உனக்கு ஏன் இந்த கொடூர புத்தி?.. மகளை கொல்வியா? பாலாவை பயங்கரமாக திட்டிய பாலுமகேந்திரா
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் இயக்கிய பல படங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் வணங்கான் திரைப்படத்தை இயக்கினார். படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக அவர் எந்தப் படமும் இயக்குவதற்கு இதுவரை கமிட்டானதாக தெரியவில்லை.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக சியான் விக்ரமுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம்தான் பாலாவுக்கும் சரி விக்ரமுக்கும் நல்ல வாழ்க்கைக்கான கதவை திறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நந்தா: சேது படத்தை குறிஞ்சி மலர் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் விமர்சகர்களும், ரசிகர்களும். ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. அதன்படி அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட்டாகி காலங்கடந்து பேசப்படும் படைப்பாக மாறி நிற்கிறது. சூர்யாவுக்கும் நல்ல பெயரை அந்தப் படம்தான் பெற்றுக்கொடுத்தது.

என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்: முதல் இரண்டு படங்களிலேயே முக்கியமான இயக்குநர் என்று பாலா பெயர் எடுத்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களும் மிகச்சிறந்த படைப்பாக இருக்கின்றனர். அதிலும் பாலா சொன்னால் நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைதான் சினிமாவில் இருந்தது. அவரது இயக்கத்தில் ஓரிரு காட்சிகளிலாவது தோன்றிட வேண்டும் என நடிகர்கள் தவம் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
நொந்த பாலா: பாலாவின் திரை வாழ்க்கை இப்போது ஒரு ஹிட்டுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பெர்சனல் வாழ்க்கையும் பிரச்னையிலேயே இருக்கிறது. தனது மனைவி மலரை விவாகரத்து செய்த அவருக்கு; இன்னொரு இடியாக இறங்கியது என்றால் வர்மா திரைப்படம். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்கான அதில்தான் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமானார். ஆனால் அந்தப் படத்தை பார்த்த தயாரிப்பு தரப்பும், விக்ரமும் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய ஒத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து அந்தப் படத்தை பாலா தனியாக ரிலீஸ் செய்தார். ஆனால் படம் கவரவில்லை.
வணங்கான்: சூழல் இப்படி இருக்க கடைசியாக அவர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கினார். பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் படத்தில் மாற்று திறனாளிகள் குளிக்கும் காட்சியை அவர் படமாக்கிய விதம் மிகப்பெரிய விமர்சனத்தை உண்டாக்கியது. இந்நிலையில் பாலாவை அவரது குருநாதர் பாலுமகேந்திரா திட்டிய சம்பவம் தெரிய வந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது தான் இயக்கிய முதல் படமான சேது படத்தை பாலுமகேந்திராவுக்கு திரையிட்டு காண்பித்தாராம் பாலா. அதனைப் பார்த்துவிட்டு பாலாவை பாராட்டிய அவர் அலுவலகத்துக்கு வந்து சந்திக்க சொன்னாராம். இவரும் சென்றபோது பாலுமகேந்திரா, 'ஏன் பாலா ஒரு அப்பாவி பெண் படிப்புக்காக கல்லூரி செல்கிறாள். அங்கே ஒரு ரௌடி மிரட்டி காதலிக்க வைக்கிறான். பிறகு அந்த ரௌடிக்கு விபத்து ஏற்படுகிறது. அதன் காரணமாக அந்த நாயகன், நாயகி, நாயகியுடைய முறை பையன் என பலரது வாழ்க்கை அழிந்து போகிறது. கடைசியில் அந்த பெண்ணை நீ கொன்றும்விடுகிறாய். நீ உருவாக்கிய நாயகி என்பவள் உன்னுடைய மகள் மாதிரி. உன்னுடைய மகளை நீயே கொலை செய்வாயா?.. ஏன் உனக்கு இவ்வளவு குரூர புத்தி' என்று சரமாரியாக கேட்டாராம்.


Click it and Unblock the Notifications











