கமல் ஹாசனுடன் செல்ஃபி எடுக்க உதவி கேட்ட சிவகார்த்திகேயன்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவர். அவர் கடைசியாக நடித்த அமரன் திரைப்படம் அவருக்கு அந்த இடத்தை பெற்று கொடுத்திருக்கிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அந்தப் படம் எஸ்கேவின் கரியரில் ஒரு மைல் கல்லாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் சிவகார்த்திகேயன் குறித்து பெரும்பாலும் யாரும் அறியாத சம்பவம் குறித்து பார்க்கலாம்.
சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோ ஒன்றின் மூலம் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். அதனையடுத்து ரியாலிட்டி ஷோ டெலிகாஸ்ட் ஆன சேனலிலேயே தொகுப்பாளராக பணியாற்றினார். தான் தொகுத்து வழங்கிய ஒவ்வொரு நிகழ்ச்சியையும் செம ஃபன்னாக கொண்டு சென்றார் அவர். இதன் காரணமாக தமிழ்நாட்டு மக்களின் மனதில் மிக எளிதாக இடம்பிடித்தார். அதனையடுத்து விருது வழங்கும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். அப்போது பல பிரபலங்களின் கவனம் அவர் மீது திரும்பியது. அப்படி தனுஷ் முதன்முதலாக சினிமாவுக்குள் அழைத்து வந்தார்.

ஹீரோ: 3 படத்தில் சிறிய ரோலில் நடித்த அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரீனா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனையடுத்து மனம் கொத்தி பறவை உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் சூப்பர் ஹிட்டை பெற்று கொடுத்தது. தொடர்ந்து நடித்த ரஜினிமுருகன், எதிர்நீச்சல் ஆகிய படங்களும் அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. படிப்படியாக வளர்ந்துவந்த அவர் ஒருகட்டத்தில் டாப் 10 ஹீரோக்கள் என்ற லிஸ்ட்டுக்குள் வந்தார்.
100 கோடி க்ளப்: இப்படிப்பட்ட சூழலில்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். படமும் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்தது. அதனையடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த டான் திரைப்படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்தது. தொடர்ந்து இரண்டு படங்கள் பெரிய தொகையை வசூலித்ததை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
300 கோடி ரூபாய் க்ளப்: இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு நடித்த பிரின்ஸ் தோல்வியடைந்தாலும்; அடுத்ததாக வெளியான மாவீரன், அயலான் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டடித்தன. சூழல் இப்படி இருக்க கடைசியாக அவரது நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியானது. கமல் ஹாசன் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். அந்தத் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 300 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இந்தச் சூழலில் கமலுடன் செல்ஃபி எடுக்க பிரபலத்திடம் உதவி கேட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது பிரபல காமெடி நடிகர் எஸ்.வி.சேகரின் மகன் 2007ஆம் ஆண்டு ஒரு படம் நடித்தார். அந்தப் படம் சம்பந்தமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிவகார்த்திகேயனிடம் கேட்டார்களாம். அந்த விழாவுக்கு கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக வந்தாராம். இதனை அறிந்துகொண்ட எஸ்கேவோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன் ஆனால் கமலுடன் ஒரு செல்ஃபி எடுக்க உதவி செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போட்டாராம். அதற்கு எஸ்வி சேகரும் ஒத்துக்கொண்டாராம். அப்படி கண்டிஷன் போட்ட சிவகார்த்திகேயன் இன்று கமலின் தயாரிப்பிலே நடித்துவிட்டார். இதனை எஸ்வி சேகர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











