நாட்டாமை படத்தில் கவுண்டமணி வாங்கிய சம்பளம் இவ்வளவா?.. ஹீரோவுக்கு நிகரா வாங்கியிருக்காரே
சென்னை: கவுண்டமணி தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அதேசமயம் எந்த காமெடி சேனலை பார்த்தாலும், எந்த மீமை பார்த்தாலும் அதில் கவுண்டமணி இன்னும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். இதன் காரணமாக கவுண்டமணிக்கு எப்போதும் அழிவில்லை என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இந்தச் சூழலில் அவர் நாட்டாமை படத்துக்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
உடுமலைப்பேட்டையை சொந்த ஊராக கொண்ட கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன். நடிப்பு மீது ஆர்வம் கொண்ட அவர் ஒரு நாடக கம்பெனியில் இணைந்தார். அங்கிருந்தபடி சினிமாவுக்கும் அவர் முயற்சி செய்ய பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் மூலம் அவர் நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. டைமிங்கில் கவுண்ட்டர் அடிப்பதால் சுப்பிரமணி கவுண்டமணி ஆனார். முதல் படத்திலேயே அவரது நடிப்பும், டைமிங்கும் ரசிகர்களை கவர ஆரம்பித்தன.

கவுண்டமணி - செந்தில் காம்போ: எவர்க்ரீன் காமெடி காம்போ கவுண்டமணியும், செந்திலும் ஆவர். பல நூறு படங்களில் இருவரும் இணைந்து காமெடியில் கலக்கியிருக்கின்றனர். குறிப்பாக வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் என அவர்கள் அதகளம் செய்த திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் பெரிது. ஒருகட்டத்தில் கவுண்டமணி இல்லாமல் செந்தில் இல்லை செந்தில் இல்லாமல் கவுண்டமணி இல்லை என்ற நிலையே திரைத்துறையில் நீடித்தது. அந்த அளவுக்கு இருவரும் நெருங்கி பழகினார்கள். கவுண்டமணி நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தபோது மீண்டும் நடிக்க வர வேண்டுமென்று அவருக்கு நீண்ட கடிதத்தையும் செந்தில் எழுதியது குறிப்பிடத்தக்கது.
விமர்சனத்தை சந்தித்த கவுண்டமணி நகைச்சுவை: கவுண்டமணியின் நகைச்சுவை எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவு விமர்சனத்தையும் சந்தித்தவை. அவர் எல்லோரையும் உருவ கேலி செய்கிறார்; எட்டி உதைக்கிறேன் என்ற பெயரில் வன்முறையை நிகழ்த்துகிறார் சிலர் அவர் மீது விமர்சனத்தை வைப்பதுண்டு. ஆனால் அப்படி செய்தது தவறு என்றால் அவரது காமெடியை மக்கள் ரசித்திருக்கமாட்டார்கள். மக்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் அவர் திரையில் கொண்டு வந்தார் என அவரது ரசிகர்கள் கூறுவர்.
யாராக இருந்தாலும் கலாய்தான்: கவுண்டமணி திரையில் மட்டுமில்லை நேரிலுமே யார் என்னவென்று பார்க்காமல் தனது கவுண்ட்டர்களால் அதகளம் செய்துவிடுவார். ’ஏன் ப்பா எல்லோரும் நடிக்க வந்துட்டா யார்தான் படம் பார்க்குறது’ என்று சந்தானத்திடம் ஒரு முறை கவுண்ட்டர் அடித்திருக்கிறார் கவுண்டமணி. அதேபோல், ’நாய்க்கு என்ன பெயர் வைப்பது அதுக்கு பேர் நாய்தான்’, நடிகர் சங்க பெயர் பற்றிய ஒரு கேள்விக்கு ’நடிகர் சங்கம் என்று வையுங்கள்’ என்றது என அவரது ஆஃப் கேமரா கவுண்ட்டர்களும் ரகளையாக இருப்பவை.

ஓபன் டாக்: அதேபோல் கவுண்டமணி எவ்வளவுக்கு எவ்வளவு நகைச்சுவையாக பேசுகிறாரோ அந்த அளவுக்கு ஓபனாகவும் பேசக்கூடியவர். யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைக்கக்கூடியவர். நக்மாவுடன் நான் பாடலுக்கு நடனம் ஆடியே தீர வேண்டும் என்று முடிவு எடுத்து அதை சாதித்தும் காட்டியவர்.
சம்பளம்: கவுண்டமணியின் காமெடிகளில் நாட்டாமை படத்தின் காமெடிக்கு தனி இடம் உண்டு. அவரும், செந்திலும் சேர்ந்து அதகளம் செய்திருப்பார்கள். சூழல் இப்படி இருக்க அந்தப் படத்துக்கு கவுண்டமணி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாராம். படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சரத்குமார் ஆகியோரும் அதே சம்பளத்தைத்தான் வாங்கினார்களாம். இதனை கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











