அண்ணனின் மரணம்.. உடைந்து போன குடும்பம்.. சுவலட்சுமியின் மறுபக்கம் தெரியுமா?.. இவ்வளவு கஷ்டமா?
சென்னை: நடிகை சுவலட்சுமி 90களில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்தவர். ஆசை, லவ் டுடே, ஹவுஸ்ஃபுல், தினந்தோறும் என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கிளாமர் இல்லாமல் ஹோம்லியாகவே தனது கரியரில் நடித்து அசத்திய சுவலட்சுமி திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இந்தச் சூழலில் சுவலட்சுமியின் வாழ்க்கையில் நடந்த சில துயரமான சம்பவங்கள் இப்போது தெரியவந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இயக்குநர் சத்யஜித் ரே இயக்கத்தில் உருவான உத்தரோன் படத்தில் அறிமுகமானவர் சுவலட்சுமி. மேற்கு வங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தீவிர ரசிகர்கள். இதன் காரணமாகவே அவருக்கு சுவலட்சுமி என்று பெயர் வைத்தார்கள். பத்திரிகையாளராக வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர்; ஒரு நடன போட்டியின்போது சத்யஜித் ரேவின் கண்களில் பட்டார். உடனடியாக தன்னை சந்திக்க கூறினார் ரே.

முதல் படம்: அதன்படி சத்யஜித் ரேவை சந்தித்த சுவலட்சுமி முதல் சந்திப்பிலேயே ஈர்த்துவிட்டார். மேலும் முதல் படத்திலேயே கைம்பெண் ரோலில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே அப்படிப்பட்ட ரோலினை ஏற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் அவர். இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோதே சத்யஜித் ரே உயிரிழந்துவிட; அவரது மகன் படத்தை இயக்கி முடித்தார். இருந்தாலும் சத்யஜித் ரேவின் அறிமுகம் என்பதே பெரிய அடையாளமாக சுவலட்சுமிக்கு மாறியது.
தமிழில் சுவலட்சுமி: இதனையடுத்து இயக்குநர் வசந்த் இயக்கிய ஆசை படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். வேற்று மொழி படம் என்பதால் தமிழில் நடிக்க முதலில் யோசித்த சுவலட்சுமியை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தது சத்யஜித்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து ஒத்துக்கொண்ட சுவலட்சுமி கிளாமர் ரோலில் நடிக்க முடியாது என்று கண்டிஷன் போட்டே நடித்தார். அந்தப் படத்தில் சுவலட்சுமியின் நடிப்பு பல பரிமாணங்களை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வரிசையான வாய்ப்புகள்: ஆசை படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு சுவலட்சுமிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜய்யுடன் லவ் டுடே, விக்ரமுடன் ஹவுஸ்ஃபுல், முரளியுடன் தினந்தோறும், சத்யராஜுடன் ஆண்டான் அடிமை என ஏராளமான படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வித்தியாசத்தை காண்பித்தார். மேலும் கிளாமர் ரோலில் நடிக்காமல் ஒரு நடிகையால் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் வெல்ல முடியும் என்று நிரூபித்துக்காட்டியவரும் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையில் நடந்த சோகம்: அவர் திருமணமாகி இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தனது கணவரின் பிஸ்னெஸ்ஸையும் கவனித்துவருகிறா.ர் இந்நிலையில் சுவலட்சுமியின் வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது தனக்கு பத்திரிகையாளராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த சுவலட்சுமியிடம், அவரது சகோதரர் வக்கீலுக்கு படிக்க சொல்லியிருக்கிறார். இதன் காரணமாக அவர் சட்ட படிப்பையும் முடித்துவிட்டார். அதேசமயம் அவரது அண்ணன் ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டார். அண்ணன் மீது பெரும் பாசம் வைத்திருந்த சுவலட்சுமியால் அந்த மரணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லையாம். அந்த சமயத்தில்தான் சினிமாவில் நடித்தால் மனநிலை மாறும் என்ற நோக்கத்தில்தான் முழுக்க முழுக்க நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தாராம் அவர்.


Click it and Unblock the Notifications











