட்டு நான் வேலைக்கு வந்த பிறகு கொஞ்ச நேரம் அன்வி என்னை தேடுவாள். பிறகு விளையாட்டு, பொம்மை என்று சென்றுவிடுவாள். ஆனால் எனக்குதான் அய்யோ குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்று தோன்றிகொண்டே இருக்கும். ஆகினும் நான் இல்லாதபோது என்னை தேடமாட்டார்; ஆனால் இருக்கும்போது எல்லா வேலையையும் வாங்கிடுவாங்க" என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











