Vijayakanth - நோ ஸ்டார் ஹோட்டல், நோ பார்ட்டி.. விஜயகாந்த் செய்யாத 5 விஷயங்கள் இவைதான்
சென்னை: நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதனையடுத்து ஏராளமான மக்கள் மற்றும் செலிபிரிட்டிகள் அவரது நினைவிடத்துக்கு சென்று தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர். இந்த சூழலில் அவர் செய்யவேகூடாது என்று விஜயகாந்த் ஃபாலோ செய்த ஐந்து விஷயங்களை பார்க்கலாம்.
விஜயகாந்த் ஏராளமான உதவிகளை செய்தவர். அவரால் சாமானியர்கள் முதல் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், சூர்யாவை உதவி பெற்றிருக்கிறார்கள். இதனாலேயே அனைவரது மனதிலும் அவருக்கென்று தனி இடம் இருக்கிறது. விஜயகாந்த் என்றாலே கொடுத்த வாக்கை தவறாமல் நிறைவேற்றுவார்; அவரது அலுவலகத்துக்கு சென்றால் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வரலாம் என்ற நிலைதான் இருந்தது. சினிமாவில் தன்னை போல் பிறரும் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டவர் அவர்.

உடல்நலக்குறைவு: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த அவர் எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு ஏற்பட்ட துரோகங்களும், சறுக்கல்களும் விஜயகாந்த்துக்கு மன உளைச்சலை கொடுத்தது. அதோடு உடல்நிலையும் சரியில்லாமல் போனது. அதனையடுத்து சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகி முழு ஓய்வில் இருந்தார்.
உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க கடந்த மாதம் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழ்நாடெங்கிலும் இருந்து அவரது உடலுக்கு நேரில் வந்து லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில் கோடி ரூபாய் கொடுத்தாலும் செய்யவே மாட்டேன் என்று விஜயகாந்த் ஐந்து விஷயங்களை ஃபாலோ செய்ததாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ் படம்தான்: அந்த ஐந்து விஷயங்களில் முதல் விஷயம் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் சரி தமிழ் படங்களை தவிர்த்து வேறு மொழி படங்களில் நடிக்கமாட்டேன் என்ற பாலிசியை வைத்திருந்தார் விஜயகாந்த். அதன்படியே தன்னுடைய கடைசி காலம்வரை இருந்தார். விஜயகாந்த் நடித்த 150 படங்களுமே தமிழ் படங்கள்தான். வேறு மொழி படங்கள் இல்லை.

நோ ப்ளே பாய்: எம்ஜிஆரின் தீவிர ரசிகரான விஜயகாந்த் அவரைப் போலவே உதவி செய்வதிலும் வாழ்ந்து காட்டியவர் என்பது அனைவரும் அறிந்தது. அதேபோல் எம்ஜிஆர் எப்படி ஏழைகளுக்கு கதாநாயகனாக, தோழனாக எப்படி திரையில் தோன்றினாரோ அதுமாதிரி விஜயகாந்த்தும் இருந்தார். முக்கியமாக எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் ப்ளே பாய் ரோலிலோ, நடிகைகளை அவமதிக்கும் வகையிலோ நடிக்க கூடாது என்று கொள்கை வைத்து அதன்படி வாழ்ந்தார்.
நோ விளம்பர படம்: நடிகர்கள் புகழ் அடைந்துவிட்டால் அவர்கள் விளம்பர படங்களில் தோன்றி அதன் மூலமும் பணம் சம்பாதிப்பது காலங்காலமாக நடந்துவரும் ஒன்றுதான். ஆனால் அதில் விதி விலக்கானவர் விஜயகாந்த். சினிமாவில் பீக்கில் இருந்தபோதும் சரி; சினிமாவிலிருந்து ஒதுங்கிய பிறகும் சரி எந்த ஒரு விளம்பர படங்களிலும் நடிக்காதவர் விஜயகாந்த்.
சம்பளத்துக்கு ஆசைப்படாத விஜயகாந்த்: சினிமா என்றாலே கோடிகள் புரளும் இடம் என்பது அனைவரும் அறிந்தது. அந்தத் துறையில் இருக்கும் பெரும்பாலானோர் பணத்துக்காக எதுவும் செய்யும் இடத்தில்தான் இருப்பார்கள். ஆனால் விஜயகாந்த்தோ தான் நடிக்கும் படங்களில் சம்பளம் கேட்டு கறார் காட்டாதவர். அதேபோல் கெஸ்ட் ரோலில் நடித்தால்கூட இயக்குநர் கொடுக்கும் சம்பளத்தை எதுவும் சொல்லாமல் வாங்கி செல்வார். சில சமயங்களில் வாங்காமலும்சென்றிருக்கிறார்.
நோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்: பிரபலம் ஆகிவிட்டாலே அவர்கள் தங்களது லைஃப் ஸ்டைலையும் தரம் உயர்த்த பார்ப்பார்கள். ஆனால் விஜயகாந்த் அப்படி இல்லை. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று உணவு அருந்தியது கிடையாது, அங்கு நடக்கும் பார்ட்டிக்களுக்கு சென்றதே கிடையாது. அவர் தன்னுடன் இருக்கும் எளியவர்களின் ஸ்டாராக இருந்தார்.


Click it and Unblock the Notifications











