அட குஷ்பூ இட்லினு சொல்றதுக்கு காரணம் இந்த நடிகர்தானா?.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் தெரியுமா?
சென்னை: நடிகை குஷ்பூ 80களில் தமிழ் சினிமாவில் நுழைந்து கொடிக்கட்டி பறந்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிவைத்திருந்தார். குஷ்பூவுக்கு கோயில் கட்டியது, குஷ்பூ இட்லி என்று ரசிகர்கள் கூறியது என தனி கிரேஸ் அவருக்கு இருந்தது. இப்போது அரசியலில் இருக்கும் அவர் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியும் கொடுத்துவருகிறார். இந்தச் சூழலில் குஷ்பூ இட்லி என்று சொல்லப்படுவதற்கான காரணம் குறித்து இப்போது தெரியவந்திருக்கிறது.
மும்பையை பூர்வீகமாக கொண்டவர் குஷ்பூ. குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் அறிமுகமான குஷ்பூ; ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார். தமிழ் தெரியாமல் ஹீரோயினாக அறிமுகமான அவர், நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழை முறைப்படி விரைவிலேயே கற்றுக்கொண்டார். அதன் காரணமாக அறிமுகமான சில படங்களிலேயே சொந்த குரலில் டப்பிங் பேசினார். அழகு, நடிப்பு, நடனம் என அத்தனையும் வாய்க்கப்பெற்ற அவர் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

கோயில் கட்டிய ரசிகர்கள்: குஷ்பூ பீக்கில் இருந்த காலத்தில் ஒரே வருடத்தில் பத்து படங்கள் நடித்த வரலாறு எல்லாம் உண்டு. அந்த பத்து படங்களில் கிட்டத்தட்ட 8 படங்கள்வரை ஹிட்டடித்தன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சரளமாக நடித்தார். மேலும் தனது மனதில் பட்டதை பட்டென்று பேசும் குணம் படைத்த குஷ்பூ 20 வருடங்களுக்கு முன்னர் பேசிய கருத்து ஒன்று கடுமையான சர்ச்சைகளையும், எதிர்ப்பையும் சந்தித்தது. பிறகு அவர் அதற்கு வருத்தம் தெரிவித்தார்.
அரசியலில் குஷ்பூ: பெரிய திரையில் கலக்கிவந்த குஷ்பூ சின்னத்திரையில் சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார். தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் ஆரம்பித்த அவர் அதன் பிறகு காங்கிரஸ் சென்றார். அங்கும் சில பிரச்னைகள் வெடிக்க இப்போது பாஜகவில் ஐக்கியமாகி தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்துவருகிறார்.
மீண்டும் நடிப்பில் குஷ்பூ: சில காலம் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்திருந்த அவர் இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவர் தற்போது ராமபானம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதில் கோபிசந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் விஜய்யுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார் குஷ்பூ. ஆனால் அவர் நடித்த காட்சிகள் சில காரணங்களால் படத்திலிருந்து தூக்கப்பட்டன.
குஷ்பூ இட்லி: அதேபோல் குஷ்பூ ஹீரோயினாக ஜொலித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டினார்கள். மேலும் குஷ்பூ இட்லி என்ற பதமும் உருவாக்கப்பட்டது. ஒரு நடிகைக்கு கோயில் கட்டியது, உணவுக்கு அவர் பெயர் வைத்தது என்பது முதன்முறையாக குஷ்பூவுக்குத்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க குஷ்பூ இட்லி என்ற சொல் எப்படி உருவானது என்பது குறித்து இப்போது தெரியவந்திருக்கிறது.
பிரபு காரணம்: அதாவது தர்மத்தின் தலைவன் படத்தில் நடித்தபோது லைட்மேன்கள் தங்களுக்குள் வாடா போடா என்று பேசிக்கொண்டார்களாம். அப்போது குஷ்பூவுக்கு சரளமாக தமிழ் பேச வராது, தெரியாது. சரி எல்லோரும் இப்படி சொல்கிறார்களே அது மரியாதையான வார்த்தைபோல என்று நினைத்துக்கொண்டு; ரஜினிகாந்த்தையும் வாடா என்று சொல்லிவிட்டாராம் குஷ்பூ. உடனே அருகில் இருந்த பிரபு குஷ்பூவிடம், இப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்று கூறினாராம்.
அதற்கு குஷ்பூவோ லைட்மேன்களை காண்பித்து அவர்கள் எல்லாம் அப்படித்தானே பேசிக்கொள்கிறார்கள் என கூற; அவர்கள் பேசுவார்கள் அதனால் நீ ரஜினியை வாடா போடா என்று சொல்லக்கூடாது என எடுத்துக் கூறினாராம். மேலும் குஷ்பூவின் கன்னத்தை கிள்ளி, 'நல்லா இட்லி மாதிரி இருக்க'என்று விளையாட்டாக சொன்னாராம் பிரபு. அப்போதிருந்துதான் குஷ்பூ இட்லி என்று சொல்ல ஆரம்பித்தார்களாம். இதனை குஷ்பூவே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











