அய்யோ கார் எல்லாம் வேண்டாம்.. கொட்டும் மழையில் ஸ்கூட்டரில் சென்ற ரஜினி.. ஏன் தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த் இந்தியாவின் மூத்த நடிகர்களில் ஒருவர். கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான ஜெயிலர் படம் வெற்றியையும், கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படம் தோல்வியையும் சந்தித்தன. தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் பேருந்து நடத்துநராக இருந்து தற்போது இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மாறி நிற்கிறார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியானது. அதில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. அதற்கு முன்னதாக நடித்த ஜெயிலர் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

வேட்டையன்: தற்போது அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு, 'மீசை வைத்த குழந்தையப்பா' என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதற்கேற்றபடி குழந்தைபோல் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி. அந்தப் படத்தை முடித்துவிட்டு ஒன்று மாரி செல்வராஜ் இயக்கத்திலோ அல்லது தனது இரண்டாவது மகள் இயக்கத்திலோ நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
பக்குவப்பட்ட ரஜினிகாந்த்: ரஜினி இப்போது பக்குவப்பட்டவராக காட்சியளிக்கிறார். தான் வளர்ந்துவந்த காலத்தில் ரொம்பவே முரட்டுத்தனமானவர் என்ற ஒரு பேச்சு உண்டு. அதேபோல் அப்போதிலிருந்தே மிகவும் எளிமையாகத்தான் அவர் இருப்பார் என்றும் சொல்வார்கள். இந்தச் சூழலில் ரஜினிகாந்த்தின் எளிமையை நிரூபிக்கும் விதமாக இன்னொரு விஷயம் ஒன்றும் தெரியவந்திருக்கிறது.
முரட்டுக்காளை: அதாவது ரஜினிகாந்த்தை வைத்து ஏவிஎம் நிறுவனம் முரட்டுக்காளை படத்தை தயாரித்தது. ஆனால் அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க தாமதமானதால் வேறு ஒரு படத்தை உடனடியாக தயாரித்துவிட்டதாம். அந்தப் படத்தை தயாரித்துவிட்டு முரட்டுக்காளையை தொடங்கலாம் என்று எண்ணி, ரஜினியின் கால்ஷீட் தொடர்பாக பேச அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு வரும்படி புரொடக்ஷன் மேனஜரை அனுப்பினாராம் ஏவிஎம் சரவணன். அந்த மேனேஜரும் விஷயத்தை சொல்லியிருக்கிறார்.
உடனே ரஜினியோ, அவர் என்னை வந்து சந்திக்க வேண்டாம். நானே வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த மேனேஜரோ நான் ஸ்கூட்டரில்தான் வந்தேன். நான் அங்கு போன பிறகு கார் அனுப்புகிறேன் என்று சொன்னாராம். அந்த சமயத்தில் மழையும் பெய்துகொண்டிருந்திருக்கிறது. ஆனால் ரஜினியோ, அதெல்லாம் வேண்டாம் உங்களுடன் ஸ்கூட்டரிலேயே வருகிறேன் என்று சொல்லி மழையில் சென்றாராம் சரவணனை பார்க்க. இதனை ஏவிஎம் அருணா குகன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











