ஹலோ பி.சி.ஸ்ரீராம் நான் சொல்றத மட்டும் செய்யுங்க.. லெஜண்ட் கேமராமேனை வம்பிழுத்த வடிவேலு?
சென்னை: வைகை புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் வடிவேலு இடையில் சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதனையடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் வடிவேலு கடைசியாக கேங்கர்ஸ் ப்டத்தில் நடித்தார். அடுத்ததாக மாரீசன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவருக்கும் பி.சி.ஸ்ரீராமுக்கும் இடையே மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. அவரது காமெடி இல்லாமல் ஒருவரால் ஒரு நாளை கடந்துவிட முடியாது. அந்த அளவுக்கு அனைத்து நாட்களிலும், அனைவரிடமும் வியாபித்திருக்கிறார். ராஜ்கிரணால் சினிமாவுக்கு வந்தவர் இன்று இருக்கும் உயரம் வேறு. அதற்கு அவரது திறமை மிக முக்கிய காரணங்களில் ஒன்று. நடிக்க வந்த ஆரம்பத்தில் எந்தவித ஈகோவும் இல்லாமல் கவுண்டமணி, செந்தில், விவேக் ஆகியோருடன் இணைந்து நடித்தார். அதில் வடிவேலுவின் உடல்மொழி மட்டும் தனியாக தெரிந்தது.
டாப் நடிகரான வடிவேலு: நகைச்சுவை மட்டுமின்றி அப்போதே கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் தன்னை வலுப்படுத்திக்கொண்டார். அப்படி அவர் நடித்த சில படங்கள் மிகப்பெரிய பெயரை பெற்றன. அதேபோல் தன்னுடைய நகைச்சுவையில் எந்தவிதமான உருவ கேலியும் செய்யாமல் தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு நடித்தது அவரை மேலும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசென்றது. அதேபோல் அவரது டயலாக் டெலிவிரியும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவை சுற்றிய பஞ்சாயத்து: சூழல் இப்படி இருக்க விஜயகாந்த்துக்கும் தனக்கும் இருந்த பிரச்னையை அவரே பெரிதாக்கிக்கொண்டார். குறிப்பாக அவரை எதிர்க்கிறேன் என்பதற்காக அரசியல் மேடை ஏறிய அவர்; தனது கிராஃபை உச்சத்திலிருந்து அதள பாதாளத்தில் விழ வைத்தார். மேலும் அவரை வைத்து படம் எடுக்க பலரும் யோசித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்ட அவர் ஒரு கட்டத்தில் முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டார். இருந்தாலும் வடிவேலுவின் காமெடிகள்தான் டிவிக்கள், மொபைல்கள் என அனைத்திலுமே இருந்தது.
ரீ என்ட்ரி: ஒருவழியாக அவரது பஞ்சாயத்துக்கள் அனைத்துமே முடித்து வைக்கப்பட்டன. அதனையடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்த அவருக்கு அந்தப் படம் சரியாக கைக்கொடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் வேறு மாதிரியான வடிவேலுவை ரசிகர்களுக்கு பரிசளித்தது. அதனைத் தொடர்ந்து கேங்கர்ஸ் படத்தில் நடித்த அவர்; இப்போது மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
பி.சியுடன் மோதல்?: இந்நிலையில் தேவர் மகன் படத்தில் நடித்தபோதும் அதற்கு பிறகும் நடித்த சம்பவம் குறித்தும் தெரியவந்திருக்கிறது. அதாவது தேவர் மகன் படத்துக்கு பி.சி. ஸ்ரீராம்தான் கேமரா மேன். அதில் வடிவேலு முக்கியமான பாத்திரத்தை ஏற்றிருந்தார். அப்படத்துடைய ஷூட்டிங்கின்போது, ஷாட் வைக்கும்போது கேமராவுக்கு குறுக்கே வடிவேலு வந்துகொண்டே இருந்தாராம். இதனால் டென்ஷனான பி.சி.ஸ்ரீராம், 'யார் இந்த காட்டு பய. குறுக்க குறுக்க வந்துகொண்டே இருக்கிறார்' என கடுமையாக திட்டிவிட்டாராம்.
நான் சொல்றதை செய்யுங்க: அதனைத் தொடர்ந்து காலங்களும், காட்சிகளும் மாற வடிவேலு பெரிய நட்சத்திரமாக மாறிவிட்டார். அப்போதெல்லாம் தான் நடிக்கும் காமெடி காட்சிகளை தானே இயக்குவாராம் வடிவேலு. அப்படி ஒருமுறை வடிவேலு நடித்த படத்தில் பி.சிதான் கேமரா மேனாம். அப்போது பி.சி.ஸ்ரீராமிடம் வந்த வடிவேலு, 'ஹலோ ஸ்ரீராம் சார். நான் சொல்றதையும் சொல்றபடியும் மட்டும் எடுங்க. வேறு எதையும் எக்ஸ்ட்ராவாக எடுக்க வேண்டாம்' என்று கூறினாராம். இதனை ஒரு பத்திரிகையாளர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











