டி.ராஜேந்தர் தாடிக்கு பின்னால் இப்படி ஒரு வேதனையா?.. பலரும் அறிந்திடாத விஷயம்.. யப்பா வெறித்தனம்
சென்னை: டி.ராஜேந்தர் கோலிவுட்டில் பிரபலமான இயக்குநர், நடிகர். சிம்புவின் தந்தையும்கூட. சினிமாவில் ஒரு துறையில் வெற்றி காண்பதே கஷ்டம். ஆனால் டி.ராஜேந்தரோ நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என அனைத்து துறைகளிலும் புகுந்து விளையாடியவர். இவரது எதுகை மோனை பேச்சு பலரை ரசிக்க வைத்திருக்கிறது. அவர் இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் அவர் குறித்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பார்க்கலாம்.
ஒருதலை ராகம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான டி.ராஜேந்தர் எந்த பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையை கொண்டு தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். வெறும் இயக்கம் மட்டுமின்றி வசனம் எழுதுவது, கேமரா, இசையமைப்பது என எந்த ஜானரிலும் கில்லியாக இருப்பவர். குறிப்பாக இளையராஜா தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது ஒரு படத்துக்கூட அவரிடம் செல்லாமல் தானே இசையமைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் டி.ராஜேந்தர்.

சிம்புவை செதுக்கிய உளி: தன்னை போலவே தன்னுடைய மகனையும் உருவாக்க நினைத்தார். அதன் காரணமாக சிறு வயதிலிருந்தே சிம்புவை கேமரா முன்பு நிறுத்தி அதகளம் செய்தவர். சிம்புவின் வளர்ச்சியில் ஒவ்வொரு நொடியிலும் ராஜேந்தரின் பங்கு இருக்கிறது என்பதுதான் உண்மை. அதன் காரணமாகத்தான் சிம்புவாக சிறு வயதிலேயே நடிக்க முடிந்தது, இளம் வயதிலேயே படத்தை இயக்க முடிந்தது, இசையமைக்க முடிந்தது, பாடல் எழுந்த முடிந்தது
என்ன ஆனாலும் டி.ஆர்தான்: சினிமாவின் காலகட்டம் மாறும்போது பலரும் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒதுங்கிக்கொள்வார்கள். ஆனால் டி.ராஜேந்தரோ அப்படி இல்லை. தற்போதைய தலைமுறை சினிமா மாறிக்கொண்டிருந்த ஆரம்பக்கட்டத்தில் வீராசாமி என்ற படத்தை இயக்கினார். ஏன் சமீபத்தில்கூட சந்தானத்திடம் ஒரு கதை யோசித்திருக்கிறேன் நீ நடிகர் சந்தானமாகவே நடி என அவர் சொன்னதாக சந்தானமே தெரிவித்திருந்தார்.
படு கஷ்டம்: டி.ராஜேந்தர் தனது ஆரம்பகாலத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டவர். அதாவது வறுமையின் கோரப்பிடியிலிருந்துதான் அவர் வளர்ந்து எழுந்தார். தனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் திரைப்படம் பார்க்க டிக்கெட் எடுப்பதற்கு பணம் இல்லாமல், அந்தத் தியேட்டருக்கு வெளியே இருக்கும் சாக்கடை ஓரமாக நின்றுகொண்டு வசனங்களையும் பாடல்களையும் கேட்டு வளர்ந்தவர் அவர். அதேபோல் தனது முதல் படமான ஒருதலை ராகம் படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிமின் வீட்டு தோட்ட வேலைகளையும் செய்தவர்.
தாடிக்கு பின் இருக்கும் கதை: அப்படி செய்து தயாரிப்பாளரை பிடித்து படத்தை இயக்கி டி.ஆருக்கு முதல் படமே பேரதிர்ச்சி. ஆம் மிகப்பெரிய ஹிட்டடித்த அந்தப் படத்தில் ராஜேந்தரின் பெயர் இடம்பெறவில்லை. இருந்தாலும் மனம் தளராத அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தன்னை ஒரு ஆளுமையாக வளர்த்துக்கொண்டார். நிலைமை இப்படி இருக்க டி.ஆரின் தாடிக்கு பின் இருக்கும் கதையை பார்க்கலாம்.
அதாவது அவரது தாடிக்கு காரணம் காதல் தோல்வி என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால் இன்னொரு கதை இருக்கிறதாம். அதாவது அவர் கல்லூரிக்கு சேரும்போது தனது தாடியை ஷேவ் செய்துகொள்ள முடிவெடுத்தாராம். ஆனால் அவரது உறவினர் ஒருவர், 'இவன் மூஞ்சிக்கெல்லாம் ஷேவிங் ஒரு கேடா.. சும்மா இருந்தா காசும், பிளேடும் மிஞ்சும்' என்று சொன்னாராம். இதனால் ரொம்பவே பாதிக்கப்பட்ட டி.ஆர் வாழ்க்கையில் வென்ற பிறகுதான் தாடியை ஷேவ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாராம். சினிமாவில் அவர் நினைத்தபடியே வென்ற பிறகு; நாம் வெல்லும்போது இந்த தாடி இருந்ததே பிறகு ஏன் எடுக்க வேண்டும் என்று அப்படியே விட்டுவிட்டாராம்.. பிறந்தநாள் வாழ்த்துகள் டி.ராஜேந்தர்..


Click it and Unblock the Notifications











