சினிமாவுக்கு இப்படித்தான் வந்தேன்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிளாஷ்பேக் தெரியுமா?
சென்னை: இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம், செவாலியே என ரசிகர்களால் போற்றப்படுபவர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி யார் நடிக்க வந்தாலும் அவர்களின் ஆதர்ச ஹீரோவாக இருப்பவர் சிவாஜி கணேசன் மட்டுமே.
கோலிவுட்டின் முகத்தை மாற்றிய படம் பராசக்தி. கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய அந்தப் படத்தின் மூலம்தான் சிவாஜி கணேசன் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படத்தின் சிவாஜியை தவிர வேறு யார் அறிமுகமாகியிருந்தாலும் அதில் உள்ள வெயிட்டேஜை தாங்கியிருப்பார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் அனல் பறந்த கருணாநிதியின் வசனத்தை அடுத்தக்கட்டத்துக்கு சிவாஜி மட்டுமே எடுத்து சென்றார். முதல் படத்திலேயே அப்படி காட்சிகளும், வசனங்களும் அமைவது வரம். அது சிவாஜிக்கு கைகூடியது.

சிவாஜிதான் அடையாளம்: மன்னர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள பலருக்கும் ஆர்வம் இருப்பது உண்டு. ஆனால் யாரும் நேரில் பார்த்ததில்லை. சினிமாதான் அவர்களை அடையாளப்படுத்தியிருக்கிறது. அப்படி பலர் மன்னர்களாக நடித்தாலும் சிவாஜிதான் மன்னர்களுக்கு அடையாளமாக இருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் என யாரை நினைத்தாலும் சிவாஜிதான் ரசிகர்கள் கண் முன்பு வந்து செல்வார்கள்.
கட்டுப்படுத்திய மகேந்திரன்: சிவாஜி போல் ஒரு நடிகர் இனி எங்குமே கிடைக்கமாட்டார். அது பெரும்பாலும் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்வார் என்ற விமர்சனமும் எழுந்தது உண்டு. அதற்கு இயக்குநர் மகேந்திரன் இப்படி பதில் சொன்னார், ""சிவாஜியை ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்கள். நான் அப்படி சொல்லமாட்டேன் சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஏற்ற கதையை இதுவரை யாருமே எழுதியதில்லை. "".
தங்கப்பதக்கம் படத்தின் கதையும், வசனமும் மகேந்திரனுடையது. அதில் இறந்து கிடக்கும் தனது மனைவியை சிவாஜி கணேசன் பார்க்க செல்லும்போதும், பார்த்த பின்பு பேசும் வசனத்திலும் ஓவர் ஆக்டிங் சிவாஜி தெரியமாட்டார். எதார்த்தமான நடிப்பு கொண்ட சிவாஜியே தெரிவார். ஆக மகேந்திரன் சொன்னதுபோல், சிவாஜி வேண்டுமென்றே ஓவர் ஆக்டிங் செய்யவில்லை. சாதாரண சீனை தனது நடிப்பால் மெருகேற்ற நினைத்து செய்த நடிப்பைத்தான் இங்கு பலர் ஓவர் ஆக்டிங் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்: அதற்கு உதாரணமாக சிவாஜி கணேசன் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிய பின்பு அவரது நடிப்பை பார்த்தால் புரியும். படையப்பா, தேவர் மகன், ஒன்ஸ்மோர், பூப்பறிக்க வருகிறோம் என அவர் குணச்சித்திர நடிகராக தோன்றிய படங்களில் ஒரு சீனில்கூட மிகை நடிப்பு இருக்காது. அதுதான் ஒரிஜினல் சிவாஜி கணேசன். அவர் விரும்பியதையும் அதைத்தான் என்பதை எளிதாக உணர்ந்துகொள்ளலாம்.
சிவாஜி பேட்டி: இந்நிலையில் சிவாஜி கணேசனின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நாடக சபா என்ற நாடக கம்பெனியை ரத்னம் நடத்தினார். அதில் பாவலர் பாலசுப்ரமணியம் எழுதிய பராசக்தி என்கிற நாடகத்தை போட்டனர். அதனை பி.ஏ.பெருமாளும், ஏவிஎம்மும் சென்று பார்த்தார்கள். அப்போது அது அவர்களுக்கு பிடித்துப்போனதால் சினிமாவாக எடுக்க நாடகத்தின் உரிமத்தை வாங்கினார்கள்.
யார் ஹீரோ: பிறகு அந்த படத்தில் யாரை ஹீரோவாக நடிக்கவைக்கலாம் என்கிற பிரச்னை வந்தது. பெருமாள் என்னுடைய பெயரைசொல்ல; நான் சக்தி நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அங்கிருந்து அழைப்பு வந்தது. பின்னர் டெஸ்ட் ஷூட் நடத்தினார்கள். பிறகு ஊருக்கு சென்றுவிட்டேன். மீண்டும் என்னை அழைத்து சினிமாவில் நடிப்பதற்காக ஐந்து வருடங்களுக்கான ஒப்பந்தத்தை போட்டார். அப்போது என்னுடைய சம்பளம் 250 ரூபாய்" என்றார்.


Click it and Unblock the Notifications











