Vijayakanth - மதத்தை உடைக்க விஜயகாந்த் செய்ய நினைத்த சம்பவம்.. மகனுக்கு வைக்க ஆசைப்பட்ட பெயர்
சென்னை: கேப்டன், புரட்சி கலைஞர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். பல உதவிகளை செய்திருக்கும் அவர் நடிகராக மட்டுமின்றி தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் உடல்நலக்குறைவால் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இந்தச் சூழலில் தனது மகனுக்கு அவர் வைக்க ஆசைப்பட்ட பெயர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் தமிழ்நாட்டில் பெரும் ஆளுமையாக வலம் வந்தவர். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கி முழு ஓய்வில் இருந்தார். அந்த சமயத்தில் ரசிகர்களையும், தொண்டர்களையும் சந்திப்பதை மட்டுமே வழக்கமாக வைத்திருந்தார் அவர். இப்படிப்பட்ட சூழலில் திடீரென அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கேப்டன் விஜயகாந்த்: கோலிவுட்டில் விஜயகாந்த்தின் படங்கள் அனைத்தும் வரிசையாக ஹிட்டடித்தவை. அதன் காரணமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என்ற வரிசை தமிழ் சினிமாவில் உருவானது. சொல்லப்போனால் கிராமத்து பகுதிகளில் ரஜினி, கமல் ஹாசனைவிடவும் அதிக மவுசு விஜயகாந்த்துக்கு இருந்தது என்பதுதான் யதார்த்தமான உண்மை.
நடிகர் சங்க தலைவர்: நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பேற்று அதனையும் திறம்பட கையாண்டார். கடனில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை அவர்தான் அதிலிருந்து மீட்டார். மேலும் அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர், மலேசியா சென்று கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினார் அவர். அதுமாதிரி இன்றுவரை ஒன்று நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த்தின் கரங்கள் ஏகப்பட்ட பேருக்கு உதவியிருக்கின்றன அந்த உதவியின் காரணமாக நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கும் சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை அதிகம் பேர் இருக்கிறார்கள். அந்த செலிபிரிட்டிகளில் ஒருவர்தான் விஜய். விஜய் மட்டுமின்றி சூர்யா, ஷாம் என பலருக்கும் பிரச்னை வந்தபோது முதல் ஆளாக களத்தில் இறங்கி தன்னால் முடிந்த உதவியை செய்துகொடுத்தவர். ஹீரோக்களை மட்டும் கவனிக்காமல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்காகவும் அவர் பல உதவிகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உணர்வு: அதேபோல் தமிழ், தமிழர்கள் என்ற உணர்வு அதிகம் விஜயகாந்த்துக்கு உண்டு. முக்கியமாக ஈழ தமிழர்களுக்காக தமிழ் நடிகர்கள் சார்பில் முதன்முதலாக உண்ணாவிரதம் இருந்தவரும் அவரே. மேலும் பிரபாகரன் மேல் இருக்கும் அன்பால் தனது மகன்களில் ஒரு மகனுக்கு பிரபாகரன் என்றும் பெயர் வைத்தவர். இந்தச் சூழலில் தனது இன்னொரு மகனான சண்முகபாண்டியனுக்கு முதலில் விஜயகாந்த் வேறு பெயர் வைக்க ஆசைப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் என்பது அனைவரும் அறிந்தது. விஜயகாந்த்தை பார்த்து பார்த்து செதுக்கியவரும் இப்ராஹிம்தான். இந்தச் சூழலில் சண்முக பாண்டியன் பிறந்தபோது அவருக்கு சௌகத் அலி என்று பெயர் வைப்பேன் அல்லது கிறிஸ்தவ மத பெயரை வைப்பேன். எனக்கு மதத்தின் மீது நம்பிக்கை எல்லாம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அதற்கு உடன் இருந்தவர்களும், அவருக்கு நெருக்கமானவர்களும், இப்படி பெயர் வைத்தால் மகன் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அவரது பெயரே பிரச்னையாக மாறும் என்று சொல்ல; அதை புரிந்துகொண்ட விஜயகாந்த் சண்முக பாண்டியன் என்று பெயர் வைத்திருக்கிறார். இதனை சண்முக பாண்டியனே ஒரு பேட்டியில் தெரிவித்துக்கொண்டார்.


Click it and Unblock the Notifications











